திங்கள், 27 ஜூலை, 2015

என் முதல் சைக்கிள்


எங்க ஊருக்கும் காசாங்காட்டுக்கும் மூணு நாலு கிலோமீட்டர் இருக்கும்... 
அஞ்சாப்பு வரைக்கும்தான் எங்க ஊர்ல பள்ளிக்கொடம் இருக்கு.. 
ஆறாப்பு படிக்க சிலபேர் நாட்டுச்சாலைக்கும், சிலபேர் காசாங்காட்டுக்கும் 
போவாங்க... நம்ம அத்த வீடு.. மாமா வீடு எல்லாம் காசாங்காடுன்றதாலயும், 
ரெண்டு அக்காவும் காசாங்காட்டுல படிச்சதாலையும் நமக்கும் 
காசாங்காடு பள்ளிக்கொடம் போறதுன்னு முடிவாச்சு...

காலைல எட்டு மணிக்கெல்லாம் கிளம்பினா அங்க படிக்கிற 
ஒவ்வொருத்தரா வர வர எல்லோருமே சேர்ந்து ஒரு பத்து பதினஞ்சு பேர் 
நடந்துதான் போறது... பேசி சிரிச்சுகிட்டே போறதால அலுப்பு 
தெரியாம நடப்போம்... அதுலயும் ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்க 
முனீஸ்வரன் கோயில கிராஸ் பண்றப்போ கொஞ்சம் பயமாவும் இருக்கும்..

அப்போ எங்க ஒண்ணுவிட்ட மாமா பொண்ணு மல்லிகா நாலாப்பு 
படிக்கவே காசாங்காட்டுக்கு வந்தா... உள்ளூர் பள்ளிக்கொடத்துல 
பேஸ்மென்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா போட்டதால "ஒருவேளை இங்கன 
வாத்தியாருங்க நடத்துறது நம்ம புள்ளைக்கு சரியா புரியல போல.. 
காசாங்காட்டுல சேர்த்து விட்டாலாச்சும் நம்ம மக படிச்சு பெரியாளாயிட 
மாட்டாளா"ன்னு ஒரு நப்பாசை அவங்க அம்மாவுக்கு..
(இவ்ளோ உரிமையோட ஒரு பொண்ண பேர் குறிப்பிட்டு எழுதுறேன்னா.. 
பின்னாளில் அந்த மல்லிகா எங்க அண்ணனோட மனைவி ஆகிவிட்ட 
தைரியம் தான்)

அந்த மல்லிகா அப்போ சைக்கிள்ள தான் நாலாப்பு படிக்க காசாங்காட்டுக்கு 
வருவா.. நம்மதான் நடந்து போற குரூப் ஆச்சே... 
அந்த சைக்கிள பார்க்கிறப்போ எல்லாம் ஒரே ஏக்கமா இருக்கும்... 
அப்புறம் ஏழாம் கிளாஸ்க்கு போனப்போ எங்க அய்யர் மாமாவுக்கு 
ஏழாப்பு கிளாஸ் வாத்தியார் டேவிட் பிரென்ட்.. அந்தாள்கிட்ட மாமா 
என்ன சொன்னாரோ தெரியல... இங்கிலீஸ்ல லீவ் லெட்டர் எழுத 
தெரியலன்னு செம்ம அடி பின்னிட்டார்...
(ஒரு வேளை அக்கா மவன எப்படியாச்சும் கலெக்டரா ஆக்கிபுடனும்னு 
கனவு இருந்திருக்கும் போல... இவரு மட்டும் கனவு கண்டா போதுமா.. 
நம்ம தலைல எழுதில்ல இருக்கணும்..??)

அன்னிக்கு வாங்கின அடிக்கு பரிசா ஒரு பழைய எஸ் எல் ஆர் 
சைக்கிள் வாங்கி கொடுத்தார்... அட... என்னோட கேடிலாக் அது... 
ஆனா.. தக்காளி... அந்த கெடிலாக்க ஸ்மூத்தா ஓட்டிட்டு போற ரோடு 
எங்க ஊர்ல இல்லாம போனது என்னோட துரதிஷ்டமோ.. அரசாங்கத்தோட 
கையாலாகாத தனமோ... எங்கூர் ரோடு ஒன்ரை(ஒன்னரை) ஜல்லி போட்ட 
ரோடு.. அதுல செம்மண் எல்லாம் மழை அரிச்சு கரைஞ்சு போய் 
கருங்கல் கப்பி மட்டும் ஈஈன்னு கூர் கூரா இளிச்சுக்கிட்டு நிக்கும்...

நம்ம கெடிலாக் அந்த கப்பி ரோட்டுல போறப்போ "கட கட... க்ரீச்.. க்ரீச்... 
லொட லொட..." இன்னும் சத்தங்களை எப்படி எல்லாம் எழுத முடியுமோ.. 
அத்தனை வகைளையும் சத்தம் போடும்... அந்த அதிர்ச்சி தாங்காம, 
உதறல் தாங்காம அப்போ அப்போ சைக்கிள இருக்க நட்டு போல்டு 
எல்லாம் கழண்டு விழுந்திடும்... பஞ்சராயிடும்.... இப்படி அந்த சைக்கிள்ள 
நான் சீட்ல ஏறி ஓட்டிட்டு போனத விட தள்ளிகிட்டே திரிஞ்ச 
காலங்கள்தான் அதிகம்...

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கப்புறம் அதுகூட போராட முடியாம 
அதுக்கு நான் ரிட்டயர்ட் கொடுத்தேன்... ஆனா உண்மையிலேயே 
வாலண்டரி ரிட்டயர்ட்மென்ட் கேட்டுத்தான் அது கதறி தீர்த்திருக்கும் போல... 
அப்புறம் அது வீட்டுக்கு பக்கவாட்டுல செவரு ஓரமா ஐக்கியமாயிடுச்சு ... 
அதுக்கப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமா 
துரு புடிச்சும், அப்பா வச்சிருந்த சைக்கிளுக்கு ஸ்பேர் கொடுக்கிற 
தியாகியாவும் மாறி கரைஞ்சு கரைஞ்சு எலும்பும் தோலுமா ஆயிபோச்சு

ரொம்பநாளைக்கு அப்புறம் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வரும்போது 
ரெண்டு சக்கரமும் இல்லாம முக்கோணமும் (ஃபிரேம்) ஃபோர்க்கும் , 
ஹேண்டில் பாரும் மட்டும் இருந்துது... என்னோட அந்த கனவு 
வாகனம் எதுவுமே இல்லாம ஓட்ட முடியாம கிடந்த வருத்தம் 
லேசா இருந்தாலும்....

இப்போ அதே மாதிரி ரெண்டு சக்கரமும் இல்லாம ஒரு சைக்கிள் 
ஒட்டி சந்தொஷப்பட்டுக்கிறேன்.... ஆமா ஆமா... என்னோட 
அந்த கனவு கெடிலாக் இப்போ உடற்பயிற்சி கூடத்தில ஓரமா நிக்குது... 
சக்கரம் இல்லாமையே ஓடுது...

கொழுப்பு குறையுமாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக