சனி, 7 மார்ச், 2015

நம்மில் தொடங்கட்டும்.

எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதென்பது இப்போது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது.. இது அறியாமையோ  / புகழ் தேடியோ / எதிர்த்தால் தான் நம்மையும் உணர்வாளர்கள் பட்டியலில் மற்றவர்கள் வைப்பார்கள் என்ற நம்பிக்கையோ காரணமாயிருக்கிறது..
அணு உலை முதல் அந்நிய முதலீடு வரை... பால்- பஸ் கட்டண உயர்வு முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை..எல்லாவற்றிலும் இதே அதிமேதாவித்தனம் தான் நிகழ்கிறது..
எந்த ஒரு விஷயமும் மாற்றங்களை சந்தித்தே வந்திருக்கிறது..உலகமயமாக்களில் அனைத்து நாடுகளுமே ஒரு குடையின் கீழ் வந்துவிட்ட படியால்.. உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் மற்ற நாடுகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும். இதனை சமாளித்து நாமும் மற்ற நாட்டவரை போல் இருக்க வேண்டுமானால் சில பல மாற்றங்களை நாம் முன்னெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாததாகி விடும்..
எதையும் நம்மால் தடுக்க முடியாது.. ஏனென்றால் உலகம் ஒருவருக்கொருவரை சார்ந்தே வாழவேண்டிய கட்டாயம்.. தடுக்கத்தான் முடியாதே தவிர அதனை முறைப்படுத்தலாம்.. அதற்கு  நிலையான/ நாட்டு நலனை முன்னெடுக்க கூடிய ஸ்திரத்தன்மை உள்ள அரசும் ஆட்சியாளர்களும், அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர்த்த மக்கள் நலனிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறையுடைய எதிர்கட்சிகளும் அமைய வேண்டும்..

அது இந்த நாட்டில் சாத்தியமா என்றால் ஒரு பெரிய கேள்விக்குறிதான் நம் கண் முன்னே நமக்கும் உயரமாய் வளைந்து நின்று நம்மை பார்த்து கேலியாய் சிரிக்கிறது..

ஏனென்றால் இன்றைய கிராம / நகர வார்டு  உறுப்பினர்கள் கூட குற்றப்பின்னனியும் சுயநலமும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.. இவர்கள் தான் நாளை நம்மை ஆளப்போகும் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மந்திரிகளாக வலம் வரப்போகிறார்கள்.. இன்றைய மந்திரிகளில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழைய வரலாற்றை தோண்டி எடுத்து துடைத்துப்பார்த்தால் அவர் ஒரு வார்டு மெம்பராகவோ/ ஊராட்சி / ஒன்றிய /நகராட்சி தலைவர்களாகவோ இருந்திருப்பார்கள்.. அவர்களின் அன்றைய அந்த பதவிக்கு ஒரு குற்ற பின்னணியும் / பணபலமும் காரணமாய் இருந்திருக்கும்.. அவர்கள் எல்லோரும் இப்போது விருட்சமாய் வளர்ந்து நிற்கிறார்கள்.. அவர்களை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது...
ஆனால் இப்போது முளைக்க ஆரம்பித்திருக்கும் களைகளை மிக எளிதாய் பிடுங்கலாம்.. ஆம்.. உங்கள் ஊரில் வார்டு மெம்பருக்கோ / ஊராட்சி- நகராட்சி தலைவருக்கோ போட்டியிடுபவர் நிச்சயம் உங்களுக்கு நேரடியாய் அறிமுகமானவராய் தான் இருப்பார்.. இவரின் பூர்வீகம், தகுதி திறமை நிச்சயமாய் உங்களுக்கு தெரிந்திருக்கும்.. குற்றப்பின்னணி கொண்டவரை புறக்கணியுங்கள்.. இன்றைய உங்கள் புறக்கணிப்பின் பயன் இப்போதே தெரியாது. அதற்கு இருபது வருடங்களுக்கு மேல் ஆகலாம்... ஆகட்டுமே..

மரத்த வச்சவன்தான் பழம் சாப்பிட்றானா என்ன??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக