சனி, 7 மார்ச், 2015

ஒரு எல் சி டி டி வி யும் சில ரிமோட்டுகளும்...

MGR இறந்த அன்று டிசம்பர் 24 , 1987 ல் தான் முதன் முதலாய் ஒரு தொலைகாட்சி ஒளிபரப்பை பகலில் பார்க்க நேர்ந்தது.. அதற்கு முன்பு ஊரில் ஏதேனும் விசேஷமென்றால் மதுக்கூரில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்படும் டி வி யும் டெக்கும் இரவில் தூரமாய் மட்டுமே தரிசனம் தரும்.. மின் இணைப்பை கொடுத்து கருப்பு வெள்ளையாய் வண்டுகள் நெருக்கமாய் மொய்க்கும் ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் கேட்ட உடனேயே தேனாறு பாய்ந்ததுபோல் இருக்கும்.. என்னையும் அறியாமல் ஊஊஊய்ய்ய்ய் என்று எழுப்பும் சத்தம் என் பிராய சிறுவர்களின் கோரஸ் க்கு தொடக்கமாயிருக்கும்..

பின்னாளில் எங்களால் மாவட்டம் என்று அழைக்கப்படும் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் சவூதியிலிருந்து கஸ்டம்ஸ் டூட்டி கட்டி கப்பலில் கொண்டு வந்த தங்க நிற சோனி டி வி அவரின் குடும்ப தேவைக்கு பணமாய் மாற்ற விற்பனைக்கு சென்ற பிறகு டி வி பற்றி கனவே மிச்சமிருந்தது..

ஒரு "எல்" வளைவான சாலையின் வெளி கோணத்தில் அமைந்த சக்திவேல் வாத்தியார், அவரின் தங்கை வீட்டிலிருந்து கொண்டு வந்து வைத்திருந்த இன்னொரு டி வி.. வாத்தியாரான அவருக்கு இயக்கத்தெரியாத விஷயமாயிருந்தது.. பரிமளா சித்தி மட்டுமே அதை இயக்க தெரிந்த எங்களூர் வில்லேஜ் விஞ்ஞானி..
ஊரில் இருக்கும் நண்டு சிண்டெல்லாம் அவர்கள் வீட்டில் குழும அவர்களின் இரவு சாப்பாட்டு நேரத்தை அவர்கள் ஒரு மணி நேரம் முன்னே நகர்த்துமளவுக்கு போனது.. எங்கள் தொல்லை தாங்காமல் பரிமளா சித்தியை வீட்டில் மறைத்து வைத்து விட்டு "அக்கா இல்லப்பா... நாளைக்கு வாங்க..." என்று பொதுவாக சொல்லி விட்டு அவர்கள் வீட்டில் விளக்கை எல்லாம் எட்டுமணிக்கே அணைக்குமளவு போனது எங்கள் வன்முறை..


அவர்கள் வீட்டின் எதிர்புறம் ஐம்பது மீட்டர்களுக்கு அப்பால் ஒளிந்திருந்து இருட்டிய வீட்டின் மூடிய கதவுகளுக்கப்பாலும் பார்வையை செலுத்தி காத்திருப்போம்.., பசங்க எல்லோரும் போயிட்டாங்க என்று உறுதி படுத்திக்கொண்டு அவர்கள் டி வி யை ஆன் செய்த உடன் ஓடிப்போய் டி வி யின் முன் அமர.. தொல்லை தாங்காமல் வாத்தியார் தங்கை வீட்டிற்கே அந்த டி வி யை திருப்பி கொடுத்தனுப்பியது தனிக்கதை..
வாத்தியார் வீடு எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரமிருந்தது..

அப்போதெல்லாம் ஆண்டவனிடம் என்னுடைய ஒரே வேண்டுதல்.. எங்க வீட்டுக்கு பக்கத்துல யாராவது டி வி வாங்க மாட்டாங்களா..??

கடவுளுக்கு நிச்சயம் அது காதில் விழுந்திருக்க வேண்டும்... ஆம்.. எங்களின் பக்கத்து வீட்டு மணி அண்ணன் ஒரு ஒனிடா டி வியை வாங்கி வந்தார்... அடடா.. இந்த இடைப்பட்ட காலத்தில் டி வி யை இயக்க தெரிந்த வில்லேஜ் விஞ்ஞானிகளில் நானும் ஒரு ஆளானேன்... மணி அண்ணனோ- கோவிந்த ராஜ் அத்தானோ இல்லாத நேரத்தில் அந்த டி வி யை இயக்கும் பெரிய வாய்ப்பு எனக்கு கிட்டும்..

அகன்ற திரை சோனி பிரேவியா எல் சி டி டி வி, சாம்சங் சி டி பிளேயர்.., சன் டைரெக்ட் , ஹோம் தியேட்டர் சிஸ்டம் எல்லாவற்றிற்குமான ரிமோட்டுடன் ஒரு கார்ட்லெஸ் ரிசீவர், மொபைல் போன் எல்லாவற்றையும் கடை பரப்பிக்கொண்டு கொறிக்க ஏதாவது வைத்துக்கொண்டு வீட்டில் நீட்டி படுத்திருக்கிறேன்...

சக்திவேல் வாத்தியார் வீட்டின் எதிரில் ஐம்பது மீட்டருக்கப்பால் டி வி வெளிச்சத்திற்காக காத்திருந்த சந்தோஷத்தை தொலைத்துவிட்டு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக