சனி, 7 மார்ச், 2015

ஒரு பழைய நினைவில் வகிடெடுக்காத மனோ..



மனோ...


மனோன்மணி... ஃ பேஸ்புக்கில் ஒரு நண்பருக்கு நண்பராகவோ.. நண்பருக்கு நண்பருக்கு நண்பராகவோ இருந்திருக்கும் இந்த பெயர் சுமார் இருபத்து இரண்டு வருடங்கள் பின்னோக்கி நகர்த்தியது..

எனக்கு தெரிந்த ஒரே மனோன்மணி அவள் தான்.. அவளாக இருக்க கூடுமோ... ஏதோ ஒரு நம்பிக்கையில் "எண்பதுகளின் கடைசியில் நான் படித்த பள்ளியில் ஒரு மனோ இருந்தார்.. ஒரு வேலை நீங்கள் அவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. அவராக இருக்கும் பட்சத்தில் தொடர்பு கொள்ளவும் " என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டு..

மறுபடியும் இருபத்து இரண்டு வருடம் பின்னோக்கி பயணித்தேன்..

உள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்காக இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த காசாங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பில் அரைக்கால் சட்டையுடன் நுழைந்தது தான் தெரிந்தது.. வேறொன்றும் பெரிதாய் சொல்லிக்கொள்ளுமளவு இல்லாத சராசரி மாணவன் தான்.. ஆனாலும் பள்ளி நாட்கள் எல்லோருக்கும் உரிய அதே விளையாட்டுகள்.. அதே குறும்புகள்.. அதே சிணுங்கல்கள் எங்களுக்கும் உண்டு..

அந்த நாற்றங்காலில் இருந்து பறித்து உலகின் பல்வேறு பாகங்களில் நடவு செய்யப்பட்ட என் பள்ளி நண்பர்களில் உள்ளூரிலேயே செட்டிலாகிவிட்ட நண்பர்களை சந்தித்திருக்கிறேன்.. இரண்டு மூன்று பேர் பொறியாளராகி இருந்தார்கள்..ஒருவர் மருத்துவராகி இருந்தார்கள்.. ஒரு சிலர் விவசாயி.. ஓரிருவர் வியாபாரிகள்.. நிறைய பெண்கள் குடும்ப தலைவிகள்..

இந்த மனோவும் அதில் ஒருத்தி.. வெள்ளை சட்டையும் ஊதா பாவாடையும், வகிடெடுக்காமல் வழித்து சீவி பின்னலிட்ட நீளமான முடி.. இதைத்தவிர வேறொன்றும் பெரிதாய் ஞாபகமில்லை..

ஆனால் மனோ என்ற பெயரை பார்த்ததும் புற்றுக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் ஈசல் மாதிரி இவ்வளவுகாலமும் எங்கோ ஒளிந்திருந்த அந்த வகிடெடுக்காத வழித்து சீவி பின்னலிட்ட முடி நினைவு தான் முதலில் எட்டிப்பார்த்தது..

நண்பர்களின் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த போது குறுஞ்செய்தி பெட்டி அவதரித்தது.. எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. மனோவே தான்.. அதே மனோ...

"ஆமா.. காசங்காட்ல படிச்ச மனோ தான்.. "

"ஒ காட்... மனோ.. எப்படி இருக்க மனோ...?"

"நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?"

"நானும் நல்லா இருக்கேன் மனோ.... யு எஸ் ல இருக்கேன்னு பார்த்தேன் புரோபைல் ல... எப்படி இருக்க.. என்ன பண்ற.. வீட்டுக்காரர் எப்படி இருக்கார்.. என்ன பண்றார்.. ?"

குழந்தைகள் பற்றி மட்டும் கேட்கவில்லை.. முன்னொரு முறை குழந்தைகள் இல்லாத ஒரு நெடுநாள் சந்திக்காத நண்பரிடம் குழந்தைகள் பற்றி விசாரித்துவிட்டு அவர் பட்ட சங்கடத்தை பொறுக்காமல் தப்பா கேட்டுட்டோமோ என்று மனதுக்குள் குமைந்த அனுபவமிருப்பதால் இப்போதெல்லாம் புதிதாகவோ- அல்லது பல வருடங்களுக்கு பிறகோ சந்திக்கும் நபரிடம் குழந்தைகள் பற்றிய கேள்வியை அவர்களாக சொல்லாத வரை முன் வைப்பதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்..

"எல்லோரும் நல்லா இருக்கோம்.. நான் இங்க பி எச் டி பண்ணிட்டு ஒர்க் பண்ணிட்டிருக்கேன்.. அவர் பேர் தமிழ்.. நல்லா இருக்கார்..ரெண்டு பசங்க.. ஒரு பொண்ணு ஒரு பையன்.. பொண்ணு சுஜா.. பையன் ரோஹித் கிரிஷ்..போட்டோ போஸ்ட் பண்ணி இருக்கேன் பாருங்க.."

சுஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது எடுத்த புகைப்படங்களில் தமிழ் சிரித்தார்.. மனோ சிரித்தாள்.. சுஜா சிரித்தாள்.. ரோஹித்... இந்த பூமியை அப்போது முத்தமிட்டிருக்க மாட்டான் போலும்..

மனோ நிறைய மாறி இருந்தாள்.. அமெரிக்க வாசமோ.. சந்தோஷமான வாழ்க்கையோ கொஞ்சம் தடித்திருந்தாள்.. வகிடெடுத்து சீவி இருந்தாள்.. பின்னலிட்டிருக்கவில்லை.. ஆனாலும் மனோ தெரிந்தாள்..

" மனோ.. நீ வகிடெடுககாமதான சீவி இருப்ப...?/"

"ஒ.. கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க... நம்ம கூட படிச்சவங்கள யாரையாச்சும் பார்த்தீங்களா.. எப்படி இருக்காங்க.. ஒ.. சாரிப்பா.. உங்கள பத்தி நான் கேக்கவே இல்ல... மேரேஜ் ஆயிடிச்சா.. குழந்தைங்க..?"

"சில பேரை பார்த்தேன் மனோ... பார்த்த வரையில் எல்லோரும் நல்லா இருக்காங்க.. கல்யாணமாயிடிச்சு.. ஒரு பெண் குழந்தை.. எல்லோரும் நல்லா இருக்காங்க.." வரிசை மாறிவிடாமல் அவளின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்..

"இப்போ எங்க இருக்கீங்க.. ?"

"நான் தோஹா ல இருக்கேன்.. "

"ஊருக்கு எப்போ போவீங்க... நான் மார்ச்ல வரலாம்னு இருக்கேன்.. அப்போ வர முடியுமா... முடிஞ்சா நம்ம எல்லா ஃபிரண்ட்ஸ்ஸையும் பார்க்கணும்.. உங்களுக்கு என்ன வாங்கிட்டு வர.. சொல்லுங்க... "

"கண்டிப்பா நானும் அப்போ ஊருக்கு வர ட்ரை பண்றேன்.. கூடுமான வரை ஊர்ல இருக்கவங்கள சந்திக்கலாம்.. எனக்கு எதுவும் வேணாம்.. இருபத்து ரெண்டு வருஷத்துக்கப்புறம் உன்னை கண்டு பிடிச்சதே பெரிய விஷயம்பா...எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..."

"எனக்கும் தான்... நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல.. "

"ஓகே மனோ... தொடர்புல இரு.. ஊருக்கு போன் பண்ணா எல்லோரையும் கேட்டதா சொல்லு..."

நிறைய பேர் வந்து ஹாய் சொன்னாலும்.. பல உரையாடல்கள் செயற்கையாய்த்தானிருக்கும்.. ஆனால் மனோவுடன் பேசியதென்னவோ அந்த கால்சட்டை நாட்களுக்கே கடத்தி சென்றது..

ஆனாலும் அந்த "ங்க" மட்டும் உறுத்தவே செய்தது... வயதாகி விட்டதோ....??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக