திங்கள், 27 ஜூலை, 2015

மக்கிப்போன பழைய வரலாற்றை தூசுதட்டி மதக்கலவரங்களை தூண்டுவோரை புறக்கணிப்போம்....!!!



சுமார் 200 ஆண்டுகாலம் அடிமைகளாய்இருந்தவர்கள் உரிமைக்காக போராடியதை வன்மமாக நினைக்காமல் அந்த மக்கள் நல்லபடியாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணம் அந்நிய ஆங்கிலேயர்களிடம் இருந்தது.... ஆனால் நீங்கள் வெட்டிக்கொண்டு செத்தாலும் பரவாயில்லை... நாங்களும் எங்கள் வாரிசுகளும் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் தான் நம்நாட்டு தலைவர்களிடம் மேலோங்கி இருக்கிறது..

எப்படி...?? ஒரு சம்பவத்தை நினைவு கூர்வோமா???

மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்த தகவல் அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த திரு. மௌண்ட் பேட்டன் பிரபு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு வசதிகள் அதிகமில்லாத காலம் அது.... மவுன்ட் பேட்டன் பிரபு அவர்கள் தன்னுடைய காரியதரிசியை அழைத்து உடனடியாக ஆகசவாணி வானொலி நிலையத்தின் மூலமாக
"காந்தி ஒரு இந்துவால் சுட்டுக்கொல்லப்பட்டார்" என அறிவிக்கச் சொன்னார் அவர்.

அருகில் இருந்த வேறொருவர் திரு மவுண்ட்பேட்டன் அவர்களை கேட்டார்...
"காந்தியடிகள் இறந்த தகவல் தவிர வேறெந்த தகவலும் தெரியாது.. யார் சுட்டார்கள் என்ற விபரம் தெரியாது..பின், ஏன் இந்துவால்... சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அறிவிக்கச் சொல்கிறீர்கள்..? "

மவுண்ட்பேட்டன் அவர்கள் சொன்னார்...." இப்பொழுதுதான் நாடு பிரிவினையின் காரணமாக ஒரு பெரிய மதக்கலவரத்தின் மூலம் மிக மோசமான வன்முறையைச் சந்தித்துள்ளது... இப்போது காந்தி ஒரு முஸ்லிமால் கொலை செய்யப்பட்டார் என்று யாரோ சில விஷமிகளால் வதந்தி பரப்பப் பட்டால் நாடு இன்னும் ஒரு மிக பயங்கரமான கலவரத்தை சந்திக்க வேண்டும்.. இந்து முஸ்லிம் கலவரம் மிக பெரிதாய் வெடித்து லட்சகணக்கான உயிர் சேதம் ஏற்படும் எனவேதான் அப்படி ஒரு கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்துவால் என்று சொல்ல சொன்னேன்... சுட்டது யார் என்பதை பிறகு விசாரித்துக்கொள்ளலாம்.. ஆனால் வதந்தி மூலம் மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்கவே, அது உண்மை இல்லை என்றாலும் பரவாயில்லை என்று அவ்வாறு அறிவிக்கச்சொன்னேன்..” என்றாராம்...!!!

ஆனால் இன்றைய நம் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்...??

மொகலாயர்கள் இந்துக்களை அடிமை படுத்தினார்கள்... இந்துக்கள் பாபர் மசூதியை இடித்தார்கள் என்று மக்கி மண்ணாய் போன வரலாற்று நினைவுகளை எல்லாம் மக்கள் மறந்து விடாமல் திரும்ப திரும்ப பேசி மதக்கலவரங்களை தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள்... மக்கள் அடித்துக்கொண்டால்தான் நமக்கு லாபம் என்று நினைக்கும் நம் தலைவர்கள் எங்கே..???
நம்முடைய ஆட்சியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. மக்கள் அமைதியாய் வாழ வேண்டும் என்று நினைத்த வெள்ளைக்கார மவுண்ட்பேட்டன் பிரபு எங்கே...???
இப்படியாக மக்கிப்போன வரலாற்றை தூசுதட்டி மக்களை தூண்டிவிட்டு “மதவாதி... மதவாத சக்திகள்” என்றெல்லாம் மக்களை உசுப்பிவிடும் குள்ளநரி கூட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக