திங்கள், 27 ஜூலை, 2015

விட்டுக்கொடுங்கள்

ஒருமுறை என் நண்பன் ஒருவனுடன் வேறோரு பகுதியில் சுண்டாட்டம் 
(கேரம் போர்டு) விளையாடும் ஒரு இடத்திற்கு சென்றேன்...

அங்கே நண்பர்களுக்குள் பந்தயம் கட்டி சுண்டாட்டம் விளையாடினோம். 
அந்த பகுதியில் யாராலும் வெல்ல முடியாத ஒரு திறமையான ஆட்டக்காரராக 
திகழ்ந்த ஒருவருடன் நான் நேரடியாய் மோதும் (விளையாட்டில் தான்) சூழல் ஏற்பட்டது...


தம்முடைய திறமையான விளையாட்டின் மூலம் அந்த பகுதியில் "இந்த விளையாட்டில் 
இவரை ஜெயிக்க முடியாது " என்று ஒரு நிலையை தக்கவைத்திருந்தார் அவர். 
நானும் அவரும் விளையாடும்போது வர ஒன்றும் வெல்ல முடியாத ஆட்டக்காரர் 
இல்லை என்பது எனக்கு புரிந்தது... என்னுடைய ஆட்டத்தின் மூலம் வெற்றி வாய்ப்பை 
என் பக்கம் திருப்ப... அங்கு சேர்ந்திருந்த நண்பர்கள் மத்தியில் "வெல்லமுடியாதவர்" என்ற 
நம்பிக்கை வெகுவாக குறைந்தது...
எதிரில் ஆடிய நண்பரின் முகமும் பொலிவிழந்து ஒரு அவமான உணர்ச்சி தென்பட 
ஆரம்பித்தது.. இது அவருக்கு பெரிய கவுரவ பிரச்சினையாகவும் தெரிந்தது...
நான் என்னுடைய ஆட்டத்தின் தோரணையை மாற்றினேன்... வேண்டுமென்றே தவறு 
செய்தேன்.... அவருக்கு மேலும் மேலும் வாய்ப்புகள் கிடைக்க இப்போது அவரது முகம் 
பிரகாசமானது.. வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் 
இப்போது நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பாதையில் பயணிக்க தொடங்கினார்....
அங்கு குழுமி இருந்த அவரது நண்பர்கள் முகமும் பிரகாசிக்க தொடங்கியது.... 
இறுதி வெற்றி அவருக்கே கிடைத்தது... கிடைத்த பரிசுத்தொகை குறைவுதான் 
என்றாலும் அந்த பகுதியில் "வெல்ல முடியாதவர்" என்ற பெயரை 
தக்கவைத்துக்கொண்டதுதான் அவருக்கு மாபெரும் பரிசாக இருந்தது....

பிறகு என்னை தனிமையில் சந்தித்தார்.... கண்கள் கலங்க என் கைகளை 
பற்றிக்கொண்டு.... "நீங்க விட்டுக்கொடுக்கலன்னா நான் ஜெயிச்சிருக்க 
முடியாது பாஸ்.... இல்லன்னா எங்க நண்பர்கள்ல எல்லோருமே என்னை 
ரொம்ப இளக்காரமா பார்த்திருப்பாங்க.." என்றார்.. அது முதல் நானும் 
அவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்....

அன்று முதல் இன்றுவரை அவர்தான் என் முதன்மை நெருங்கிய நண்பராக 
இருக்கிறார்... அவர் பெயர் பழனிச்சாமி...

### இதை சொன்னது நான் அல்ல... தமிழ் திரைத்துறையின் திரைக்கதையில் 
ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய திரு பாக்யராஜ் அவர்கள். 
தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான சரண்யா சினி கம்பைன்ஸ் 
முழு நிர்வாகத்தையும் இந்த பழனிச்சாமி அவர்களிடம்தான் கொடுத்திருக்கிறாராம் ...

சரியான நேரத்தில் சரியான இடத்தில் விட்டுக்கொடுத்தல் மூலம் 
ஒருவரை தலை நிமிரவைக்க முடியுமென்றால்... விட்டுக்கொடுப்போம்.. 
அவர் காலம் முழுக்க நம் தலை குனியாமல் பார்த்துக்கொள்வார்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக