செவ்வாய், 28 ஜூலை, 2015

கவர்னர்களை மாற்றுவது சரியா??



ஆட்சி மாறிய உடன் மாநில கவர்னர்களை மாற்றுவது சரியானதல்ல என்றும், இது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும் பல்வேறு அரசியல் வாதிகள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்... கவனிக்கவும்.. சட்ட நிபுணர்கள் அல்ல.. அரசியல் வாதிகள்...

நமக்கு பெரிய அளவில் சட்ட ஞானமோ, அரசியல் அனுபவமோ இல்லை என்றாலும் கூட அரசியலை கூர்ந்து கவனிக்கும் ஒரு சாமான்யன் என்றமுறையில் கவர்னர்களை மாற்றுவது சரியானது என்றே தோன்றுகிறது..

ஏனென்றால்... மாநிலங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் கவர்னர் என்பவர் ஐ எ எஸ், படித்த அதிகாரிகள் அல்ல... ஆட்சியில் இருக்கும் கட்சியின் மிக முக்கியமானவர்கள்.. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியில் யாரை "பிரச்சினைக்குரியவர் " என்று நினைக்கிறார்களோ அவர்களின் வாயை அடைக்க "கவர்னர்" என்ற பொறுப்பை கொடுத்து மாநிலங்களுக்கு அனுப்புவதுதான் வாடிக்கை .. .. இது முழுக்க முழுக்க மத்திய ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கட்சியாலேயே எடுக்கப்படும் முடிவு.. இன்னும் சொல்லப்போனால் இப்படி கவர்னர்களை நியமிப்பதுதான் ஜனநாயக விரோத செயல்..

உதாரணமாக கேரளாவின் கவர்னர் பொறுப்பில் இருக்கும் திருமதி ஷீலா தீட்சித் டெல்லி தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் .. இப்படி ஒரு மாநில மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை வேறொரு மாநிலத்தின் உயர்ந்த பதவியில் உட்காரவைப்பதே மாபெரும் குற்றம்.. மேலும், மத்தியில் இதுநாள் வரையில் இருந்த ஒரு ஆட்சியை அகற்றத்தான் மக்கள் வேறொரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.. அப்படி ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களால் நீக்கப்பட்ட பிறகு அதே கட்சியை சேர்ந்த ஒருவர் , பதவி இழந்த அரசால் நியமிக்கப்பட்டு, அப்படி நியமிக்கப்பட்டதாலேயே அந்த பதவியில் தொடர்வார் என்றால் தோற்கடிக்கப்பட்ட கட்சி , மக்கள் மீது மறைமுகமாக தங்கள் ஆளுமையை வைத்துக்கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்??

ஒருவேளை அரசு நிர்வாகத்தில் தகுதியோடு இருந்த கட்சி சாராத நிர்வாகத்துறை வல்லுனர்கள் மாநில கவர்னர் பொறுப்பில் அமரவைக்கப்பட்டிருந்தால்... ஆட்சி மாற்றங்களால் கவர்னர் பதவிக்கு எவ்வித பிரச்சினையும் வர கூடாது...
அப்படி இல்லாமல் மாநில மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் , ஆட்சிக்கட்டிலில் இருக்கும் கட்சியால் ஓரம்கட்டப்பட்டு அவர்களால் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க அவர்களின் வாயை அடைக்கும் விதமாக கொடுக்கப்பட்ட கவர்னர் பதவிகளை சுமந்து திரிபவர்கள் யாராக இருப்பினும், ஆட்சி மாறிய உடன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக