செவ்வாய், 28 ஜூலை, 2015

சுக்ரீவனும் என் தேச மீனவர்களும்....



அந்தபுரத்தில் வாலி தன் மனைவி தாரையுடன் உரையாடிக்கொண்டிருக்கிறான்... திடீரென வெளியில் இருந்து சுக்ரீவனின் குரல் கேட்கிறது...
"அடேய் வாலி... வெளில வாடா,, இன்னிக்கு உன்னை ஒருகை பார்க்காம விட மாட்டேன்... உன் தோல உரிக்கிறேன்டா..." (எளிமை கருதி சமகால வழக்குத்தமிழ்)

அந்தபுரத்தில் இருந்த வாலியின் மனைவி தாரை, வாலியை சமாதானப்படுத்துகிறாள்.... "யாரோ சூரியவம்சத்து அரசனாம்.. தசரத குமாரனாம்.. அவன் தன மனைவியை தேடி இங்கே காட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறானாம்.. அவன் இப்போது சுக்ரீவனுடன் நட்பு பாராட்டுவதாக கேள்வி... ஒருவேளை அந்த அரசன் இவனுக்கு உதவுவதாக சொல்லி இருக்கலாம்... அதனால்தானோ என்னவோ சுக்ரீவன் வேண்டுமென்றே வந்து வம்பிற்கிழுக்கிறான்... ஆகவே எதுவாக இருந்தாலும் பொழுது விடிந்து பார்த்துக்கொள்ளலாம்.. இப்பொது சாந்தமாக இருங்கள்..." என்று தடுக்கிறாள்..

ஆனால் கடும் சினமுற்ற வாலி வெளியில் வருகிறான்... இருவருக்கும் படு பயங்கரமான மற்போர் நடக்கிறது... இருவருமே பலமானவர்கள் என்ற போதிலும், வாலி முன்பே பெற்ற வரத்தின் பலனாக எதிரியின் பலத்தில் பாதி அளவு வாலிக்கு கிடைக்க இப்போது கூடுதல் பலம் பெற்றவனான வாலி , சுக்ரீவனை நையப்புடைக்கிறான்...

அடிவாங்கிக்கொண்டு ஓடிய சுக்ரீவன் ராமனிடம் சென்று கோபிக்கிறான்... "நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் நான் போனேன்.. ஆனால் அங்கே என்னை அடிவாங்க வைத்து விட்டீர்களே..."

அதன் பிறகு சுக்ரீவன் மாலை அணிந்துகொண்டு சென்றதும்.. மறுபடியும் சண்டைக்கு அழைத்து, பின் வாலியை மறைந்து இருந்து ராமன் கொன்றதும் எல்லோருக்குமே தெரியும்...

நம் கட்டுரைக்கு தேவையானதை மட்டும் இங்கே "கிராப்" செய்து எடுத்துக்கொள்வோம்..

கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் சுமார் 131 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அதில் சிலர் மீண்டும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்... 78 மீனவர்கள் இன்னும் இலங்கை சிறையில் இருக்கிறார்கள்... வழக்கமாக வாரம் ஒரு முறையோ, 10 நாட்களுக்கு ஒருமுறையோ 10-20 மீனவர்கள் "எல்லை தாண்டியதால்" கைது செய்யப்படுவார்கள்... பெரும்பாலும் சிலர் எல்லை தெரியாமலும், சிலர் அதிக மீனுக்கு ஆசைப்பட்டு எல்லை கடந்தவர்களாகவும் இருப்பார்கள்... ஆனால் திடீரென ஒரே நாளில் 131 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.... ஏன்.. எப்படி..???

திரு மோடி அவர்களின் அரசு பதவியேற்ற பின் ஏற்கெனவே கைது செய்து சிறையில் வைத்திருந்த மீனவர்களை இலங்கை அரசு விடுவித்ததும், அதன் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாய் விடுவிக்கப்பட்டதும் ஊடகங்களில் பெரிய செய்தியாக்கப்பட்டது...

மேலும், திரு.ராஜபக்ஷே அரசு பயந்துகொண்டு அந்த மீனவர்களை விடுவித்தது என்று ஒரு சில ஊடகங்களாலும், பெருவாரியான கட்சிக்காரர்களாலும் வதந்தி பரப்ப பட்டது... இந்த யூக வதந்தி கொடுத்த தைரியம் தான் நிறைய மீனவர்களை அதிக மீன்வளம் உள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்கு செல்ல வைக்கிறது... இப்படியான வதந்திகளை நம்பி, தங்களுக்காக மோடி அவர்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு வருவார் என்று நம்பிக்கையில்.. ( இன்னும் சொல்லப்போனால் .. திமிரில்) தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சரமாரியாய் நுழைய ஆரம்பிக்கிறார்கள்..

இராமாயண காலத்தில் சுக்ரீவனுக்காக ராமன் மறைந்திருந்து அம்பு தொடுத்திருக்கலாம்.. ஆனால் இப்போதைய சர்வதேச சட்டம் அதை எல்லாம் ஏற்காது.... நமது கடற்பகுதிக்குள் நுழையும் அந்நியர்களை கைது செய்யும் அதிகாரம் நமக்கு இருப்பது போல.. ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு...

ஒருவேளை, இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருந்தால் அதனை இந்திய அரசாங்கம் நிச்சயம் ஏற்காது... தக்க பதிலடி கொடுத்தே தீரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக