ஞாயிறு, 8 மார்ச், 2015

காவு கொடுக்கும் முன் கண்விழிப்போம்

நமது பகுதியில் நமது உறவினர்கள் வீட்டில் நல்ல விசேஷங்கள் நடந்தால் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும், துக்க நிகழ்ச்சிகள் நடக்கையில் அவர்களின் சோகத்தில் பங்கெடுத்து குறைக்கவும்  உறவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வீடுகளை நோக்கி படையெடுப்பது நான் அனைவரும் அறிந்த ஒன்று தான்.. இது காலம்காலமாய் பின்பற்றப்பட்டு தற்போது வரை புழக்கத்தில் இருக்கும் ஒரு அற்புதமான நடவடிக்கை..
முன்னாளில் நடந்தும் பின் வண்டி வாகனங்களிலும் செல்லும் விஞ்ஞான மாறுதலுக்கு நாமும் நம்மை உட்படுத்திக்கொண்டு இருசக்கர - நான்கு சக்கர வாகனங்களை  உபயோகித்து அவ்வாறாக உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வர துவங்கினோம்..
விவசாய வேலைகளுக்கு பயன் படுத்தும் ட்ராக்டர்-டிரைலர்களை அவ்வாறு உபயோகித்து வந்த நாம்.. நமது பகுதியில் நன்றாக பராமரிக்கப்படாத சாலைகள் மற்றும் திறைமை குறைவான ஒட்டுனர்களையே நம்பி இருக்க வேண்டி உள்ளது..
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் காசாங்காடு கிராமத்தில் இருந்து ஆலம்பள்ளம் கிராமத்திற்கு அவ்வாறாக ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு டிராக்டர் விபத்துக்குள்ளாகி ஓரிரு உயிர்களை பலி கொண்ட பின் டிராக்டர் பயணத்தின் மீது ஒரு பயம் தோன்ற ஆரம்பிக்க.. பின்னாளில் டிராக்டர் பயணம் முற்றிலும் கை விடப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது..
விஞ்ஞானத்தின்  அடுத்த கட்ட வளர்ச்சியாக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு வாகனமான "குட்டி யானை" என்று செல்லமாக அழைக்கப்படும் வாகனங்கள் அந்த டிராக்டருக்கான இடைத்தை இன்னும் கூடுதலான ஆதரவோடு பிடித்திருக்கிறது..

இந்த குட்டியானை தான் இப்போதோ- எப்போதோ சில பல உயிர்களை காவு கொள்ள காத்திருக்கிறது..
எப்படி..?/
குட்டி யானையின் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அந்த வாகனத்தின் எடைதாங்கும் /இழுக்கும் சக்தியாக அறிவித்திருப்பது சுமார் 1000கிலோ மட்டுமே ( ஒரு டன்) ஆனால் இன்றைய நமது பயண பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் சுமார் 35 முதல் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு நம் கிராமத்து சாலைகளில் விரைந்து கொண்டிருப்பதை நம் கண்கூடாக காண்கிறோம்.. நமது பகுதி பெண்களின் சராசரி எடைஅளவு  (பெரும்பாலும் பெண்களால் உபயோகிக்கப்படுவதால் இங்கே பெண் என்று குறிப்பிடப்படுகிறது) ஒரு பெண் 60 ௦ கிலோ என்று வைத்தால் கூட 40 பெண்கள் கூடி சுமார் 2400 கிலோ ( 2 .5 tonnes ) ஏற்றுகிறார்கள் . இது அந்த நிறுவனம் அறிவித்திருக்கும் எடை அளவை விட சுமார் 140 சதவிகிதம் அதிகமாகும். அவாறு ஏறக்கூடாது என்று அந்த ஓட்டுனர் தடுத்தால் கூட ஆட்கள் அதிகம் சேர்ந்தால் தமது பங்குத்தொகை குறையும் என்ற சிக்கன நடவடிக்கையை மட்டும் கருத்தில் கொள்ளும் பெண்கள் அந்த ஓட்டுனருடன் விவாதம் செய்ய தொடங்குகிறார்கள்..
""பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.""
மயிலிறகு எவ்வளவு மென்மையானது என்ற போதும் அதனையும் அளவுக்கதிகமாக வண்டியில் ஏற்றும் பொது அதன் அச்சாணி உடைந்து விடும் என்று சொன்ன பொய்யா மொழி புலவன் வாக்கினை இச்சமயம் நினைவுகூர்தல் நலம்.
இது தற்போது மேலும் விரிவடைந்து திருவிழா காலங்களில் குழந்தை குட்டிகளுடன் இன்னும் கூடுதல் எடையுடன் பயணிக்கிறது.
ஒரு விபத்து நடந்த பின்தான் நாம் விழிக்க போகிறோமா..???
ஐந்து ரூபாய் மிச்சம் செய்ய ஆசை பட்டு ஆயுளை இழக்க போகிறார்களா..
சிந்திப்போம்- இது போன்ற பயணங்களை தடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக