வியாழன், 29 ஜூன், 2017

CHILDREN OF HEAVEN

Image may contain: 2 people, people standing and outdoor
ஈரானின் தலைநகர்... டெஹ்ரானின் ஒரு ஏழ்மை நிறைந்த பகுதி... தங்கையின் (சாரா ) கிழிந்துபோன காலணியை தைக்க கொண்டுபோகும் அண்ணன்(அலி) .. அதை தைத்து வாங்கி ஒரு இடத்தில் மறைவாய் வைத்துவிட்டு, வேறு வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் வந்து பார்க்கையில் அந்த காலனி காணாமல் போய் விடுகிறது.... 



ஏழை தந்தையுடன் சொல்லி வேறு வாங்கித்தர சொன்னால் அடிப்பாரோ என்று பயந்த அந்த சிறுவர்கள், பள்ளிக்கூடம் செல்வதற்காக அண்ணனின் ஒரே காலணியை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு போவது வலியின் உச்சம்...
காணாமல் போன காலணியை உடன் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்து வர... அவளிடம் நேரடியாக கேட்காமல் அவளை பின் தொடர்ந்து அவளது வீடுவரை செல்கிறாள்.. சாரா...! காலணியை பறிகொடுத்த சிறுமி... அங்கு.. கண்பார்வை இல்லாத அவளின் தகப்பனின் நிலைகண்ட இந்த பிஞ்சு, அந்த காலணியை பற்றி எதுவும் கேட்காமல் திரும்பி விடுகிறது...



வேறொருநாள்... தான் தொலைத்த காலணியை அணிந்துவரும் சிறுமி, வேறொரு புதிய காலணியை அணிந்து வர... இப்போதாவது தன்னுடைய காலணி கிடைத்துவிடாதா.... என்ற ஆவலில் அந்த சிறுமியிடம்..”எங்கே உனது பழைய காலணிகள்..” என கேட்க... அவற்றை தன் தாயார் பழைய பொருட்கள் வாங்குபரிடம் கொடுத்துவிட்டதாய் சொல்கையில் நம் கதாநாயகி சிறுமி சாராவின் கண்களில் தெரியும் ஏமாற்றம் எமனையும் கலங்கவைக்கும்...



இப்படியான நிலையில் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டால் இரண்டாம் பரிசாக ஒரு புதிய காலணி கிடைக்கும் என்ற தகவல் கிடைத்த உடன், தங்கை “அண்ணா... எப்படியாவது இரண்டாம் பரிசு வாங்கி விடு..” என வேண்டுகோள் வைக்க.... நம் கதாநாயக சிறுவனும் இரண்டாம் பரிசை குறிவைத்து களமிறங்குகிறான்...

வெற்றியாளர்கள் வரிசையில் மூன்றாவதாக வந்துகொண்டிருக்கையில்.. நான்காவதாக வரும் வேறொரு சிறுவன் வேண்டுமென்றே காலை இடறிவிட.... விழுந்துவிடுபவனை பின்னால் வருபவர்கள் எல்லாம் முந்தி விடுகிறார்கள்... தங்கையின் தொலைந்துபோன காலணி... ஒருஜோடி காலணியை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடும் வேதனை.. எல்லாம் கண்முன்னே நிழலாட... வெறிகொண்டு எழுந்து ஓடுபவன்.. எல்லோரையும் முந்தி சென்று முதலாவதாய் வெற்றிக்கோட்டை தொடுகிறான்... பள்ளி ஆசிரியர்கள்.. சக மாணவர்கள்... போட்டி நடத்தியவர்கள் எல்லோரும் கொண்டாட.... ஆனால் இரண்டாம் பரிசாக காலணியை குறிவைத்து ஓடிய நம் கதாநாயக சிறுவனால்.. முதலாவதாக பெற்ற வெற்றியை முழுமையாக ஏற்கவோ.. கொண்டாடவோ முடியவில்லை.... கோப்பையுடன் வீடுதிரும்புபவன் வீட்டிற்குள் செல்லாமல் வெகுவாக தேய்ந்து கிழிந்த தன்னுடைய பழைய காலணியை கழற்றிவிட்டு புண்பட்ட காலை நீருக்குள் வைத்தபடி புழுங்குவதாய் கதை முடிகிறது..

இரண்டு சிறுவர்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படத்தை எடுக்கமுடியுமா... என ஆச்சர்யப்பட வைக்கிறது...

(நிற்க... நம்மூர் காக்காமுட்டையும் இந்த ரகம் தான் என்பவர்கள் கருத்தும் ஏற்கப்படுகிறதுஆனாலும்.. இந்த படம் வெளியானது 1999 – ஜனவரி 22... ஆகவே நம்மூர் இயக்குனர் இந்த படத்தை கண்டு.. அதனை மாற்றி யோசித்து கூட காக்காமுட்டையை எடுத்திருக்கலாம் )


மாஜித் மாஜிதி அவர்கள் எழுதி இயக்கி இருக்கும் இந்த பெர்சிய மொழி திரைப்படம் ஒரு நெகிழ்வின் உச்சம்... இணையத்தில் பார்க்க கிடைக்கிறது.... நீங்களும் பார்க்கலாமே...

(பெர்சிய மொழி எல்லாம் உனக்கு தெரியுமா என கேட்கவேண்டாம்... உணர்வுகளை உணரவும் புரிந்துகொள்ளவும் முடிந்தவர்களுக்கு மொழிகள் அனாவசியம்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக