வியாழன், 20 செப்டம்பர், 2018

நம் கை கோர்த்திருந்து கரைந்து போனவர்கள்

ஒரு துயர சம்பவத்தின் வீடியோவை ஏற்கெனவே பலதடவை பார்த்திருந்தபோதும்... மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்று தோன்ற.... பார்க்க ஆரம்பித்தேன்...



சுய சோகங்களை ஒருபுறம் நகர்த்தி வைத்துவிட்டு.. அந்த காணொளியில் நடமாடும் மனிதர்களை கவனித்தேன்.... அடடா.. இதில் உயிரோடு நடமாடும் எத்தனை மனிதர்கள் இப்போது நம்மோடு இல்லை...

அதோ... கீழ வீட்டு ஆறுமுகம் மாமா... அதோ... கருத்தாண்டி வீட்டு அய்யா அண்ணன்... அதோ இந்திரஜித் அத்தான்... அதோ அருணாமூட்டு சங்கர் அத்தான்... அதோ.... என்னை தூக்கி வளர்த்த பாப்பாத்தி அம்மா.... அதோ என் மாமியார்...அதோ உமாபதி.... அதோ.... ஜெகன்னாத காலிங்கராயர்....

இன்னும் நிறைய நிறைய பேர்.... என் வாழ்வில் ஒரு அங்கமாய் நான் அடிக்கடியோ.. தினசரியோ சந்தித்த நபர்கள்... இவர்களை பற்றி நினைக்கும் போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் நிறைய சம்பவ நினைவுகள்...

இவர்கள் எல்லாம் என் வாழ்வின் எதோ ஒரு நிமிடத்தில்... எதோ ஒரு மணியில்.... எதோ ஒரு நாளில் என்னுடன் பயணித்தவர்கள்.... இவர்களை எல்லாம் அந்த தீ தின்று தீர்த்துவிட்டது.... புகைப்படத்தில் மட்டுமே சிரிக்கிறார்கள் இப்போது...

வருடம் ஒரு முறை இதில் சிலருக்கு திவசம் என்ற நினைவுநாள் நினைவுகூறல் நிகழும்... சிலருக்கு அதுவும் சாத்தியமில்லை....

எங்கிருந்து வந்தோம் நாம்...எதை நோக்கி பயணிக்கிறோம் நாம்... என்னவாக போகிறோம்... இந்த பயணப்பாதையில் நம்மோடு சேர்ந்தது எது.. நாம் உதிர்த்தது எது... இப்படி எல்லாம் நிறைய தோன்றினாலும்... லௌதீக வாழ்வில் இயல்பான ஒரு பிரஜையாய் நாமும் கலந்துவிட்டபடியால்... இந்த சிந்தனைகளை அங்கேயே கத்தரித்துவிட்டு..... மீண்டும் அவர்களை பற்றிய நினைவுகளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்த பொழுது...

அந்த காணொளி முடிந்து வெகுநேரம் ஆகி இருந்தது...

மீண்டும் என்றாவது ஒருநாள் அந்த துயர சம்பவ வீடியோவை காண ஆவல் எழும்... அப்போது நம்மிடையே இல்லாமல் போன அந்த இருந்தவர்களின் நினைவுகள் மீண்டும் கிளர்த்தெழும்....

எத்தனையோ இலைகள் சருகுகளாய் உதிர்கிறது.... எத்தனயோ விதைகள் முளைக்கிறது....அதுதானே வாழ்க்கை...

உங்களில் நிறைய பேருக்கும் பிடிபட்டிருக்கும்... ஏனென்றால்... அதுபோல ஒரு துயர சம்பவம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும்... அதேதான்... என் திருமண காணொளி தான் அது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக