சனி, 9 மே, 2015

நரபலி கேட்கிறதா இன்றைய கல்வி..???

பணம் என்ற மாரீச மானை துரத்தி துரத்தி பிடிபடாமல் ஏமார்ந்த ஆத்மாக்கள் தங்களின் வாரிசுகளாவது அந்த மானை வேட்டையாட வேண்டும் என்பதற்காக அவர்களின் வேகத்திற்காக பிடித்துக்கொடுக்கும் பஞ்சகல்யாணி குதிரையாய் கல்வியை மாற்ற முற்பட்டதன் விளைவே இந்த மாணவர் தற்கொலைகளும் மாணவர்கள் செய்யும் கொலைகளும்.
புத்தகங்களில் இருப்பதை எல்லாம் விடைத்தாள்களுக்கு மற்றும் ஊடகப் பொருளாய் மாணவர்
களை மாற்றும் கல்விமுறையும்... மார்க்குகளின் அடிப்படியில் மட்டும் வேலை வாய்ப்புகளும் அதனை தொடர்ந்த ஐந்திலக்க ஊதியங்களை அள்ளிக்கொடுக்கும் கார்பொரேட் நிறுவனங்களும் மாணவர்களை கத்தியோ -கயிறோ எடுக்கத்தூண்டுகின்றன ..
இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு... கல்லூரிகளில் கொடுக்கப்படும் கவுன்சிலிங் பயனளிக்குமா..?? மாணவர்களை கிழிக்கும் புத்தகங்களால் தான் நாளைய சமுதாயம் நடை போடுமா...?? கேள்விகள்... கேள்விகள்...

பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன..?


தங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வில்லையோ - தாங்கள் எங்கெல்லாம், என்ன காரணத்திற்காக புறக்கனிக்கப்பட்டோமோ - தங்களால் என்ன முடியவில்லையோ - தங்களின் எந்த கனவெல்லாம் நிறைவேற வில்லையோ - அதையெல்லாம் தங்களின் பிள்ளைகளின் மனதில் விதைக்க முற்படாமல் திணிக்க முற்படுவதால் தான் அவர்களை படி, படி, படி, என்று படுத்துகிற நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்...

குழந்தைகள் கர்ப்பத்திலேயே முடிவு செய்துகொண்டு பிறப்பதில்லை... நான் எஞ்சினியர் ஆக வேண்டும்.. நான் டாக்டர் ஆக வேண்டும் என்று...

அவர்கள் வாழும் சூழலும், வளரும் சூழலுமே அவர்களுக்கு தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன... பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதுசார்ந்த சூழ்நிலையை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.. அதன் உயர்வை அவர்களுக்குள் ஊட்ட வேண்டும்.. அந்த துறையின் ஜாம்பவான்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.. தங்களின் சொத்துக்களுக்கு தமது பிள்ளைகள் எப்படி வாரிசோ... அதே போல் தான் தங்களின் கனவுகளுக்கும் தங்கள் பிள்ளைகள் வாரிசு என்று நினைப்பதில் தவறில்லை...

ஆனால் அந்த கனவை பிள்ளைகளுக்குள் விதையுங்கள்... அதற்கு வாய்ப்பு என்னும் தண்ணீர் ஊற்றி வளருங்கள்... பின்னாளில் உங்கள் கண்முன் உங்கள் கனவுகள் விருட்சமாய் உங்கள் பிள்ளைகளாலேயே நிஜமாக்கி வளர்க்கப்படும்.

அரசாங்கத்தின் கடமை என்ன..??

வெளிநாட்டு முதலீடை ஈர்கிறேன் பேர்வழி என்ற பெயரில் உலகமயமாக்களில் கார்பொரேட் நிறுவனங்களுக்கு கதவுகளை அகல திறந்த அரசாங்கம் செருப்பின் அளவுக்கு காலை வெட்ட முயலுவதை என்னவென்று சொல்ல...

இவர்கள் கேம்பஸ்  இண்டர்வியூ என்ற பெயரில் மதிப்பெண்களை வைத்து ஆட்களை தேர்வு செய்ய பொறியியல் கல்லூரிகளை குறிவைக்க.. மனிதர்களையும் அறிஞர்களையும் உருவாக்கி வந்த கல்விக்கூடங்கள்,  இயந்திரங்களை வார்த்தெடுக்கும் மோல்டிங் தொழிற்சாலைகளாய் மாறிப்போயிருக்கிறது...

பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே நல்ல கூலிக்காரர்கள் கிடைப்பார்கள்... கலை கல்லூரிகளில் படிப்பவர்கள் பியூன் வேலைக்கு கூட லாயக்கற்றவர்கள் என்ற மாயையை இந்த கார்பொரேட் நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருப்பதால் தான்..

புரிகிறதோ - புரியவில்லையோ.. பொறியியல் கல்லூரிக்குள் நுழைய மார்க் மட்டுமே அவசியம் என்று பள்ளிக்கல்வி நிறுவனங்களும்......, பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளை தட்ட மார்க்குகள் தான் சாவிகள் என பொறியியல் கல்லூரி நிறுவனங்களும் மாணவர்களை பிழியத்தொடங்குவதால்.. என்ன படிக்கிறோம் என்ற சுயம் இழந்து மாணவர்கள் திண்டாடி திண்டாடி.. இதில் தொடரவும் முடியாமல் - விலகவும் முடியாமல்.. கடைசியாய் தற்கொலை - அல்லது கொலை என்ற முடிவெடுக்க முற்படுகிறார்கள்...

எதிர்கால தூண்கள் இப்படி தடம் மாறி போவதன் விளைவு இன்னும் இருபதாண்டுகளில் இந்திய ஒரு மனித இயந்திரங்களின் நாடு என்றோ - இல்லை மன நோயாளிகளின் கூடாரமென்றோ ஆகி விடாதா..??
நூறு தொழிலாளர்கள் பணி புரியும் நிறுவனமென்றால் குறைந்த பட்சம் முப்பது சதவிகித ஆட்களாவது கலைக்கல்லூரிகளில் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கலாம்... இதன் மூலம் கலைக்கல்லூரியில் பயில்பவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனகளில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் - பெற்றோர்கள் மனதில் விதைக்கலாம்..
பன்னிரெண்டாம் வகுப்பு முழுத்தேர்வில் எதோ ஒரு காரணத்தால் மதிப்பெண் குறைந்தால் நிச்சயம் அந்த மாணவனுக்கு நல்ல கல்லூரிகளில் மருத்துவமோ - பொறியியலோ படிக்க இயலாமல் போகும் நிலை மாற்ற... குறைந்த பட்சம் 10 , 11 , 12 ம வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் அவர்களுக்கு அந்த பிரிவுகளில் இடமளிக்கப்பட்டால் ஒரு தேர்வில் மதிப்பெண் குறைந்திருந்தால் கூட அடுத்த தேர்வில் அதனை ஈடு செய்ய இயலும்..
பாடத்திட்டங்களில் மட்டும் மதிப்பெண்களை கணக்கிடாமல் விருப்பத்துறை - விளையாட்டு - கலை -மதிப்பெண்களில் இருந்து குறைந்த பட்சம் 10 சதவிகித மதிப்பெண்களையும் கணக்கிலெடுக்கும் பொது அவர்களின் மனம் சார்ந்த விஷயங்களும் இந்த பொறியியல் - மருத்துவ துறைகளுக்கு அவசியம் என பெற்றோர்களும் - கல்வி நிறுவனங்களும் அதற்கும் முக்கியத்துவம் தர தொடங்குவார்கள்.. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும்..

கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டியது என்ன...?

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவன் எஞ்சினியர் ஆவதும் டாக்டர் ஆவதும் எடுக்கும் மார்க்கினிலே... என்ற மோசமான நிலைமை அவர்களை அந்த நிலைமைக்கு தள்ளுகிறது... பத்தாம் வகுப்பு முழுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்று பேர்வாங்கி வைத்திருக்கும் பள்ளிகள் வாய்ப்புகளை வழங்குவதால்.. ஒன்பதாம் வகுப்பு முதலே மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தை படிக்க தூண்டப்படுகிறார்கள்... பன்னிரெண்டாம் வகுப்பில் முழுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் - பொறியியல் வாய்ப்புகள் வழங்கப்படுவதால் தான் அந்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகி போகிறார்கள்...

நம்பர் ஒன நம்பர் டூ என்ற தர வரிசை மட்டும் கரத்தில் கொள்ளாமல் அவர்கள் அறிஞர்களை உருவாக்க முயல வேண்டும்... பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு மேல்நிலை தேர்வில் எத்தனை பாடப்பிரிவுகள் உள்ளன .. அவைகள் மூலம் எந்த துறை சார்ந்த கல்லூரிகளுக்கு செல்லலாம் என்பதை பத்தாம் வகுப்பிலேயே வழிகாட்ட வேண்டும்..

அதே போல்.. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எந்த பாட பிரிவு தேர்ந்தெடுத்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.. அவர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்பது போன்ற தகவல்களை வழங்கும் மையங்களை அமைக்க முன்வர வேண்டும்... எல்லாவற்றிற்கும் மேலாக மதிப்பெண்களின் அடிப்படையில் இடமளிப்பதை தவிர்த்து திறமைக்கு முன்னிடம் கொடுக்கவும், பின் தங்கிய மாணவர்களை முன்னேற்ற வாய்ப்பளித்தும் , வியாபாரம் தாண்டி - எதிர்கால இந்தியாவை உருவாக்குகிறோம் என்ற அவர்களின் கடைமையை உணர்ந்து செயலாற்றினால்.. இந்த மன அழுத்த தற்கொலைகளின் ஆணி வேறை பிடுங்க இயலும்...
செய்வார்களா..????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக