திங்கள், 27 ஜூலை, 2015

எக்ஸிட் போல் - கார்பொரேட் சூதாட்டம்.



கடந்த இரண்டு நாட்களாக வெகுஜன காட்சி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அதி தீவிரமாய் அலசப்படும் விஷயம்...

தேர்தலுக்கு பின்னான கருத்து கணிப்புகளை வெளியிடிருக்கின்றன புள்ளிவிபர நிறுவனங்களுடன் இணைந்த பெரிய ஊடக நிறுவனங்கள்...

ஆளாளுக்கு "இன்னாருக்கு இத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்" என்று தங்கள் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்...ஆனால் இதில் பயனடைய போவது யார் என்பதுதான் கேள்வி. இந்த தேர்தலுக்கு பின்னான கருத்துகணிப்புகள் பி ஜே பி கூட்டணிக்கு 270 க்கு மேலும் , காங்கிரஸ் கட்சிக்கு 75 க்கு பக்கமும், இதர கட்சிகளுக்கு இவ்வளவு இடங்கள் என்று மாநில வாரியாகவும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டிருக்கின்றன...

ஆனால்... "அடடா.. பி ஜே பி க்கு இவ்வளவு இடங்கள் கிடைக்குமா என்று அதனை எப்படியாவது மாற்ற வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சியோ... "அடடா.. மாநில கட்சிகளுக்கு இவ்வளவு இடங்கள் கிடைக்க போகிறதா.. அதை எப்படியாவது மாற்றி தங்கள் கட்சி அந்த இடங்களை பிடித்து விட வேண்டும்" என்று வேறெந்த மத்திய கட்சியோ நினைக்க முடியாது.. அப்படி நினைத்தாலும் அவர்களால் மாற்றவும் முடியாது... ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை பயன் படுத்தி கூட்டணி பேரங்கள் அரங்கேறும்..

அதோடு மட்டுமல்ல... கிரிக்கெட் விளையாட்டில் குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் நடை பெற்ற சூதாட்டம் இப்போது மிக மிக பெரிய அளவில் நடைபெறும்... ஒரு அணியின் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்க கூடிய ஓரிரண்டு வீரர்களை வளைக்கவே சில பல கோடிகளை முதலீடாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்த விஷயங்களை நாம் பார்த்திருக்கிறோம்... ஓரிரு மாதங்களுக்கு முன்பு , மும்பைக்கு அடுத்த போலீஸ் கமிஷனராக யார் வருவார் என்று சூதாட்டம் நடந்ததாகவும் அதில் கோடிகள் புரண்டதாகவும் கூட பத்திரிகை செய்தி வெளியானது..

(புதிய தலைமுறை  தொலைகாட்சியில்  "நேர்பட பேசு" நிகழ்ச்சியில் இது தொடர்பான ஒரு நேயரின் கேள்விக்கு ஒரு பத்திரிக்கையாளர் மிக மழுப்பலாய் பதில் சொல்லி சமாளித்தார் )

அதே போல இப்போது இந்தியாவை ஆளப்போகும் அடுத்த கட்சி எது என்பதில் தொடங்கி, ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி அதிக இடங்களை பெரும் என்பது, எந்த தொகுதியில் எந்த நபர் வெற்றி பெறுவார் என்பது.. எவ்வளவு வாக்கு வித்தியாசங்கள் இருக்கும் என்பது வரையிலான சூதாட்டம் பல்வேறு தளங்களில் முழு வீச்சாய் நடக்க மட்டுமே இந்த "எக்ஸிட் போல்" உதவும்...

மேலும் பங்கு வர்த்தகத்தில் விளையாடும் கார்பொரேட் நிறுவனங்கள் தங்கள் நிறுவன பங்குகளை உயர்த்திக்கொள்ளவும் இந்த "எக்ஸிட் போல்" உதவும்.. மற்றபடி மக்களுக்கு இதனால் ஒரே ஒரு நயா பைசாவுக்கும் உபயோகமில்லை... இந்த நாட்டிற்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை... எப்படியும் மே- 16 ல் எல்லா விபரமும் தெரியப்போகிறது.. மூன்று நாட்கள் முன்னதாக சொல்லி இவர்கள் நாட்டை வளப்படுத்தப்போகிறார்களா???

வழக்கம் போல "ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊடக துணையுடன் ஊதி பெரிதாக்கி ஜிகினா சுற்றி பிரபலப்படுத்தி லாபம் பார்க்கும் கார்பொரேட் கம்பெனிகள் இம்முறை தங்களோடு சேர்ந்து சூதாட்டக்காரர்களும் கோடிகளில் புரளத்தான் "எக்ஸிட் போல்" என்ற யுக்தியை கையாண்டிருக்கின்றன..

தி மு க வின் மு க ஸ்டாலின் அவர்கள் தங்களுக்கு சாதகமான முடிவுகள் வர வில்லை என்றுதான் ஒரு கருத்தை சொன்னார்... அவர் சொன்ன நோக்கம் வேறாக இருந்தாலும், சொன்ன விஷயம் மிக மிக சரியானதே...

"இது கருத்துக்கணிப்பு அல்ல.. கருத்து திணிப்பு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக