சனி, 9 மே, 2015

ஒரு பெண்ணை குறிவைத்த பாலியல் தீவிரவாதமும்.. ஒட்டுமொத்த பெண்களையும் குறி வைக்கும் ஓட்டு தீவிரவாதமும்...

இந்த கட்டுரைக்குள் நுழையும் முன்பாக மிக தெளிவாய் சொல்லி விடுகிறேன்... தலைநகர பாலியல் தீவிரவாத விவகாரத்தில் அவர்களிடம் விசாரிக்க எதுவும் இல்லை அவர்கள் தான் அதை செய்தார்கள் என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டால் உடனடியாக அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும் என்பதை அன்றே பதிவு செய்தவன் நான்.

தலை நகரத்தில் அந்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள்.. ஆனால் அதனை தொடர்ந்த நிகழ்வுகளில் எவ்வளவு தூரம்ஓட்டு  தீவிரவாத அரசியல் விளையாடுகிறது என்பதை எந்த பெண்ணும் புரிந்துகொள்ள தயாராய் இருப்பதாய் தெரியவில்லை.

இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப உடை அணிய சொன்னால் "பெண்களை மூடிக்கொண்டு போக சொல்கிறாயே..." என்று என் மீதும் இப்படி சொல்பவர்கள் மீதும்  எரிந்து விழுகிறார்கள்  உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்வேன் சகோதரிகளே..  சுமார் 37 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு பகுதியில் பெண்கள் மார்பகங்களை மூட அனுமதி அளிக்கப்பட்டது தெரியுமா.... அதற்கான போராட்டத்தின் வலி எத்தனை பேருக்கு தெரியும்??
முழு விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்..



ஆனால் இன்றைய போராட்டங்கள் சுதந்திரம் என்ற பெயரில் எதை நோக்கி செல்கிறது??? நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பெருவணிகர்கள் புகுத்திய மேலை நாட்டு நாகரீக  மாயையில் சிக்கி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள்.. அது உங்கள் சுதந்திரம்.. அதை பற்றி நான் எதுவும் சொல்ல தயாரில்லை. ஆனால் ஒரு சகோதரனாக ஒரு ஆலோசகனாக உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்... உங்களது பார்வையில் ஆணாதிக்கம் என்றோ- பெண்ணின் தனி மனித சுதந்திர குறுக்கீடு என்றோ நீங்கள் நினைக்கும் இந்த விஷம் இன்றோ- நேற்றோ தொடங்கியதல்ல.. அது பல நூற்றாண்டுகளாய் தொடர்வது... அதற்கு எதிரான உங்கள் யுத்தம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.. நீங்கள் வெற்றி பெற வில்லை அதற்கு இன்னும் சில பல ஆண்டுகள் ஆகலாம். 

ஒரு யுத்த களத்தில் நிற்கும் போதே கவசத்தையும் கேடயத்தையும் வீசி எறிபவன் புத்திசாலி இல்லை... அப்படி வீசுபவனுக்கு கண்டிப்பாய் இழப்பு நிச்சயம் ... இந்த போரில் கலாச்சார  உடைகள் என்பது இன்றைய நிலையில் உங்கள் கவசம்- கேடயம்.. அதை வெற்றிக்கு முன்பே துறக்காதீர்கள் என்று தான் சொல்கிறோம்..

இந்த போராட்டத்தில் உங்கள் வெற்றி என்பது ஆண்களை சட்டத்தை காட்டி மிரட்டுவதோ- பயப்பட வைப்பதோ இல்லை... 

உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனோ பக்குவத்திற்கும் , உங்களை முதலில் மனுஷியாய் பார்க்கும் நிலைக்கும் அவர்கள் வர வேண்டும்.. அதுதான் உங்கள் வெற்றி.. அந்த வெற்றியை அடைந்துவிட்டதாய் நீங்கள் நம்புகிறீர்களா?? 

தலைநகரத்தில் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் தீவிரவாத தாக்குதல் இங்கே எத்தனை பெண்களுக்கு கணவனாலேயே கூட நடத்தப்படுகிறது..?? ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பில் இன்று தமிழக முதல்வர் அவர்கள் வேதியல் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.. அதனை சில முகநூல் சகோதரிகள் "காயடிக்க வேண்டும்" என்று அப்பட்டமாய் பதிவு செய்து கொண்டாடுகிறார்கள்.. 

அப்படி காயடிக்க வேண்டும் என்றால் இங்கே எத்தனை கணவன்களுக்கு காயடிக்க வேண்டும் என்பதை இவர்கள் உணர்வார்களா??? ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளை உடல் ரீதியான தொடர்புக்கு வற்புறுத்துவதே வன்முறைதான்.. அது இங்கே எத்தனை மனைவிகளுக்கு கணவனாலேயே ஏற்படுகிறது தெரியுமா?? எந்த மனைவி தன கணவனுக்கு காயடிக்கும் தண்டனை கொடுக்க சொல்லி புகார் செய்ய போகிறார்..?? 

கற்பு என்பது பேனாவிலோ பென்சிலிலோ எழுதி வைக்கப்பட்டதல்ல அதனை அழிக்க... அது மொத்தமும் மனம், உடல், செயல்கள் சார்ந்த விஷயம் ஆனால் அது இன்று திரிக்கப்பட்டு விட்டிருக்கிறது...   பாலியல் வன்புணர்ச்சி என்பதுதான் சரியே தவிர "கற்பழிப்பு" என்ற வார்த்தையிலேயே ஒட்டு மொத்த பெண்ணினமும் கேவலப்படுத்தபடுவது ஏன் உங்களுக்கு புரியவில்லை??

ஒரு ஜனநாயக நாட்டின் தலைநகரத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராய் நடந்த வெட்கப்பட வேண்டிய விஷயத்தை ஊடகங்கள் விளம்பரம் செய்ததும் அதில் குளிர்காய அரசியல் வாதிகள் போட்டி போடுவதும் ஏன் இந்த பெண்களுக்கு புரியவில்லை.. நாட்டின் வீர திருமகளை இழந்துவிட்டோம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று ஒரு கட்சி சொல்கிறது. காயடிக்க வேண்டும் என்று ஒரு முதல்வர் சொல்கிறார்... 
இவை எல்லாம் ஓட்டு தீவிரவாதம் என்றும்.. ஆட்டிற்காக கவலை படும் ஓநாய்களின் கூக்குரல் என்றும் உங்களுக்கு புரியவில்லையா ??

இதற்கு முன்பு பாலியல் குற்றங்கள் பதிவானதே இல்லையா அப்படி பதிவானது எந்த அரசியல் வாதிக்கும் / ஆட்சியாளர்களுக்கும்  தெரியாதா???

ஆண்  என்பவன் வானத்திலிருந்து குதித்தவனல்ல .... அவனையும் ஈன்றவள் பாலூட்டி வளர்த்தவள் ஒரு பெண்தான் .... உங்கள் மகனுக்கு நல்ல புத்தியை ஊட்டுங்கள். உங்கள் மகளுக்கு நல்ல புத்தியை ஊட்டுங்கள்... இப்படிப்பட்ட பாலியல் வக்கிரங்களை தூண்டும் காரணிகள் என்னவென்று சிந்தியுங்கள் அப்படிப்பட்ட காரணிகளை அகற்ற முயலுங்கள்.... அதற்காக போராடுங்கள்.. அதை விடுத்து காயடிக்க சொல்லும் சட்டம் கொண்டுவர முயலாதீர்கள் ஏனென்றால் பெண் ஆணுக்காகவும் ஆண்  பெண்ணுக்காகவும் படைக்கப்பட்டவர்கள்.  நேர் முனை மின்னூட்டமும்  எதிர்முனை மின்னூட்டமும்  இருந்தால் மட்டுமே மின் விளக்கு ஒளி  தரும் ...

மானுடம் அழிய சுனாமியோ- எரிகற்களோ  - பிரளயமோ வரவேண்டும் என்பதில்லை. 
விஷம் கொடுத்தும்  கொல்லலாம். வெல்லம் கொடுத்தும்  கொல்லலாம்  என்று எங்கள் கிராம பகுதியில் சொல்வார்கள் அரசு பாதுகாப்பு என்ற பெயரில் உங்கள் ஓட்டுக்களை குறிவைத்து வெல்லம் கொடுக்கிறது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக