புதன், 28 ஜூன், 2017

இலவசங்களை தூக்கி எறி... அப்புறம் கேள்..

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்.. மதுக்கடைகளை மூடுங்கள் என்று ஒரு சாரர் சொல்வதாக செய்திகள் வந்தாலும் அவர்கள் எந்த அளவு அதை மனதிலிருந்து சொல்கிறார்கள்.?? எத்தனை பேர் அவர்கள் இதுவரை வாங்கிய இலவச பொருட்களை அரசின் முகத்தில் வீசி எறிந்து போராட தயாராயிருகிரார்கள்..??
தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் குடிபழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் .. இந்த மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் சற்றேறக்குறைய இருபத்து ஒன்பதாயிரம் கோடி என்றும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..

Image may contain: 1 person, crowd

ஒரு குடிகாரர் ஒரு கால் போத்தல் மதுவை ரூபாய் என்பது(80.00 ) என்ற விலையில் தினசரி வாங்கும் போது அவரின் ஒரு ஆண்டு கொள்முதல் தொகை ரூ.29200.00. ஒருகோடி பேர் என்றால் ரூ.292000000000.00 ஆனால் இலவசங்கள் என்ற பெயரில் அரசு கொடுக்கும் பொருட்களின் மதிப்பு பதினாறாயிரம் ரூபாய் தானாம்...
இதற்கு அரசை மட்டும் எந்த விதத்திலும் குற்றம் சாட்டி விரல் நீட்ட முடியாது.. ஏனென்றால் அரசை நோக்கி ஒரு விரல் நீட்டும் போது மூன்று விரல்கள் நம்மை நோக்கி நீட்டுவதை தவிர்க்க முடியாது..



ஒரு அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில், பொது துறை நிறுவனங்கள் மூலமாக மக்களிடமிருந்து பெரும் வருமானத்தில் இயங்குவது தான்... பெருகி வரும் உற்பத்தி செலவு, நிர்வாக செலவு, உலக பொருளாதார காரணிகளால் ஏற்படும் பன்னாட்டு சந்தை பொருட்களின் கணிசமான விலையேற்றம் ஆகிவற்றால் அரசு தள்ளாடாமல் நடக்க வேண்டுமென்றால் அந்த அரசுக்கு போதிய வருமானம் அவசியம்...



இன்றைய நிலவரத்தில் நிர்வாகத்தை நடத்தவே சிரமப்பட்டு, பொது துறை நிறுவனகள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் இலவசங்கள் எப்படி சாத்தியம்..
(நிர்வாகத்தில் ஊழல் என்ற பகுதிக்குள் செல்ல நாம் விரும்பவில்லை )
ஒரு நிர்வாகத்தை தள்ளாடாமல் நடத்த எந்த ஆட்சியாளரும் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து செலவழிக்க மாட்டார்... நிர்வாகம் நடத்தவே பாக்கெட்டில் இருந்து செலவழிக்காத ஆட்சியாளர்கள் இலவசங்களை கொடுக்க எப்படி பாக்கெட்டிலிருந்து எடுப்பார்கள்..??
கடை தேங்காயை கூட இல்லை.. நமது தலையை தடவி நமது வீட்டு சொத்தை, நமது உழைப்பை சுரண்டி நமக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்று ஒருவர் சொன்னதும் பல்லை இளித்துக்கொண்டு அவரை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்தவர்கள் நாம்... அதன் தொடர்ச்சியாகவே அடுத்த தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் அதையே நடைமுறையாக்கி விட்டனர்...


இப்படி இலவசமாக கொடுக்க வேண்டாம்... நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த என்ன செய்ய போகிறீர்கள் என்று கூட கேட்கவில்லை... நிர்வாக சிக்கல்களுக்காக, அரசின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வரிகளோ- கட்டண உயர்வுகளோ செய்தால்.... எதையாவது செய்து மக்களின் மனதில் இருந்தால் தான் அடுத்த ஆட்சி கட்டிலில் நமக்கும் இடம் கிடைக்கும் என்ற நோக்கில் உசுப்பி விடும் எதிர் மற்றும் எதிரி கட்சிகளின் தூண்டுதலில் போராட போய் விடுவோம் நாம்...

புதிய வரிகளோ- கட்டண உயர்வோ கூடாது... இலவசங்களை அள்ளி தர வேண்டும்... இதுதான் நம் நோக்கம்.
நமக்கு எப்படியாவது வருமானம் வேண்டும்.. ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று நினைக்கும் அரசியல் வாதிகள் இதற்காக கண்டு பிடித்த அட்சய பாத்திரம் தான் மது கடைகள்...
இந்த மதுக்கடைகளை மூட சொல்லும் நாம் இலவசங்களை மறுப்பதற்கும்... விலையேற்றம், புதிய வரிகள் ஆகியவற்றை ஏற்க தயாராகவும் இருக்கும் பட்சத்தில் மதுக்கடைகளை மூட சொல்லி அரசை வற்புறுத்த உரிமை இருக்கிறது..
அப்படி இல்லை என்றால்...


தமிழ்நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில் 3 கோடி பேர் குழந்தைகள். அவர்கள் மட்டும் போனால் போகட்டும்.. மீதமிருக்கும் நான்கு கோடி பேர்களும் குடிக்க வேண்டும் என்ற இலக்கு வைத்து.. அப்படி குடிக்க வைக்க பெண்களுக்கான தனி மதுக்கடைகள்..., குடும்பத்தோடு குடிப்பதற்கான தனி மதுக்கடைகள் போன்ற புரட்சி திட்டங்களை ஏற்படுத்தி விற்பனை இலக்கை 29 ஆயிரம் கோடியிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி என்று உயர்த்தவும் அரசு தயங்காது..

நம் இன்றைய இதே மனநிலையில் இலவசங்களுக்காக ஏங்கி தவித்தால் அரசுக்கு இதை தவிர வேறு வழி இல்லை... ஏனென்றால் தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு அடுப்பு, அரவை இயந்திரங்கள் , மின் விசிறி.. இவைகள் தான் கிடைத்திருக்கிறது நமக்கெல்லாம்...
இன்னும் ஹோம் தியேட்டர், செல்ஃபோன் , வாட்டர் ஹீட்டர், ஹேர் ட்ரையர் என்று சந்தையில் நிறைய இருக்கிறது...அவைகளையும் அரசு தானே இலவசமாக கொடுக்க வேண்டும்..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக