வியாழன், 29 ஜூன், 2017

பெருநிறுவன உயர்பதவி- இந்தியர்/தமிழர் என்பதில் என்ன பெருமை??

Image may contain: 6 people, people smiling, text
பெப்சிகோ நிறுவன சி ஈ ஓ இந்திரா கிருஷ்ணமூர்த்தி ஒரு தமிழச்சி.... கூகுள் சி ஈ ஓ சுந்தர் பிச்சை ஒரு தமிழன்... மாஸ்டர் கார்டு நிறுவன சி ஈ ஓ அஜய்பால் சிங் ஒரு இந்தியர்... மைக்ரோ சாப்ட் சி ஈ ஓ சத்யா நாதெல்லா ஒரு இந்தியர்..

நிற்க...

அவுரு டமிலர்.. அவுரு இன்டியர்... என்று தமிழ்-இந்திய உணர்ச்சி பொங்கல்களை வைத்து , அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொடுத்து பானையை கழுவி கவிழ்த்துவிட்டோம்.... சாப்பிட்ட பொங்கல் ஜீரணமும் ஆகி இருக்கும்... உண்ட மயக்கம் தூக்கத்தை தரும்... தூக்கம் வருவதற்குள் கொஞ்சம் சிந்திப்போமா...??

எல்லாவகையிலும் வாழ்வாதாரங்களை இழந்துகொண்டே போகும் விவசாயிகள் மற்றும் மிச்சம் மீதி இருக்கும் நிலத்தடி நீராதாரத்தையும் இழப்பதற்கு காரணமாக இருக்கும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோ நிறுவனம் இப்போது ஒரு தமிழச்சியின் தலையாட்டலுக்கு காத்திருக்கிறது..

தமிழச்சி என்று நாம் யாரை நினைத்து பெருமை கொள்கிறோமோ... அவர் தமிழ்நாட்டில்/இந்தியாவில் இருந்து உறிஞ்சப்படும் பூமித்தாயின் ரத்தத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார்...???

நமக்கு தெரியும்... நிச்சயம் அவர் தொப்புள் கொடி உறவு எல்லாம் பார்க்க மாட்டார்.... தனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்து சம்பளம் வசதி வாய்ப்புகளை வாரிக்கொடுக்கும் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் இருப்பார்...


அடுத்து கூகுள்... 

சமகாலத்தின் இளைய சமுதாயம் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்ற இறுமாப்புடன் பேச ஒரு காரணம் கூகுள் என்பதை மறுக்கவே முடியாது... எவ்வளவு நல்ல விஷயங்கள் கிடைக்கிறதோ அதே அளவு மோசமான விஷயங்களும் கிடைக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது...

ஒரு சொல்லை கொண்டு தேடினால் அதற்கு பொருத்தமான விஷயங்களை கொண்டுவந்து கொடுக்கும் தேடுபொறியான கூகுளில் "அம்மா.. அக்கா... மாமா.. அப்பா..." போன்ற உறவு முறைகளையோ, நர்ஸ், செக்கரெட்டரி என்றோ தேடினால் முதல் ஐந்து இணைப்புகளுக்குள் கூகுள் கொடுக்கும் சஜெஜன் "அம்மாவுடன் உடலுறவு, அக்காவுடன், மாமாவுடன் உடலுறவு, நர்சின் காமக்களியாட்டம்... இப்படித்தான்...

குறிப்பிட்ட விஷயங்களை தேடுபவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை... ஆனால் வேறு எதையோ தேடப்போய், இப்படியான இணைப்புகள் கிடைத்ததும்.. ஐயோ... இப்படி எல்லாம் கூட நடக்குமா.... என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என அந்த இணைப்பிற்குள் செல்பவர்களின் மனோ நிலை எப்படி இருக்கும்

கலாச்சாரம் இத்தனை நூற்றாண்டுகளாய் கட்டிக்காத்த உறவுமுறை சம்போகத்திற்கான ஆண்-பெண் என்ற நிலையை அடைந்து விடாதா... ஆரம்பத்தில் அதிர்ச்சியாக அதை பார்த்த/படித்தவர்கள்.. நாளடைவில்.... உலகில் இப்படி எல்லாம் நடக்கிறதோ.. நமக்குத்தான் தெரியவில்லையோ..என்ற எண்ணத்திற்குள்ளாக மாட்டார்களா??நாமும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஊன்றிவிட்டால்...அம்மா-மகன், அக்கா-தம்பி- அப்பா-மகள் உறவுமுறை என்ன ஆகும் ?? (இதுபற்றி நான் ஏற்கெனவே ஒரு கட்டுரை பதிவு செய்திருக்கிறேன் )

இதை முழுதாய் ஒழிக்க வேண்டாம்... குறைந்தபட்சம் அம்மா என்று டைப் செய்த வுடன் பரிந்துரைக்காமல் முழுதாய் டைப் செய்து தேடுபவர்களுக்கு மட்டும் காண்பிக்கலாமே...

ஒரு தமிழரான சுந்தர்பிச்சையின் கவனத்திற்கு இதை யார் கொண்டு செல்வது...


மேலும்.... எதோ ஒரு பிளாக்கை ஓபன் செய்தால் கூட "அதை"பெரிதாக்குவது எப்படி.... உடல் சுகத்திற்கு அழையுங்கள் என்று அரை நிர்வாண/முழு நிர்வாண விளம்பரங்கள் வேறு கலர் கலராய் கண் சிமிட்டுகின்றனவே... வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டுதானே கூகுள் இதை எல்லாம் அனுமதிக்கிறது.... இதற்காக நம் தமிழர் என்ன செய்ய போகிறார்?? கூகுள் உலகத்திற்கு எல்லாம் பொதுவாக இருக்கலாம்... ஆனால் சுந்தர் பிச்சை நம் தமிழர் அல்லவா... குறைந்தபட்சம் தன் தொப்புள்கொடி உறவுகள் சீரழியாமல் இருக்க ஏதாவது செய்வாரா??


நிச்சயம் செய்ய மாட்டார்... ஏனென்றால்.. அப்படி அவர் எதுவும் செய்தால் கூகுள் வேறு சி ஈ ஓ தேடிக்கொள்ளும்..

அப்புறம் மாஸ்டர் கார்டு கடன் அட்டை.... இந்த கடன் அட்டைகள் விரித்த ஆசை வலையில் விழுந்து இறந்துபோன ஈக்களை பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் முழுமையாய் எடுக்கப்படவில்லை.

தமிழனோ-இந்தியனோ.... எல்லாமே பணத்தையும், பதவியையும் மட்டுமே குறிவைத்துதான்...

பின்ன நாம ஏன்டா... டமிலன் , டமிலச்சி, இன்டிய பொங்கல் வைக்கணும்????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக