பொதுவாக கிராமங்களில் சொல்லப்படும் பழமொழிகள் அர்த்தம் நிறைந்தவை..
இவை யாவும் ஒரு நாளில் சொல்லப்பட்டவை அல்ல..
காலம் காலமாய் அனுபவித்த விஷயத்தை ஓரிரு வரிகளுள் அடக்கி விடும்
சாமர்த்தியம் அது..
நவநாகரீக மக்கள் யாரும் உபயோக்கிக்காமல்/தெரிந்துகொள்ள கூட
ஆர்வமில்லாமல் படிப்படிவில்லாமல் பட்டறிவுடன்
வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த பெரியோர்களுடனேயே சேர்ந்து மரணித்துக்கொண்டிருக்கிறது..
அவைகளை நான் அறிந்தவரையில் நேரடி/ மறைமுக அர்த்தங்களுடன்
தொகுத்திருக்கிறேன்..
இவைகள் எங்கள் பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி பகுதிகளில்
இன்றளவும் கிராமங்களில்
உபயோகத்தில் உள்ளவை.
"பரம யோக்கியர் பந்தலுக்கு வந்தாராம் ....
இருந்த யோக்கியர் எழுந்திரிச்சு போனாராம்... "
நேரடி அர்த்தம் :- ஒரு வீட்டின் விசேஷத்தில் பந்தலில் ஒரு நேர்மையற்ற நபர்
உட்கார்ந்திருக்கிறார்.. இன்னொரு நேர்மையற்ற நபர் அங்கு வருகிறார்.
அதனை கண்ட ஏற்கெனவே அமர்ந்திருப்பவர்..
"ம்ம்க்கூம்.. யோக்கியர் வரார்.. நான் கிளம்புகிறேன்.." என்று சொல்லிவிட்டு
எழுந்து போனாராம்.
உள் கருத்து :- தம்முடைய நிஜமான முகத்தை மறைத்து
மற்றவர்களை குறை சொல்லி திரிவோரை குட்டுவதாய் இந்த பழமொழி..
"யோக்கியர் வரார்.... சொம்ப எடுத்து உள்ள வைங்கன்னு சொன்னானாம்"
நேரடி அர்த்தம்:- திருடும் குணமுடைய ஒருவர் வீட்டிற்கு வருகிறார்.
அவர் திண்ணையில் இருக்கும் சொம்பை திருடி சென்று விடுவார்..
அதனால் அதனை எடுத்து பாதுகாப்பாய் உள்ளே வைக்கும்படி
வீட்டுக்காரர் சொல்வதாய் அமைந்த சொல் வழக்கு
மறைமுக அர்த்தம் : - ஒருவரை பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கும்
பட்சத்தில் நம்முடைய பொருட்களை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் களவு கொடுத்த பின் பதறி பிரயோஜனமில்லை என்பதே இதன் உள்கருத்து
"பாத்திரமறிஞ்சு பிச்சையிடு..
கோத்திரமறிஞ்சு பொண்ண கொடு... "
நேரடி அர்த்தம் :- ஒரு பிச்சைக்காரர் யாசிக்கும்போது அவர் நிஜமாகவே
பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருக்கிறாரா என்பதை தெரிந்து
பிச்சை இட வேண்டும். அதே போல் தம்முடைய வீட்டு பெண்ணை
திருமணம் செய்து கொடுக்கும் பொது அவர்களின் பாரம்பரியம் தெரிந்தபின்
மணமுடித்து கொடுக்க வேண்டும்
"எரியுறத புடுங்குனா கொதிக்கிறது அடங்கிடும்..."
நேரடி அர்த்தம்:- அடுப்பில் எரிந்துகொண்டிருக்கும் விறகை
வெளியே எடுத்துவிட்டால் பானையில் கொதிப்பது தன்னால் அடங்கி விடும்.
மறைமுக அர்த்தம் :- ஒரு நியாயமற்ற போராட்டமோ, அல்லது
கலவரமோ நடக்கும் பொது அதற்கான உதவிகள் எங்கிருந்து வருகிறது
என்று கண்டுபிடித்து அதனை நிறுத்திவிட்டால்
அந்த போராட்டம் -கலவரம். தானாகவே முடிவுக்கு வரும்.
அதாவது பிரச்சினையின் ஆணிவேரை கண்டு பிடித்து களையவேண்டும்.
"கொட கூழுக்கு அழுவுதாம்.. கொண்ட வாடாமல்லி பூ கேட்டுச்சாம் .."
நேரடி அர்த்தம் :- உயிர்வாழ பசிக்கு உணவு கிடைக்காமல் வயிறு
தவிக்கும்போது அலங்காரம் செய்துகொள்ள பூ இல்லை
என்று கூந்தல் அழுததாம்
மறைமுக அர்த்தம் : - அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யாமல்
மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக வறட்டு
கவுரவத்திற்காக மற்ற ஆடம்பரங்களில் கவனம் செலுத்த கூடாது.
"ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும்..
பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும்..."
ஒரு விஷயத்தில் எதிர்ப்பு கிளம்பும் போது அவர்களின் போக்கிலேயே போய்
காரியம் சாதிக்க வேண்டும்.
"நண்டுக்கு ஜீவன் போகையிலே.. நரிக்கு கொண்டாட்டமாம்... "
நேரடி அர்த்தம் :- நரி விரும்பி சாப்பிடும் உணவு வயல் காடுகளில்
இருக்கும் நண்டு. அதனை பிடித்து உணவுக்காக கொல்லும்போது உணவு கிடைத்த மகிழ்ச்சி நரிக்கு ஏற்படும்
மறைமுக அர்த்தம்:- ஒரு விஷயம் ஒருவருக்கு நலமாகவும் ஒருவருக்கு
கேடாகவும் தான் இருக்கும். சாதகமாய் இருப்பவர் சந்தோஷப்படுவது உலக இயல்பு.
"நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்-"
ஒரு விஷயத்தில் சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபர் ஒருவரை
ஆலோசனை/ தீர்ப்பு சொல்ல அழைக்கும்போது அவர் தனக்கு எதுவும் இந்த விஷயத்தில் ஆதாயம் கிடைக்குமா என்றுதான் பார்ப்பார். எனவே சம்பந்தப்பட்டவர்களே அமைதியாய் பேசி தீர்த்தல் நலம்.
"நா மட்டும் தாங்கி புடிக்கலன்னா இந்நேரத்துக்கு
இந்த கோபுரம் சாஞ்சே போயிருக்கும் "-
கோயில் கோபுரங்களின் நான்கு பக்கமும் கைகளை மேலே தூக்கி கோபுரத்தை
தாங்கி பிடிப்பது போல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த பொம்மைகள் நாம்தான் இந்த கோபுரத்தை தாங்கி கொண்டிருக்கிறோம்.. நாம் விட்டு விட்டால் இந்த கோபுரம் சாய்ந்து விடும் என்று எண்ணிக்கொள்ளுமாம்.
ஒரு விஷயம் தானாகவோ அல்லது சரியாக திட்டமிட்டோ மிக சரியாய்
நடக்கும் வேளையில் சம்பந்தமே இல்லாமல் ஒருவர் வந்து என்னால் தான் இந்த காரியம் வெற்றியாய் முடிந்தது என்றும், நான் இல்லாவிட்டால் இது நடந்தே இருக்காது என்றும் சொல்லுவார். அப்படிப்பட்ட நபரை இழித்து கூறவே இப்பழமொழி.
"பூனை கண்ண மூடிகிட்டா பூலோகம் இருண்டு போயிடுமாம..."
தமக்கு ஒரு விஷயம் தெரியாமல் இருந்தால் அதை தெரிந்துகொள்ளும்
ஆர்வமில்லாமல் அப்படி இருக்கவே முடியாது என்றும்.. நிர்வாக பதவிகளில் இருப்போர். தாமில்லாவிட்டால் இதனை நெறிப்படுத்த வேறொரு தகுதியான ஆள் இல்லவே இல்லை என்றும் எண்ணிக்கொண்டு மற்றவர்களை மிரட்டிக்கொண்டும், வேறு யாருக்கும் வாய்ப்பு கொடுக்காமலும் இருப்பார்கள் சிலர். அவர்களை சுட்டுவது இந்த சொல்வழக்கு
"ஓஞ்சுச்சாம் பாலை... ஒக்காந்தாளாம் சாணாத்தி..."
சாணாத்தி என்ற பெண்பால் பெயர் பனை மரத்தில் கள் இறக்குபவர்களை
குறிப்பதாகும். அவர்களிடம் கள் வாங்கி குடிப்பதற்காக வருவோரிடம் மிகவும் அதிகார தோரணையாய் பேசுவார் கள் விற்பனை செய்யும் பெண்மணி . பனை மரத்தில் கள் வடியும் பாலை சீசன் முடிவுக்கு வந்த உடன் அவர் மற்ற வேலைகளுக்கு செல்வார். மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்த முடியாது.பதவியில் இருப்போர் அந்த பதவி இருக்கும் வரைதான் அதிகாரமாய் மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். அந்த பதவி போய் விட்டால் மற்றவர்கள்
அவர்களுக்கு பயப்பட மாட்டார்கள் என்பதே இதன் கருத்து
"ஒலக்கை ஒரக்குழிய நக்குதாம்.. லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டுச்சாம்..."
கோயிலில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய பஞ்சாமிர்தம் ஒரு உரலில்
பழங்களை இட்டு உலக்கையால் இடித்து தயார் செய்வார்கள். முதலில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிப்பது உரல் மற்றும் உலக்கை தான். அதன் பிறகே சிவ லிங்கத்திற்கு அபிஷேகம். பஞ்சாமிர்தம் இடிக்கப்படாத காலங்களில் , முதலில் சுவைத்துப்பார்க்கும் உலக்கை அதற்கு வழி இல்லாமல் இருக்கும் போது, லிங்கம் "எனக்கு எங்கே பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தவில்லை" என்று கேட்குமாம்...
ஒரு திட்டம் நிறைவேறும்போது அந்த திட்டமிடலில்
பங்குகொண்டவர்கள்தான் முதலில் பலன் அனுபவிப்பார்கள். அதன் பிறகே மற்றவர்களுக்கு.. அப்படி திட்டமிடலோ- உருவாக்கமோ இல்லாத காலத்தில் பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்
""ஆமை சுடுறது மல்லாக்க.. அத சொன்னாலும் பொல்லாப்பு..""
கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிகளுக்குள் புரிந்து கொள்ளாமை காரணமாக
எப்போதும் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.. கணவன் எதையாவது சொல்லிவிட்டால் அதில் குறை கண்டு பிடித்து மனைவி சண்டையை துவங்குவாள்... மனைவி எதையாவது சொன்னாலோ கணவன் அதில் குறை கண்டு பிடித்து சண்டையை துவங்குவான்.. ஒரு நாள் கணவன் ஒரு ஆமையை பிடித்துக்கொண்டு வந்து நெருப்பில் போட்டு சுட்டான்.. ஆமையை நேராக போட்டு நெருப்பில் சுடும் போது அது நெருப்பை விட்டு வெளியில் ஓடிக்கொண்டே இருக்கும் .. அதனை மல்லாக்க திருப்பி போட்டு சுட்டால் ஆமையால் ஓட முடியாது.. கணவன் நேராக நெருப்பில் போட்டு சுட.. ஆமை ஓடிக்கொண்டே இருந்தது.. இதனை மனைவி பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவளால் "மல்லாக்க போட்டு சுடனும் " என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை... ஆனால் சொன்னால் சண்டை தொடங்கி விடும்.. ஆகவே.. தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் சொன்னாள்... "ஆமை சுடறது மல்லாக்க .. அத சொன்னாலும் பொல்லாப்பு... என்று சொன்னாளாம்.. அதுபோல... ஒருவர் ஒரு வேலையை தவறாக செய்யும் போது அந்த வேலையை நன்றாக செய்யத்தெரிந்தவரால் அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.. ஆனால் அதை சொல்லும்போது, தவறாக செய்பவர் அதனை திருத்திகொண்டால் வேலை நன்றாக முடியும் என்பதே இதன் உட்கருத்து |
சொல்லடி சிவ சக்தி... என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்...! வல்லமை தாராயோ... இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே...!!!
சனி, 7 மார்ச், 2015
எங்கள் பகுதி கிராம சொலவடைகள்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக