சனி, 9 மே, 2015

திருப்பதிக்கு ஒரு நெடும்பயணம்....

மிகத்திடீரென்றுதான் அந்த பயணம் அமைந்தது... ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்... அவர்களின் பக்கத்துவீட்டுக்காரர் ஏழுமலையானுக்கு கோ தானம் (பசு மாடு உபயம்) செய்வதாய் வாக்கு கொடுத்திருந்த நேர்த்திக்கடனை செலுத்த ஒரு டெம்போ வாகனத்தில் பயணப்பட்டார்கள்... நண்பர் அழைக்க அப்போது அவசர பணிகள் இல்லாத காரணத்தால் நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன்...

அந்த பசுமாட்டை வண்டி
யின் பாரப்பகுதியில் முன்னிறுத்தி கயிற்றால் பிணைத்துவிட்டு பின் பகுதியில் அமர்ந்து பயணித்தோம்... திருத்தணி- நகரி கடந்து வாகனம் கீழ்திருப்பதியை சென்றடைந்தது... அங்கு இருந்த கோசாலையில் நேர்த்திகடனான பசுவை ஒப்படைத்தபிறகு எங்கள் பயணம் ஏழுமலையான் தரிசனம் நோக்கி புறப்பட்டது...
அப்போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்ததால் கால்நடை பயணமாக மலையேற ஒருமனதாய் முடிவு செய்யப்பட்டு பயணம் தொடங்கியது...
ஆரம்பத்தில் மிக சுலபமாய் இருந்த பயணம் தூரம் கடக்க கடக்க.. சக்தி குறைய குறைய.. மிக கடியதோர் பயணமாக இருந்தாலும்.. ரசிப்புடனே கடந்தோம்.. நடு நடுவே சற்று நேர இளைப்பாறலும். "கோவிந்தா. கோவிந்தா.." என்ற கோஷமும் எங்களை படிக்கட்டுகளில் முன்னேற்றி சென்றன.... அல்லது அப்படி நாங்கள் நம்பினோம்...
ஒருவழியால் மேலேறியபின் அங்கிருக்கும் திருக்குளத்தில் புனித நீராடியபின் வெங்கடரமணா.. ஏடுகொண்டல வாடா... ஸ்ரீனிவாசா... கோவிந்த தரிச
னத்திற்காக காத்திருக்கும் பட்டியில் எங்களையும் அடைத்துக்கொண்டோம்... ஒவ்வொரு பட்டியும் மூன்று மணி நேர இடைவெளியில் கடக்க முடிந்தது... ஒன்று.. இரண்டு.. மூன்று... நான்கு....
அடடா.. தெரியாம வந்து மாட்டிகிட்டோமோ... என்று நினைக்க வைத்தது அந்த காத்திருப்பு...
அவ்வப்போது புளியோதரை- பொங்கல்- சுண்டல் என்று வழங்கப்பட்டாலும் கூட அந்த காத்திருப்பு என்னவோ பெரும் உபாதையாய் இருந்தது....
ஒரு வழியாக 18 மணி நேர காத்திருப்புக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி நெருங்கி.. இதோ.. இன்னும் சில நிமிடங்களில்.. "கோவிந்தா... கோவிந்தா...... பணக்காரகடவுளின் பார்வை மட்டும் என் மீதும் பட்டுவிட்டால்.... அட அட.... அடுத்த விசிட்ல கட்டா கொண்டுவந்து கொட்றேன் " ... மனசுக்குள்ளயே உரக்க சொல்லிக்கொண்டேன்...

நெருங்கிவிட்டேன்.... வெளிச்ச பிரயோகத்தில் ஜொலிக்கும் அலங்காரத்தில் ஏழுமலையான்... 30 வினாடிகள் கூட இல்லை... அந்த புகை மண்
டலத்திலும் வெளிச்ச பிரவாகத்திலும் லேசாக கண்மணி சுருங்கி வெளிபிம்பத்தை உணர்ந்து மூளையின் சேமிப்பு பகுதியை சென்றடையும் முன்பாகவே..."ஜருகண்டி... ஜருக்கண்டி..."

ஏழுமலையானுக்கும் அதே பிரச்சினைதான் போலிருக்கிறது.... அவர் பார்த்திருந்தால் நானும் இந்நேரம் பணக்காரனாகி இருக்க வேண்டுமே... இழப்பு இப்போது அவருக்கும் தான்... "கட்டாய் கொண்டு வந்து கொட்றேன்" என்ற என் உரத்த சத்தம் நடைமுறைக்கு வராமலேயே நிற்கிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக