புதன், 28 ஜூன், 2017

கலுங்கடி- வாழ்க்கையின் பாதை..!!!


"கலுங்கு" என்ற வார்த்தை கிராமவாசிகளுக்கு பழக்கமானது... நகர (நரக... ஹா ஹா ஹா)வாசிகளுக்கோ அயல்கிரஹ சொல்...

கிராமங்களில் இருக்கும் ஏரியின் முழுக்கொள்ளளவு நிரம்பிய உடன் உபரி நீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகாலுக்கு "கலுங்கு " என்று பெயர்...
அதாவது ஒரு சிறு அணைபோல செயல் படும் இந்த கலுங்கு நான்கு-ஐந்து மிகப்பெரிய குழாய்களுடன் இருக்கும்.. ஏரியின் நீர்மட்டம் உயர்ந்த உடன் தன்னிச்சையாக வெளியேறும் தண்ணீர் கால்வாய் வழியாக ஓடி காட்டாற்றில் கலந்து கடலை சென்றடையும்... இந்த கலுங்கின் உதவியால் ஏரியில் மற்ற பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விவசாயத்திற்கோ-குடியிருப்பு பகுதிக்கோ பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும்...

எங்கள் ஊர் ஏரியிலும் அப்படியான கலுங்கு இருக்கிறது.. தமிழகத்தில் அதிக மழை பெய்யும் ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் ஏறி முழுமையாக நிரம்பி அந்த ஏரியின் கலுங்கின் வழியாக உபரி நீர் அதிக அளவில் வெளியேறும்..

பெரும்பாலும் அப்படியான கலுங்கு ஐந்து அல்லது ஆறு குழாய்களுடன் இருக்கும்... அந்த குழாய்களின் ஊடாக உபரி நீர் மிக வேகமாக வெளியேறும்..

அப்படி வெளியேறும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த குதித்து நீந்தி விளையாடுவது வழக்கம்... அப்படி குதிக்கும் போது நடுவில் இருக்கும் குழாயில் இருந்து வெளியேறும் நீரில் சிலர் குதிப்பார்கள்.. இதன் வேகம் அதிகமாக இருக்கும்... நீரின் போக்கிலேயே நீண்ட தூரம் இழுத்துச்செல்லும்... வெகுதூரம் நீரோட்டத்தின் பாதையிலேயே பயணித்து கரையேறி வந்து மீண்டும் குதிப்பார்கள்.

இரண்டு கடைசியிலும் இருக்கும் குழாய்களில் வெளியேறும் நீர் பக்கவாட்டாக சுற்றிக்கொண்டு மீண்டும் தொடங்கும் இடத்திற்கே..(அதாவது நீர் வெளியேறும் பாதையருகிலேயே) கொண்டு வரும்... சற்று பயந்தவர்களும். புதிதாக குளிப்பவர்களும் இந்த ஓரத்தில் இருக்கும் குழாயில் வெளியேறும் தண்ணீரில் குதிப்பார்கள்.. அவர்களை நீர் இழுத்துசென்று மீண்டும் கரை ஓரத்தில் சேர்க்கும்...

இப்படித்தான் வாழ்க்கையும்... அதன் போக்கில் வேகமாக ஓடுகிறது... துணிந்து நடுவில் குதிப்பவர்களை வெகுதூரம் இழுத்துச்செல்கிறது.... தயங்கி ஓரத்தில் குதிப்பவர்களை சுழற்றிக்கொண்டு வந்து தொடங்கும் இடத்திலேயே விடுகிறது....

ஓரத்தில் குதிப்பவர்கள் பயத்துடன் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறார்கள்... நடுவில் துணிந்து குதிப்பவர்கள் புதிய புதிய அனுபவங்களை பெறுகிறார்கள்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக