ஞாயிறு, 8 மார்ச், 2015

ஈழ மக்களே..

இலங்கை தமிழர் விவகாரத்தில் தலையிடாமல்  இருந்தால் தமிழர்களால் புறக்கணிக்கப்படுவோம் எனவும், அதே நேரம் இதில் அதிரடியான எந்த முடிவையும் எடுத்தால் பேரன், மகள் என்ற சகலரையும் ஆயுள் முழுக்க கம்பிக்கு பின்னால் வைக்க நேர்ந்துவிடுமோ என்ற பயமும் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் புலிவாலை பிடித்துக்கொண்டு திரிகிறது தி மு க.

மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு மீது தமிழக மக்களுக்கு இருக்கும் வெறுப்பு நெருப்பை இன்னும் ஊதிவிட்டுக்கொண்டும் , இதன் மூலம் மத்திய அரசில் பங்கெடுத்திருக்கும் தி மு க விற்கு நெருக்கடி கொடுக்கவும் தாக்குதல் ஆட்டம் ஆடும் தந்திரம் தான் அ தி மு க அரசின் ஈழ பாச நாடகம்.

இந்தி எதிர்ப்பு , மண்ணாங்கட்டி, தெரு புழுதி எல்லாவற்றையும் வைத்து அரசியல் செய்தாகி விட்டது.. இப்போது உசுப்பி விட கிடைத்த ஒரே காரணம் எரியும் ஈழம் தான்.. இதை வைத்து அரசியல் நடத்தினால்தான் ஓரளவாவது நானும் ரவுடிதான் என்று சத்தம் போட்டுக்கொள்ள முடியும் என்ற நிலையில் மாவட்ட, ஒன்றிய, கிராமங்களை தலைமையாக கொண்டு "செயலாற்றி" புயல் கிளப்பும் உதிரி கட்சிகள்..

நிஜமாகவே ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுவதை கண்டு பொறுக்கமாட்டாமல் போராடுவோம் என்று எவன் கூப்பிட்டாலும் அவனின் நிஜமான நோக்கம்  என்ன என்று தெரியாமல் அவன் பின்னால் ஓடி அவனால் ஒரு கல்லை கூட நகர்த்தி விட முடியாது என்றும்.. அவன் சுயநலத்திற்கு நம்மை குனியவைத்து குதிரை ஏறுகிறான் என்பதை தெரிந்து கொண்ட பின் எதுவும் செய்ய முடியாமை கையை பிசைந்து கண்ணீர் வடிக்கும் ஒரு கூட்டம்..

என்னருமை ஈழ மக்களே.. அதிகாரம் இருக்கும் யாரும் உங்களுக்கு உதவி செய்வதை காட்டிலும் தங்களின் இருப்பிடத்தை அதிகார மையத்தை இன்னும் ஆழமாய் அமைத்துக்கொள்ளவும், உங்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாரம் இல்லாமலும் தான் இருக்கிறோம்.. எங்களால் போஸ்ட் பாக்ஸில் நெருப்பு கொழுத்தி போட்டு தான் போராட்டம் நடத்த முடியும்.. இதை தவிர வேறொன்றும் செய்ய இயலாது..
ஆனால் உங்கள் பிரச்சனைகளை சர்வதேச அளவில் எடுத்துச்செல்லும் ஆற்றல் பெற்றிருக்கிறீர்கள்.. நிச்சயம் ஒருநாள் வெல்வீர்கள்.. ஆனால் தமிழ்நாடு உங்களுக்கு எவ்விதமும் உதவாது... இதை புரிந்துகொள்ளுங்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக