வியாழன், 29 ஜூன், 2017

இந்தி மொழி- ஒரு முதலாளி சிந்தனை

No automatic alt text available.

இந்தியாவின் பல மாநிலங்களில் பேசக்கூடிய மொழியான இந்தியை அனைவரும் கற்க வேண்டும்... நான் உலகின் மிகப்பெரிய மனித வளம் நிறைந்த நாடான இந்தியாவில் மக்கள் தொகை நிறைந்த மாநிலங்களில் இந்தி தாய் மொழியாகவும், பீகார், அஸ்ஸாம், பஞ்சாப் முதல் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான வேறு வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட்ட பல மாநிலங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு இந்தி தெரியும்..

இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கல்வி, தொழில் , நாகரீகம், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் தன்னிறைவடைந்த வளர்ந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு... உழைக்கும் உடல்பலமுடைய தமிழக இளம் தலைமுறையினர் கல்வி அறிவும், உலக ஞானமும் பெற்றிருப்பதால் அவர்கள் மூன்றாம், நான்காம் நிலை வேலைகளை செய்ய தயாராக இல்லாமல் தங்களது திறமை/கல்விக்கு ஏற்ற வேலைகளை மட்டுமே செய்ய விரும்புகிறார்கள்... அவர்கள் எதிர்பார்க்கும் வேலை உள்நாட்டில் இல்லை என்றால் அவர்கள் உலகின் பல நாடுகளுக்கு பறந்துசெல்ல யோசிப்பதே இல்லை..


அவ்வாறு அதிகபட்ச இளம் தலைமுறையினர் சிந்திக்க, உள்மாநில தொழில் துறைக்கு ஆள் பற்றாக்குறை அதிகமாக ஏற்படுகிறது.. விவசாயமாக இருக்கட்டும், இயந்திர-தளவாட தொழிற்சாலைகளாக இருக்கட்டும்... ஆள்பற்றாக்குறை என்பது தமிழகத்தை பொறுத்தவரை ஒரு தலையாய பிரச்சினை...


இந்த நிலையில் அதிகபட்ச மனித வளம் நிறைந்த இந்தியை தாய்மொழியாக கொண்ட/ இந்தி பேசத்தெரிந்த பல தொழிலாளர்கள், சொந்தமக்கள் நிராகரித்திருக்கும் வேலைவாய்ப்பை தேடி தமிழகம் பயணிக்கிறார்கள்...


ஒரு வேலையை ஒருவருக்கு புரியாத மொழியில் செய்ய சொல்லும்போது தவறான புரிதல் காரணமாக நிறைய கால விரையமும், பண விரையமும் ஏற்படும்... அந்த விரையங்களை மிச்சப்படுத்தி முழுமையான வேலை திறனை உபயோகித்துக்கொள்ள அவர்களுக்கான மொழியிலேயே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால் எளிதில் புரிந்து கொண்டு வேலை செய்வார்கள்... ஏற்கெனவே எல்லாவிதத்திலும் திறமையை நிரூபித்திருக்கும் தமிழக மக்கள் இந்த இந்தி என்ற சவாலையும் எளிதில் எதிர்கொண்டு அதில் மிளிர்வார்கள் என்பதை சொல்ல தேவை இல்லை...
ஆகவே, இந்தியை தாய்மொழியாக கொண்ட/ இந்தியை பேச தெரிந்த தொழிலாளிகளை வைத்து தம்முடைய தொழில் வளத்தை பெருக்க தமிழர்கள் அனைவரும் இந்தியை கற்க வேண்டும் என்பதே என் போன்ற "தொழிலதிபர்"களின் தீவிர அவா...

அதற்கான வழிமுறைகளை தமிழக அரசு அமைத்துத்தர வேண்டும் என்பதே எம் கோரிக்கை...


மற்றபடி, மத்திய அரசு ஊழியர்கள் அவர்கள் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், எந்த மாநிலத்தில் பணி செய்தாலும் இந்தியில் கையெழுத்து இட வேண்டும் என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது...

நாட்டில் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, கருப்புப்பணம், வரியேய்ப்பு, உணவு பற்றாக்குறை, போன்ற பல தலையாய பிரச்சினைகள் இருக்கும் போது அவற்றில் கவனம் செலுத்தாமல், இந்தியில் கையெழுத்து போட்டால் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு வந்துவிடும் என்பதுபோல யார் பேசினாலும்.....


யோசிக்காமல் செருப்பால் அடியுங்கள்...

மேலும், இம்மாதிரியான விஷயங்களில் நாடாளுமன்றத்தில் தங்களது எதிர்ப்பை ஆணித்தரமாக வெளியிட 39+1 என்ற அளவில் உறுப்பினர்களை அனுப்பியும், அவர்கள் சுய லாபத்திற்காக அங்கே அமைதி காத்துவிட்டு, இங்கே "நாங்களும் போராடுகிறோம்" என்று மக்களையோ, மாணவர்களையோ தூண்டிவிட்டு அரசியல் நடத்த நினைக்கும் தமிழக அரசியவாதிகளை வாசலில் சாணம் தெளித்த பிறகு கூட்ட கூடிய தேய்ந்த கட்டை விளக்குமாறால் அடியுங்கள்..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக