புதன், 28 ஜூன், 2017

அரச கடமை




Image may contain: bus, text and outdoor

தமிழ்நாட்டில் 1200 பள்ளிகளை மூட அரசு முடிவு செய்திருக்கிறது... இதற்கு அரசு தரப்பில் சொல்லப்படும் காரணம் "மாணவர்கள் எல்லாம் தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிட்டார்கள்... மாணவர்கள் இல்லாமல் பள்ளிகளை எதற்காக திறந்து வைத்திருக்க வேண்டும்...?"

இது ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயம்... கல்விக்கூடங்களை திறப்பது அரசின் கடமை... குடிநீர்-மருத்துவம் போன்ற அத்தியாவசிய அரசின் கடமைகளில் கல்விக்கூடமும் ஒன்று... வறட்டுக்கௌரவத்தாலும், கல்வி மாஃபியாக்களின் தந்திரத்தாலும் தனியார் பள்ளிகள் எனும் கரும்பாலையில் தங்கள் குழந்தைகளை பிழிய தயாராகி விட்ட மாக்கள் நாளை திடீரென திருந்தும் வாய்ப்பு உள்ளது... ஆனால் இப்போது மூடப்பட்ட பள்ளிகளை திரும்ப திறப்பது சாத்தியமே இல்லாத விஷயம்...


நான் பணிபுரியும் கத்தார் அரசு இப்படியான மக்களுக்கான அடிப்படை கடமைகளில் ஒன்றான போக்குவரத்து வசதியில் இயக்கம் பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் பயணிகளே இல்லாமல் செல்கின்றன... இந்த வழித்தடத்தில்தான் பயணிகள் இல்லையே என்று அந்த பேருந்துகளை நிறுத்தவில்லை அந்த அரசு.... "அந்த நாட்டில் பெட்ரோல் கிடைக்கிறது.. அதனால் அவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை" என்று நொண்டி சாக்கு சொல்லலாம்... ஒரு பேருந்து இயக்க வெறும் டீசல் மட்டும் போதாது என்பது அடிப்படை ஞானம்..

மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களை வைத்து வீணாக சம்பளம் கொடுக்க அரசின் நிதிக்கொள்கை இடமளிக்காது என்று சொல்வார்கள்.... அரசு செய்யும் எத்தனையோ வீண் ஆடம்பர செலவுகளை ஒப்பிடும்போது இந்த 1200 பள்ளிகளில் ஒரு ஆசிரியருக்கு கொடுக்கும் சம்பளம் பெரிய விஷயமில்லை... மேலும் ஆசிரியர்கள் வெறும் ஆசிரியப்பணி மட்டும் செய்வதில்லை என்பது சமகால உண்மை.. (சென்சஸ் முதல், மலேரியா-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்ச்சி வரை ஆசிரியர்களின் பங்கு அனைவரும் அறிந்த ஒன்று)

அரசு ஒற்றை அரசாணையில் அந்த பள்ளிகளை மூடிவிடும்.. ஆனால் ஒரு கிராமத்தில் ஒரு புதிய பள்ளி திறக்க அரசிடம் எவ்வளவு போராட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து இப்போதே இதற்கான போராட்டத்தை முன்னெடுத்து அந்த பள்ளிகள் மூடப்படாமல் தடுக்க வேண்டும்....

செய்வார்களா?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக