வியாழன், 29 ஜூன், 2017

நா.முத்துக்குமார்

Image may contain: 1 person, beard and indoor
இந்திய முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் மரணம்...
விடுதலை புலிகள் திரு பிரபாகரன் அவர்களின் மரணம்...
வழக்கமாய் வார விடுமுறை நாட்களில் எனது அறைக்கு வருகைதரும் நண்பன் ராம்குமாரின் , திருமணமான ஆறாவது மாதத்தில் நேர்ந்த மரணம்...
ஃபேஸ்புக் வழியாக அறிமுகமாகி, தொலைபேசி உரையாடலின் ஊடே அண்ணன் உறவான அன்புசிவன் என்று ஃபேஸ்புக் நம்பர்களால் அறியப்பட்ட சிவக்குமார் அண்ணனின் மரணம்.....


இப்படியான வெகு சில மரணங்கள் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன... மேற்சொன்னவர்களை எனக்கு நேரடியாகவோ, சிறுவயது முதலோ தேடித்தேடி படித்தோ அறிமுகமானவர்கள்.... அவர்களின் மரணம் கொடுத்த அழுத்தம் இயல்பானது....

அப்படி ஒரு தாக்கத்தைத்தான் நா முத்துகுமாரின் மரணமும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது...

இவனை பற்றி எப்போதுமே நான் தேடிப்பிடித்தெல்லாம் படித்ததில்லை.... விகடன் பிரசுரத்தில் வெளியான "அணிலாடும் முன்றில்" என்ற புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆசை மட்டுமே இருந்தது... மற்றபடி இவன் தேசிய விருது வாங்கியதற்காக சிலாகித்ததெல்லாம் இல்லை..... நான் விரும்பி கேட்கும் நிறைய பாடல்களை இவன்தான் எழுதி இருக்கிறான் என்பதே எனக்கு நேற்றுதான் தெரிந்தது...


அப்படி ஒரு மனிதனின் மரணம் என்னுள் ஏன் மௌனத்தை விதைத்துச்சென்றிருக்கிறது?? இவனது வயது.... நிச்சயம் அதுதான் காரணமாயிருக்குமென நம்புகிறேன்.... இவனது அதே வயதில் இருப்பதாலோ என்னவோ... இவனின் மரணம் என்னுள் ஒரு ஒப்பீட்டை விதைத்து விட்டதை உணர முடிகிறது...


குடை பிடித்து செல்பவர்களையும் கூட எங்கோ ஒரு ஓரத்தில் நனைத்து விடுகின்ற மழை மாதிரி... என்னையும் நனைத்திருக்கிறாய் என்பதை இந்த நடுக்கம் சொல்கிறது...

நிச்சயம் ஒருநாள் சந்திப்போம்.. அப்போது நிறைய பேசலாம்... சொல்வதற்கு ஏராளமான கதைகள் இருக்கிறது என்னிடம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக