எங்கள் ஊரில் கொம்புக்காரன் என்றொரு சாமி இருக்கிறது... சற்றேறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு நல்ல ஒரு மழைகாலத்தில் ஏரி-குளங்கள் எல்லாம் நிரம்பி வெள்ள அபாயம் சூழ்ந்திருந்த காலம் அது... மின்னொளி விளக்குகளோ, நவீன வாகனங்களோ, தகவல் தொடர்பு சாதனங்களோ இல்லாத காலம் அது...
சுமார் நான்கு கிராமங்களின் மத்தியில் 1200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த ஏரியின் வடிகால் எங்கள் ஊரை நோக்கி அமைந்திருகிறது. (இன்றும் அந்த ஏரி இருக்கிறது... ஆக்கிரமிப்பாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பட்டா போட்டு சொந்தமாக்கிய பின் எஞ்சி இருக்கும் கொஞ்சம் பரப்பளவு ஏரி என்று பெயரளவில் மட்டும்.. )
இந்த நீர்நிலை நிரம்பிய நிலையில் அதன் கரைகள் பலமற்று இருந்ததால் ஒரு காவலாளியை நியமித்து உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் இரவு நேரத்தில் காவலுக்கு நிறுத்தி இருக்கிறார்கள்... அந்த காவலாளியின் கையில் ஒரு "கொம்பு" என்று சொல்லக்கூடிய வாத்தியம்..
ஏரி கரை உடையும் அபாயம் வந்தால் அந்த கொம்பை இசைத்து எச்சரிக்கை செய்வதென ஏற்பாடு.. ஒரு நாளிரவில் ஏரியின் கரையில் லேசான உடைப்பு ஏற்பட அதனை கண்டுகொண்ட காவலாளி கொம்பை இசைத்து ஊரில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு, அந்த உடைப்பை சரி செய்ய முயன்று, முடியாததால் இவரே அந்த உடைப்பின் மீது படுத்துவிட்டாராம்
எச்சரிக்கை சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர்காரர்கள் தீப்பந்த வெளிச்சத்தில் இவர் உடைப்பில் படுத்திருந்தது தெரியாமல் வந்த வேகத்தில் ஆளாளுக்கு மண் அள்ளிப்போடு அவரை அப்படியே மூடி விட்டார்களாம்... பிறகு காவல்காரர் எங்கே என்று தேடியபோது கொம்பு மட்டும் கிடைத்ததாம்... அப்புறம் தான் அவர்களால் நடந்த சம்பவத்தை ஊகிக்க முடிந்ததாம்..
ஊரை காக்க தன உயிரை தியாகம் செய்த அந்த அரிஜன காவலாளியின் தியாகத்தை போற்றும் பொருட்டு அவரை "காவல் தெய்வமாக" வழிபடத்தொடங்கி இருக்கிறார்கள்..
அன்று முதல் இன்று வரை எங்கள் ஊரில் குழந்தை பிறந்தாலும், மாடு-ஆடு குட்டி போட்டாலும் கூட "கொம்புக்காரன்"ன்னுக்கு காணிக்கை செலுத்தி வணங்குவதை கடை பிடிக்கிறார்கள்... அவரை கும்பிடச்சொல்லி யாரும் வற்புறுத்த வில்லை... இது ஒரு நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு.. இப்படித்தான்.. ஒவ்வொரு குல தெய்வத்தின்- காவல் தெய்வத்தின் பின்னணியிலும் ஒரு உண்மை கதை இருக்கிறது...
உங்கள் ஊரில் இருக்கும் ஏதேனும் காவல் தெய்வத்தையோ- குல தெய்வத்தையோ பற்றி விசாரித்து பாருங்கள்.. உருக்கமாய் உயிர் தியாகம் செய்த ஒரு உண்மை கதை இருக்கும்... பதிவு செய்யப்படாமல் ,தலை முறை தலைமுறையாக நன்றியோடு பகிரப்பட்டு தொடரும் விஷயங்கள் அந்த வழிபாடுகள்.. அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த கதை வாய்வழியாக கடத்தப்படும்போது சில கற்பனைகள் சேர்ந்திருக்கலாம்.. மறுப்பதற்கில்லை... ஆனால் அவற்றில் நிஜமும் இருக்கிறது
இது மூட நம்பிக்கை இல்ல.. முழு நம்பிக்கை.. நன்றி உணர்ச்சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக