சனி, 7 மார்ச், 2015

சினிமா விமர்சனம் எழுதும் என்னுடைய அன்பான நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

பணம் எத்தனை கோடிகள் புழங்குகிறதோ அத்தனை கோடி சென்டிமென்ட்களும் புழங்கும் ஒரு மாபெரும் கனவுத்தொழிற்சாலைதான்  சினிமா என்பது. வருடத்திற்கு சுமார் முன்னூறு படங்களுக்கு பூஜை போடப்படுகிறதென்று வைத்துக்கொண்டோமானால் அதில் சுமார் இருநூறு படங்களே படப்பிடிப்பு வரை செல்கின்றன  .. அந்த இருநூறில் கால்- அரை- முக்கால் வீதம் படப்பிடிப்பு முடிந்து பல்வேறு காரணங்களுக்காய்  முடங்கிப்போபவை சுமார் நூறு படங்கள்.. 
படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியட முடியாமல் முடங்குபவை சுமார் இருபத்தைந்து முதல் முப்பது படங்கள்..

ஆக முன்னூறு படங்கள் தொடங்கியதில் சுமார் எழுபது அல்லது அதற்கும் குறைவான படங்களே நமது பார்வைக்கு வருகிறது..
இந்த படங்களில் சம்பளம், கால்ஷீட் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க புதுமுக நடிகர்கள்.. நடிகைகள்.. தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களை வைத்து தொடங்கப்படும் படங்கள் தான் முடங்கிப்போவதில் முதலிடம்..
சுமார் பத்து முதல் இருபது ஆண்டு காலம் கூட போராடி ஒருவர் அவரின்  கனவுகளை திரட்டி வெள்ளித்திரையில் கொண்டு வர அவர் படும் பாடு சொல்லி மாளாது.. எந்த காரணத்தால் ஒரு புதுமுகம் (அவர் திரைக்கு முன்னாலோ- பின்னிருந்தோ இயங்குபவராக இருக்கலாம்) அறிமுகமாக கூடிய திரைப்படம் வெளிவர முடியாமல் போனாலோ அல்லது வெளிவந்து தோல்வியை தழுவினாலோ முதலில் "ராசி இல்லாதவன்/ள்" என்று முத்திரை குத்தப்படுபவர்கள் இந்த புது முகங்களே...
இன்றைய தினம்  காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து செய்திகளை சேகரிக்கும் அளவு சமூக வலைத்தளங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்திருக்கின்றன.. அந்த வளர்ச்சி பெற்ற வலைத்தளத்தில் பங்கெடுத்து நம்முடைய கருத்துக்களையும் நண்பர்கள்- நண்பர்களின் நண்பர்கள் என பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நாமும் பெற்றிருக்கிறோம்..
 திரைப்படத்திற்கு மதிப்பெண் போட்டு ரேங்க்    கொடுக்கும் ஊடகங்கள் எதோ ஒரு வருமானத்திற்காக இப்படி செய்கின்றன.. ஆனால் எந்த லாபமுமின்றி நம் மனதில் பட்டதை எல்லாம் இதில் பதிவு செய்கிறோம்..
அப்படி பதிவு செய்யும் விஷயங்களில் சினிமா விமர்சனமும் ஒன்று. 
பல்லாயிரக்கணக்கானோரின் உழைப்பில் சில பல புது முகங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கோடிகள் கொட்டி எடுக்கப்படும் ஒரு படத்தை அது வெளி வந்த அன்றே பார்க்கும் நண்பர்கள் ( இதில் ஓசியில் ஆன் லைனில் பார்ப்பவர்களே அதிகம் ) படம்.. "மொக்கை" "குப்பை " என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக பதிவிடுகிறார்கள்..
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி எப்படி பல்கி பெருகி சமூக தாக்கங்களை ஏற்படுத்துமென்பதை கண்கூடாக காண்பவர்கள் நாம்..
இதில் நம்முடைய ரசனையை வெளிப்படுத்தும் நோக்கமோ- நானெல்லாம் "உலக சினிமாவை அலசி ஆராய்ஞ்சவனாக்கும்  " என்று சொல்லிக்கொள்ளும் அதி மேதாவித்தனமும் தான் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை..
நம்முடைய இந்த அதிமேதாவித்தனம் எத்தனை பேருடைய எதிர்காலத்தில் நெருப்பு வைக்கும் தெரியுமா..??
என் அன்பு நண்பர்களே.. நீங்கள் திரைப்படம் பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருக்குமெனில் அதனை பார்க்க பரிந்துரை செய்யுங்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதற்கென ஒரு ரசிக வட்டம் இருக்கும்.. அவர்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டு விடுங்கள்..
இன்னொருத்தன் சோத்துல மண்ணள்ளிப்போட்ற வேலைய நாம செய்யனுமா????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக