சனி, 9 மே, 2015

ஒரு காதல் கடிதம்

ஒரு காதல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும்.. இல்லையென்றால் நிராகரிக்கப்படும்... 
அதையும் மீறி அண்ணனோ அப்பவோ மிரட்டிவிட்டு செல்வார்கள்... 
அந்த பெண்ணின் அண்ணனால் பாராட்டப்பட்டிருக்கிறதா..??
அந்த காதல் என்னவோ ஏற்றுக்கொள்ளப்பட வில்லை...அந்த அண்ணனின் பாராட்டு 
நான் யோசித்திராதது.."என் தங்கைக்கு கூடிய விரைவில் எங்கள் மாமாவோடு 
திருமணம் செய்ய போகிறோம்.. லெட்டர் நல்லா எழுதி இருக்கீங்க.. 
உங்கள பத்தி சொல்லி இருக்கா.. 
ஆனா நீங்க நினைக்கற மாதிரி இல்ல.." என்று 
மிக நாகரீகமான மறுப்பை வெளியிட்டு சென்றார்..

தொண்ணூறுகளின் இறுதி அது.. இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தேன் நான்... 
ராஜேஷ்குமாரையும், பட்டுக்கோட்டை பிரபாகரையும், சுபாவையும் விடுத்து 
பாலகுமாரன், வண்ணநிலவன் என்று நகர்ந்திருந்த நேரம்...
செங்கல்பட்டு வெங்கட்ரமணா மருத்துவமனையில் பணிபுரிந்த பிரமிளா என்ற 
தேவதைக்கு நான் அப்போது எழுதிய கடிதம் இது..
இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாது.. ஆனால் அவருக்கு மருமகன் கூட 
வந்திருக்கலாம்..அந்த கடித வரிகள்.. என் ஞாபக அடுக்குகளிலிருந்து..

இவன் தினசரி நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறானே.. இப்போது எதற்கு கடிதம்.. என்று 
இந்த கடிதம் உன்னை வியக்க வைக்கலாம்.. இதில் உள்ள விஷயங்கள் உன் புருவங்களை 
உயர்த்த வைக்கலாம்.. உன் விழிகளை விரிக்க வைக்கலாம்.. ஆனாலும் உன்னிடம் 
நேரில் பேசும் போது வடிகட்டியில் சிக்கிய தேயிலை தூளாய் தொண்டைக்குழியிலேயே 
உறைந்து விட்ட வார்த்தைகளை தனியாய் எடுத்து பதிவு செய்யவே இப்படி ஒரு கடிதம்..

உன்னை சந்தித்த போது நான் என்ன பேசினேன் என்பது உனக்கு தெரியும்.. 
ஆனால் உன்னை விட்டு விலகி வந்த பின்பு என்ன செய்கிறேன் என்று 
எனக்கே கூட தெரிவதில்லை.. கோரைப்பாயில் மல்லார்ந்து படுத்து 
மோட்டு வளையில் கீற்றுக்களை எண்ணிக்கொண்டே அன்றைய தினம் நாம் பேசியதை 
எல்லாம் மறுபடி மறுபடி நினைத்துப்பார்க்கிறேன்..

நீ பேசும் போது காற்றின் வேகத்திற்கேற்ப உன் முகம் தழுவிய கொத்து முடிக்கற்றை, 
பேச்சை நிறுத்தாமல் அதனை விளக்க முயலும் வர்ணம் பூசிய நீண்ட விரல்கள்.. 
உன் பேச்சிற்கேற்ப நாட்டியமாடும் காதணிகள்.. ஆச்சர்ய புருவ உயர்த்தல்கள்.. 
யோசனையான புருவ சுருக்கல்கள்.. இப்படி எல்லாவற்றையும் எல்லாவற்றையும்.. 
மறுபடி மறுபடி யோசித்துக்கிடக்கிறேன்..அப்படி யோசித்தாலன்றி என் அன்றை தினம் 
முடிவடையாது இவனுக்கு எங்கேயோ மறை கழன்றுவிட்டது என்றுதானே யோசிக்கிறாய்.. 
ஒருவேளை அப்படியும் இருக்கலாம்.. ஆனால் இவை அனைத்தும் எந்த திட்டமிடுதலும் 
இன்றி அனிச்சையாய் நடப்பது..+

கடந்த மூன்று மாத பழக்கத்தில் என்னையும் அறியாமல்  உன்மீதான என் காதல் 
நிச்சயம் ஏதாவது ஒரு வார்த்தையாய் .. செய்கையாய். வெளிப்பட்டிருக்க கூடும்.. 
அதை நீயும் உணர்ந்திருப்பாய் என்ற என் அசைக்க முடியாத நம்பிக்கையே 
என்னை இப்படி ஒரு கடிதம் எழுத தூண்டியது.. 
நீயும் உணர்ந்திருந்தால் எனக்கு சொல்... உன் கூந்தலில் வைக்கும் ஒற்றை ரோஜா மூலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக