மனிதாபிமானம் மரித்து விட்டதாய் நினைப்பதா.... இல்லை இதுதான் எதார்த்த வாழ்க்கையா....??
மூன்று சம்பவங்களை நினைவு கூர்கிறேன்..
சம்பவம் ஒன்று:
கங்கை நதியில் சுழன்றோடும் வெள்ளத்தில் படகோட்டி இருபது பேர் ஒரு படகில் பயனித்துக் கொண்டிருக்கிறார்கள் .. படகு நதியின் ஆழமான பகுதியில் சென்றுகொண்டிருந்தது.. அந்த படகில் பயணித்த ஒரு குழந்தை தன்னுடைய கையை படகின் பக்கவாட்டில் தண்ணீரில் வைத்து விளையாடியபடி வந்தது.. திடீரென ஒரு முதலை குழந்தையின் கையை கவ்வி இழுக்க குழந்தையின் பெற்றோர் குழந்தையை விடாமல் இழுக்க படகு மிக பயங்கரமாய் ஆட்டம் காண.. எல்லோரும் கூச்சலிட்டார்கள்... தண்ணீரில் முதலையின் பலம் அதிகம்.. ஆகவே குழந்தையை அது வேகமாக இழுக்க படகு கவிழும் நிலை... படகோட்டி சொன்னார்.... " முதலை தன்னுடைய பிடியை விடாது... அப்படி இழுத்தால் படகு கவிழும்.. படகில் இருக்கும் அத்தனை பெரும் நீரில் விழுந்து இறக்க நேரும்.. அதனால் குழந்தையை விட்டு விடுங்கள்... "
எவ்வளவோ போராடியும் முதலையிடமிருந்து குழந்தையை விடுவிக்க முடியாததால் குழந்தையை விடுவதென முடிவு செய்து அழுது கொண்டே குழந்தையை தண்ணீரில் விட்டு விட்டனர்... அப்போது அந்த குழந்தையின் தந்தை செய்த காரியம் தான் இங்கே குறிப்பிடத்தகுந்தது...குழந்தையின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை கழட்டிக்கொண்டு குழந்தையை முதலையிடம் விட்டார்...
சம்பவம் இரண்டு:
எங்கள் ஊர் அருகில் இருக்கும் பரக்கலக்கோட்டை என்ற ஊரில் போது ஆவுடையார் கோயில் ஒன்று இருக்கிறது.. கார்த்திகை மாதம் அனைத்து திங்கட்கிழமைகளிலும் அங்கே சிறப்பு தரிசன பூஜைகள் நடக்கும்.. கடைசி திங்கள் அன்று அந்த பகுதியில் இருக்கும் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கள் வேண்டுதல்களை, காணிக்கைகளை கொடுப்பது வழக்கம்... அந்த கோயில் ஒரு காட்டாற்றின் கரையில் இருக்கிறது.. கார்த்திகை மாதம் நல்ல மழைகாலமென்பதால் வெள்ளம் அந்த காட்டாற்றில் சுழன்றோடும்... ஒரு தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்திய பின் ஒரு குழந்தையை அந்த ஆற்றில் குளிக்க வைத்து கரையேற்றி விட்டு அடுத்த குழந்தையை குளிக்க வைத்துக்கொண்டிருந்தார்... எதிர்பாராமல் ஏற்கெனவே குளித்து கரையேறிய குழந்தை பாலத்தில் ஏறி விளையாட நடு ஆற்றில் விழுந்து விட்டது... வெள்ளம் இழுத்து சென்றது.. அந்த தாய் "ஐயோ.. ஐயோ..." என நெஞ்சில் அடித்துக்கொண்டு கரை நெடுக கொஞ்ச தூரம் ஓடினார்.... தலையிலும் மார்பிலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார்... அடுத்த இரண்டு நாட்கள் கழித்து வெகு தூரத்தில் அந்த குழந்தையின் சடலம் புதரில் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது...
சம்பவம் மூன்று:
சுமார் பன்னிரண்டு ஆண்டுகால முயற்சிக்கு பின் தன்னுடைய மகனை வெளிநாட்டிற்கு வழியனுப்பி விட்டு வீடு திரும்பிய தந்தை நோயால் பெடிக்கபட்டு படுக்கையில் விழுந்தார்.. வெகு நாட்களுக்கு பிறகே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.... எவ்வளவோ மருத்துவம் செய்தும் நிலைமை கை மீறி போய் விட அனைத்து மருத்துவர்களும் கை விட்ட நிலையில் (எட்டு மாதங்களில்) மகனுக்கு நிலைமையின் தீவிரம் சொல்லப்பட மகன் ஊர் திரும்புகிறான் .. ஆஜானுபாகுவாய் வழி அனுப்ப வந்த தந்தை படுக்கையில் வெறும் தோலால் போர்த்திய எலும்பு கூடாய் கிடக்க கதறி துடிக்கிறான் மகன்.... புற்றுநோய் தன்னுடைய தந்தையை கபளீகரம் செய்துவிட்டது என்பது அவனுக்கு நன்றாக தெரிகிறது... தந்தை தன்னுடைய கடைசி நாட்களை எண்ணத் தொடங்கி விட்டார் என்பதை உணர்ந்த அவன் தந்தையின் திருப்திக்காக பக்கத்து ஊரில் இருந்து ஒரு மருத்துவரை தினசரி வரவழைத்து சிகிச்சை செய்கிறான்... நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமாகிறது.. எந்த நேரமும் அவர் இறப்பை தழுவக்கூடும்.. ஆனால் எப்போதென்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்... அவனது வெளிநாட்டுப்பயணம் என்பது இனி வரும் அவனது எதிர்காலம்...... அவனது குடும்பத்தின் எதிர்காலம்..... வேறு வருமானம் எதுவுமிலாத நிலையில் அந்த வெளிநாட்டுப்பயணம் என்பது ஒரு ஜீவா மரணப்போராட்டத்தின் நிலை.... இந்த நிலையில் அவனது தந்தை மரணத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் அவர் மீண்டு வர வாய்ப்பே இல்லை என்பது உறுதி.. ஆனால் அந்த மரணம் எப்போது என்பதே அனைவரின் கேள்வி....... ஒரு நாள் , இரண்டு நாள்.. பதினான்கு நாட்கள் போய் விட்டது.... உள்ளூர் மருத்துவர் அவரது பணத்தேவைகளை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டார்.. இந்த பதினான்கு நாட்களில் அந்த மகன் , அந்த தந்தைக்கு என்னெல்லாம் சேவை செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தான்.. அதனை அந்த தந்தை நன்றாக உணர்ந்து கண்ணீர் வடித்தார்... இப்படியான நாட்கள் நகர, பன்னிரண்டு ஆண்டுகால முயற்சி என்பதாலும், வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து எட்டே மாதங்கள் ஆனதாலும் வீட்டில் இருந்த மற்றவர்கள்.."நீ கிளம்பி போ... என்ன நடந்தாலும் நடக்கட்டும்... உன்னோட பொழப்ப கெடுத்துக்காத.." என்று வற்புறுத்த, அந்த தந்தையே கூட... நீ கவலை படாத.. குடும்பத்த பொறுப்பா பாத்துக்க... இருக்கிற வேலைய விட்டுடாத.... நீ போ,,, " என்று வற்புறுத்த... கண்ணீர் மல்க அவன் கிளம்பி மறுபடியும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான்.... அவன் திரும்பி போன நான்காம் நாள் அந்த தந்தை இறைவனை சென்றடைந்தார்....
வெளிநாடு போன வகையில் கடன், தந்தையின் மருத்துவ செலவுகளின் மீதான கடன், விமான கட்டணத்திற்கான கடன்,, வெளிநாட்டு அனுபவமோ, மிகப்பெரிய அளவிலான கல்வித்தகுதியோ இல்லாததால் குறைந்த சம்பளம்.. இந்த நிலையில் தந்தைக்கு கொள்ளி வைபதர்காக மட்டும் அவன் ஊருக்கு வருவதென்றால் மேலும் ஓரிரு லட்சங்கள் ஆகும்.... தந்தை உயிரோடு இருந்த போதே அவருக்கு எவ்வளவு சேவை செய்ய முடியுமோ அதை செய்து விட்டேன்,.. அதை அவர் நன்கு உணர்ந்தார்.... அவரது உயிர் பிரிந்த பின் நான் ஊருக்கு வந்து அழுது புரள்வதால் ஊர்காரர்கள் வேண்டுமானால் மெச்சலாமே தவிர அது அவருக்கு தெரியப்போவதில்லை... எனவே நான் ஊருக்கு வரவில்லை.. நீங்களே எல்லாவற்றையும் செய்து விடுங்கள்" என்று சொல்லி விட்டான்....
இப்போது .உங்களுக்கான கேள்வி....
மேற்கண்ட மூன்று சம்பவங்களிலும் இருந்து தெரிவது என்ன??? மனிதாபிமானம் மரித்து விட்டது எனக்கொள்ளலாமா??? பணம் தான் முக்கியமா??? இல்லை இது தான் எதார்த்த வாழ்க்கையா????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக