வியாழன், 29 ஜூன், 2017

வேண்டுதல்

Image may contain: one or more people
ஒரு நண்பர் பகிர்ந்திருந்த ஒரு காணொளியை காண நேர்ந்தது.. நெஞ்சு அடைக்கும் அளவிற்கு என்னுள் மனிதாபிமானம் உறைந்துதான் கிடந்திருக்கிறது...

காலமும்,பிணியும் அடித்து துவைத்து ஈரத்துணியாய் கயிற்றுக்கட்டிலில் கிடத்திய ஒரு வயதான பெண்மணியை ஒரு இளம் பெண் (அவர் மருமகளாகவோ- வேலைகாரியாகவோ இருக்கலாம்) ஆத்திரத்துடன் தாக்குவதையும், கட்டிலை விட்டு இழுத்து கீழே தள்ளுவதையும் பதிவு செய்திருந்தது அந்த கண்காணிப்பு கேமரா...


நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயின் உடம்பில் காயங்கள் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்காணிக்க அவரின் மகன் அந்த கண்காணிப்பு கேமராவை அங்கே மறைத்து வைத்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன...

அந்த வயதான நோயாளியின் அருகில் ஏர் கூலர் வைக்கப்பட்டிருக்கிறது... ஆகவே நிச்சயம் அந்த மகன் தன்னால் ஆன வசதிகளை அந்த வயதான தாய்க்கு செய்ய முற்பட்டிருப்பது திண்ணம்... ஆனால் அந்த பெண்??

தன்னுடைய வயதான பெற்றோரை அருகிலேயே இருந்து கவனிக்கும் பாக்கியம் எந்த மகனுக்கும் கிடைப்பதில்லை... சமகால பொருளாதார துரத்தல்கள் நிச்சயம் அனுமதிப்பதில்லை... பொருட்களை வாங்கி கொடுக்கலாம், மெத்தைகள், தொலைகாட்சிகள், ஏ சி இன்ன பிற வசதிகளை செய்து கொடுக்கலாம்.. ஆனால் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு பெரும்பாலும் பெண்களுக்கே கிடைக்கிறது... ஒரு பெண் தன்னுடைய தாய்க்கு அப்படி ஏதாவது நிகழ்ந்தால் மிகுந்த பாசத்துடன் கவனித்துக்கொள்வார் என்பதை நம்மில் நிறைய பேர் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்..

ஆனால் அதே பெண், தனுடைய மாமியார் என்று வரும்போது ராட்சத அவதாரம் எடுப்பதையும் கண்கூடாக பார்க்கிறோம்... ஏன் இந்த முரண்பட்டு??

அந்த பெண் பெற்ற மகன் (கணவன்) வேண்டும், அவன் மூலம் கிடைக்கும் சம்பாத்தியம் வேண்டும், அவன் மூலம் பிறக்கும் குழந்தைகள் வேண்டும்.. ஆனால் அதற்கெல்லாம் விதையாய் இருந்த அந்த பெண் மட்டும் வேண்டாம்.... அப்படித்தானே...

அப்படி என்றால் நன்றி கெட்டவர்கள் பட்டியலில் முதல் பக்கத்தில் எழுதப்பட வேண்டியவர்கள் அல்லவா இம்மாதிரி பெண்கள்?? உங்கள் பெயர் அந்த பக்கத்தில் இடம்பெற வேண்டாமே.... நாளை உங்களுக்கும் வயதாகும்... உங்களுக்கும் ஒரு மருமகள் வருவாள்.. அல்லது உங்கள் மகன் உங்களை கவனிக்க (??) ஒரு வேலைக்காரியை நியமிக்கலாம்...


வேறொரு கோணமும் இதில் இருக்கிறது,... அடிக்கும் இளம்பெண்ணின் கோபத்தின் பின்னால் ஒரு சலிப்பு- ஒரு எரிச்சல்- ஒரு கோபம்.... இப்படி எதுவோ ஒன்றோ.. அல்லது எல்லாமுமோ கலந்து இருக்கிறது...

"சனியனே.. என்னால வாரி கொட்டி துவைச்சு கழுவ முடியலையே.. செத்து ஒழியேன்..." - என்ற எரிச்சல் /ஆத்திரம்

"அந்த புள்ளைக்கே கொண்டு போய் எல்லாத்தையும் கொடுத்த.. சாகப்போற காலத்துல என்னை வந்து வதைக்கிறியே..."- என்ற கோபம்

"எவ்ளோ நாளைக்குதான் நான் சகிச்சுகிட்டு துடைக்கிறது - என்ற இயலாமை...

இப்படி எதுவோ ஒன்று நிச்சயம் இருக்கும்... ஆனால் அது ஒரு உயிர்... அந்த பெண்ணுக்கு கணவனை கொடுத்த / சம்பளம் கொடுக்கும் முதலாளியை கொடுத்த ஒரு உயிர்... கருணை காட்ட இதை விட வேறென்ன வேண்டும்...

இதை எலாம் பார்க்கும் போது நமக்கு ஒரே ஒரு பிரார்த்தனை தான் எழுகிறது... கடவுளே... வலிக்காமல்.. யாரையும் வதைக்காமல்.. யாருடைய எரிச்சல்/கோபம்/சலிப்பையும் சம்பாதிக்காமல் நடமாடிக்கொண்டிருக்கும் போதே... பணத்தை சம்பாதித்துக்கொண்டிருக்கும் போதே மரணம் தழுவ வேண்டும்....


வேறு என்ன செய்ய..... ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக