சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை இல்லை என்கிறது மத்திய அரசு.... சாதிவாரியான கணக்கெடுப்பை தவிர்ப்பது பின்னாளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக பாதிக்கும் என்கிறார்கள் சமகால மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள்...
இதை அவர்கள் பேசி முடிவெடுக்கட்டும்... ஆனால் சாமான்ய மனிதர்களாக இப்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டை பற்றி நாம் கொஞ்சம் பேசுவோமா....
தமிழகத்தை பொறுத்தவரையில் கல்வி- வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன சாதிகளான தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இன மக்களுக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது... நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்ற முறையில் இதை வரவேற்கிறேன்...
பல நூற்றாண்டுகளாக உயர் வகுப்பு சாதியினரால் கல்வி உரிமை மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தபட்டவர்களுக்க
அதாவது காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்ட அந்த மக்களின் மரபணுக்கள் செயல் திறன் குறைந்த அடுத்த தலைமுறையை உருவாக்கும்.. அத்துடன் அவர்களுக்கு வசதி வாய்ப்புகளும் இருக்காது... ஆகவே தான் அந்த மரபணுக்களை மறு சீரமைப்பு செய்யும் நீண்டகால நோக்கமும், பொருளாதார வசதியின்மையால் அவர்கள் கல்வி பெற முடியாமல் போக கூடாது என்பதற்காக பொருளாதார உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படுகிறது....
மேலோட்டமாக பார்த்தால் இது மிகவும் வரவேற்க தக்கதாய் இருக்கும்... ஆனால் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள், குளறுபடிகளை பற்றி எந்த அரசியல் வாதியும் பேசுவதே இல்லை..
அப்படியானால் அவர்களுக்கு தெரியாத விபரம் நமக்கு தெரிந்து, அதை நாம் பேசப்போகிறோமா???
அப்படி இல்லை.. நாம் பேசப்போகிறோம் என்பது உண்மை.. அவர்களுக்கு தெரியாது என்பது உண்மையில்லை.. அவர்களுக்கு தெரியும்.. ஆனால் பேச மாட்டார்கள்.. ஏனென்றால் அதை பேசப்போனால் "எங்கே நமக்கு கிடைக்கும் சில்லறை ஓட்டுக்களும் சிதறி விடுமோ "என்ற பயம் அவர்களுக்கு....
ஆனால்.. நமக்கு.... ?? நமக்கான உணவு, உடை, இருப்பிட, ஆடம்பர, அத்தியாவசிய தேவைகளுக்கு நாம் தான் உழைக்க வேண்டும் என்று நன்கு தெரியும்.. உழைக்கிறோம்.. அதனால் மற்றவர்களின் தயவு போய் விடுமோ என்ற பயமின்றி நமக்கு தெரிந்ததை தைரியமாக சொல்லலாம்...!!!
ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒருவர் பொறியியலோ- மருத்துவமோ படித்து தேர்ச்சியடைகிறார்... பிறகு அந்த படிப்பின் மூலம் அவர் தன்னுடைய பொருளாதார நிலையை நிச்சயம் உயர்த்திக்கொள்வார்... இப்போது அவரது அடுத்த தலைமுறை ஓரளவு வசதியும், நல்ல கல்வி நிலையங்களில் சேர்ந்து, சிறப்பு வகுப்புகள் படித்து இன்னும் சற்று கூடுதல் அறிவும் பொருளாதார பலமும் பெற்று விளங்குவார்கள்...
இப்போது அந்த குறிப்பிட்ட சாதிக்கான இட ஒதுக்கீட்டு போட்டியில், மேற்கண்ட போட்டியில் வென்று பொருளாதார பலமும், சிறப்புப்பயிற்சி கல்வியறிவும் பெற்ற ஒரு மாணவனும் - அடிப்படை வசதிகளே இல்லாத அதே ஜாதியை சார்ந்த ஒரு மாணவனும் இருப்பார்கள்... இப்போது அந்த இடம் யாருக்கு கிடைக்கும்???
இப்படியாக இரண்டாவது - மூன்றாவது- நான்காவது தலைமுறையில் வரும் சந்ததியினர் நல்ல பொருளாதார பலமும்- கல்வி அறிவும் பெற்று விளங்குவார்கள்.. அதேநேரம் அதே சாதியில் இருக்கும் மற்ற நான்காம் தலைமுறை சந்ததியினர் ஆரம்பகால ஏழ்மையுடனும், குறைந்த அளவு கல்வி அறிவுடனும் இருப்பார்கள்... ஆனால் இட ஒதுக்கீடு என்பது சாதியின் அடிப்படையிலேயே இருப்பதால் அந்த வெற்றி பெற்ற தலைமுறையினரே தொடர்ந்து அந்த இட ஒதுக்கீட்டு பலனை அனுபவிப்பார்கள்....
ஆக இட ஒதுக்கீட்டின் நோக்கமே இங்கே கேலிக்கூத்தாகி விடுகிறது.... எல்லோரையும் சமமான நிலைக்கு கொடு வர வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, முந்திக்கொண்டவர்களை மட்டும் மேலே மேலே தூக்கி சென்று கொண்டே இருக்கும்... ஆனால் எந்த சாதியில் பிறந்ததற்காக அந்த சலுகையை பெற்று முன்னேறினார்களோ.. அந்த சாதிக்காரர்கள் என்று வெளியில் சொல்லிக்கொள்ளவோ, தான் சார்ந்த சாதியின் முன்னேற்றத்திற்காக சிறு துரும்பை அசைக்கவோ கூட மாட்டார்கள்....
வசதியும்- வாய்ப்பும் வந்த உடன் தன்னுடைய சொந்த சாதியை மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு தம்மையும் மேல்சாதிகாரர்களாய் காட்டிக்கொள்ளவே முனைவார்கள்... அதே நேரம் சலுகைகளை விட்டு விடாமல் தொடர்ந்து அனுபவிப்பதற்காக மட்டும் தாம் அந்த சாதிதான் என்று சான்றிதழ் மட்டும் வாங்கி ரகசியமாய் வைத்துக்கொள்வார்கள்...
இதுதான் சமூக நீதியா???
இதற்கு என்ன செய்ய வேண்டும்...???
இந்த இட ஒதுக்கீட்டு சலுகையை பயன் படுத்தி கல்வி- வேலை வாய்ப்புகளில் பலனடைந்தவர்கள் அதிக பட்சம் இரண்டு தலைமுறைகளுக்கு மட்டுமே அந்த போட்டியில் தொடர்ந்து இடம் பெற முடியும்.. அதன் பிறகு அவர்கள் பொது போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.. இதனால் சம்பந்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைக்காத இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்... இப்படியாக அந்த இட ஒதுக்கீடு சில பல காலம் தொடரும் பட்சத்தில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அந்த போட்டியில் இருந்து விலக விலக.. மற்ற அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்... இப்படியாக மட்டுமே சமூக நீதியை கொண்டு வர முடியுமே தவிர.... வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன் அதே சலுகையை விடாமல் அனுபவித்தால் மற்றவர் எப்படி முன்னேற முடியும்...???
வேண்டுமானால் இப்படி ஒரு சட்டத்தை அரசு அறிவிக்கட்டும்.. முதலில் போராட கிளம்புபவர்கள் இந்த சாதி சலுகையை அனுபவித்து கொழுத்தவர்களாக தான் இருப்பார்கள்....
நம்முடைய கேள்வி இதுதான்... எந்த சாதி அடிமைப்படுத்தப்பட்டது என்று போராடி சலுகை பெற்று நீ முன்னேறினாயோ.... அதே சலுகையை அனுபவிக்க உன் சாதியை சேர்ந்த இன்னொருத்தனுக்கு வாய்ப்பு கொடுக்க நீயே மறுக்கும் போது, காலம் காலமாய் ஆதிக்கம் செலுத்திய அவன் எப்படி உன்னை முன்னேற அனுமதிப்பான்...???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக