திங்கள், 27 ஜூலை, 2015

நட்பு Vs சொந்தம்

ள்ளூரில் விளையாடியபோது உடன் விளையாடியவர்கள்... பள்ளி -கல்லூரிகளில் பயின்றபோது உடன் பயின்றவர்கள்... உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணி புரிந்தபோது உடன் பணிபுரிந்தவர்கள்... ஹாஸ்டல்- பேச்சலர் அறைகளில் உடன் தங்கி இருந்தவர்கள்... இப்படியாக பல்வேறு தளங்களில் நண்பர்கள் சேர்ந்த காலம் மாறி நடப்பு காலங்களில் விரிவடைந்திருக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலான கருத்து பரிமாற்றங்கள் வாயிலாக நண்பர்களை சேர்க்கும் நடைமுறை இப்போது அதிகமாயிருகிறது...
இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று... அதே நேரம் இப்படி அதிகரிக்கும் முகமறியா நட்புகள்- அல்லது சில நேர சந்திப்புக்களுடனான நட்புகள் காரணமாக சொந்தக்காரர்களை புறக்கணிக்கும், கண்டுகொள்ளாமல் இருக்கும் பாங்கு அதிகரித்திருக்கிறது... இது வரவேற்கப்பட வேண்டிய விஷயமா.??
அவ்வாறு முகமறியா- சிலநேர சந்திப்பு நட்புகளை முக்கியமாக கருதும் ஓரிருவரிடம் இதுபற்றி கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்... "நட்புகள் எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை... அவர்களிடம் மட்டும் தான் பொதுவான விஷயங்களை பேசமுடியும்... சொந்தங்கள் என்றால் எதையாவது எதிர்பார்ப்பார்கள்.. அவர்களோடு பேசும்பொழுது அமெரிக்க பொருளாதாரத்தை பற்றியோ ஐரோப்பிய நாகரீகத்தை பற்றியோ, ஓஷோ முதல் எஸ் ரா பற்றியோ பேச முடியாது... பேச்சு நம்மை சுற்றியோ அல்லது நம்மில் ஒருவரை பற்றியோ தான் இருக்கும்... ஆகவே தான் சொந்தங்களை விட நண்பர்களை முக்கியமாக கருதுகிறேன்..."


இப்படிப்பட்டவர்களுடன் பேசும்போது நேரடியாக சிரித்து அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாமே என்ற இங்கிதம் கருதி உதடுகளை இறுக்க மூடிக்கொண்டாலும் தூரமாய் வந்து குலுங்கி குலுங்கி சிரித்திருக்கிறேன்...


     கனவில் கண்ட கலாக்காயை நம்பி கையிலிருந்த பலாக்காயை தூக்கி எறிந்த பழமொழிதான் ஞாபகம் வருகிறது... அவர்களின் கருத்துக்கள் நியாயமாக தெரிந்தாலும் யோசித்து பார்த்தால் ஒன்றுமட்டும் விளங்கவே இல்லை... அமெரிக்க பொருளாதாரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதுதான்... ஐரோப்பிய நாகரீகம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதுதான்... அதே நேரம் இது எல்லாம் தெரியாமல் வாழவே முடியாதென்றால்.. அப்படி எல்லாம் இல்லையே... வாழலாமே என்றுதான் பதில் வரும்... ஆனால் நம்மை சுற்றி உள்ள சொந்த பந்தங்களை- சமூகத்தை பற்றி தெரியாமல் வாழமுடியுமா என்றால் முடியாது... 


     நண்பர்கள் இல்லாதவர்கள் அனாதைகள் இல்லை.. ஆனால் சொந்த பந்தங்கள் இல்லாதவர்கள் அனாதைகள்... இன்று நாம் நல்ல நிலையில் இருக்கலாம்.. அதனால் சொந்தக்காரர்களில் யாராவது உதவி கேட்டு வரலாம்.. இன்று எளியவர்களாய் இருக்கும் சொந்தக்காரர் நாளை வலியவராகி நாம் அவரிடம் உதவி கேட்கும் நிலை வரலாம்... இப்போது அவர்கள் உதவி கேட்பார்கள் என்று புறக்கணித்தால் நாளை நாம் எங்கே போய் நிற்க முடியும்...?? 
அதற்காக நண்பர்கள் உதவ முன்வரமாட்டார்கள் என்று சொல்லவில்லை.... ஆனால் சொந்தக்காரர் என்ற உரிமை வேறு... இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல சிறுவயதில் விளையாடிய நண்பர்களில் எத்துனை பேர் இன்றும் நண்பர்களாய் இருக்கிறார்கள்...?? இதை பள்ளி-கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உடன் தங்கி இருந்த நண்பர்கள் என்று எந்த நிலையிலும் கேட்கலாம்... 


         நண்பர்கள் என்பவர்கள் பல்வேறு பருவங்களில், பல்வேறு காலங்களில் , பல்வேறு நிலைகளில் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.. ஆனால் சொந்தக்காரர்கள் என்பவர்கள் எந்த காலத்திலும் மாறுவதே இல்லை... இதில் பெற்றோர்கள்- உடன் பிறந்தவர்கள் என்ற சொந்தங்களை நாம் கணக்கில் எடுக்க .வேண்டாம். அவை சொந்தங்களுக்கு அப்பாற்பட்ட உயிர் பந்தங்கள் .. ஆனால்.. மாமா , அத்தை, அத்தான், அண்ணி, சித்தி, சித்தப்பா, தாத்தா , பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அவர்களின் குழந்தைகள் என்று எந்த சொந்தமாக இருந்தாலும் நாம் பிறந்தபோது அவர்கள் என்ன சொந்தமோ நாம் இறக்கும்போதும் அதே சொந்தம் தான்.... நமது தாய் வயிற்றில் நாம் இருந்த காலத்தில் இருந்தே உடன் வந்தவர்கள் அவர்கள்... நம்முடைய வாழ்வின் ஒவ்வொருபடியிலும் ஒவ்வொரு நிகழ்விலும் உடன் இருப்பவர்கள்.. இருக்க போகிறவர்கள்... 
ஒரே ஒரு நண்பர் என்னுடைய வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் உடனிருந்தார் என்று எங்கோ , யாரோ ஒருவர் சொல்லக்கூடுமே தவிர.... எல்லோரும் சொல்ல முடியாது...
அதே நேரம்.. என்னுடைய வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் என்னுடைய சொந்தக்காரர்கள் (கவனிக்கவும்.. சொந்தக்காரர் இல்லை.. சொந்தக்காரர்கள்) உடனிருந்தார்கள் என்று கிட்டத்தட்ட அனைவராலுமே உரக்க சொல்ல முடியும்...

      நண்பர்கள் உதவ மாட்டார்கள்.. எல்லா சந்தர்ப்பத்திலும் உடன் வர மாட்டார்கள்.. என்று சொல்லவில்லை.. ஆனால் அவர்களுக்கு எந்த கட்டாயமும் இல்லை...அவர்களின் அப்போதைய சூழ்நிலையில் நமக்கு உதவமுடியாமலோ, உடனிருக்க முடியாமலோ போகலாம்... நம்முடன் இருப்பது மட்டுமே அவர்களின் வேலை இல்லை.. அவர்களுக்கும் ஒரு குடும்பம், வாழ்க்கை இருக்கிறது.. சந்தர்ப்பமிருந்தால் அவர்கள் வரலாம்.. வராமலும் போகலாம்.. ஆனால் உறவுகள் என்பது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு உடன் வரும் கடமையும் உரிமையும் பெற்றவர்கள்...


      நட்பு என்பது கையிலிருக்கும் டார்ச் லைட் போன்றது.. வெளிச்சம் அதிகமாக தெரியலாம்... மின்கலம் தீரும்வரை தான் அது.. ஆனால் சொந்தம் என்பது கையில் இருக்கும் தீப்பெட்டி போன்றது... எப்போது வேண்டுமானாலும் நமக்கு உதவும்.. இந்த தீப்பெட்டியை வைத்து நமக்கு தேவையான அளவு வெளிச்சத்தையும் உருவாக்கலாம்.. உணவு சமைக்கலாம்.. குளிரை அடக்கலாம்... எதிரியையும் அழிக்கலாம்...

       நீங்கள் நட்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.... அதற்காக சொந்தங்களை புறக்கணிக்காதீர்கள்... அவர்கள் மட்டுமே எந்த சந்தர்ப்பத்திலும் உடன் வரக்கூடியவர்கள்... நட்பு என்பது கண்ணாடி போன்றது... கண்களை பாதுகாக்கும்..மறுக்கவில்லை... ஆனால் சொந்தம் என்பது இமை போன்றது....


எனக்கு கண்ணாடியை விட இமை முக்கியம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக