வியாழன், 29 ஜூன், 2017

டிராமா விவசாயி

ஸ்டாலினோ- ராமதாஸ்-அன்புமணியோ - வைகோ வோ - விஜயகாந்தோ - ஜெயலலிதாவோ - நரேந்திர மோடியோ - ராகுல் காந்தியோ...
விவசாய குடும்பத்தை பின்னணியாக கொண்டவர்களாகவோ.. விவசாயத்தை ஆதாரமாக கொண்ட நாட்டை சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம்... No automatic alt text available.


ஆனால் நிச்சயமாக இன்று அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களால் நேரடியாக வயலில் இறங்கி உழுவதற்கோ- வரப்பு வெட்டுவதற்கோ- நாற்று நடுவதற்கோ நேரம் இருக்காது... இதற்கெல்லாம் சம்பளத்திற்கு ஆள் வைத்து வேலை செய்யும் அளவிற்கு அவர்களுக்கு வசதி இருக்கிறது... இது தமிழக- இந்திய மக்கள் அனைவருக்குமே தெரியும்...


ஒரு குறிப்பிட்ட நபர்தான் அந்த வேலையை செய்ய முடியும் என்ற நிலையோ- குறிப்பிட்ட நபர்தான் செய்ய வேண்டும் என்ற நிலையோ இல்லாத இடங்களில், வசதியும்- ஆட்களும் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஒரு கூலி ஆளை வைத்து வேலையை செய்ய முடியும்...


மேலும், ஒரு கூலி ஆளை வைத்து உழவு செய்தால் கூலியாக 350 ரூபாய் கொடுக்க வேண்டும்... நாமே உழுதால் அது மிச்சமாகும்.. என்பது சரியான சிந்தனை..ஆனால் இந்த சிந்தனை வேறு வேலை இல்லாதவர்களுக்கோ- வேறு வேலைக்கு போக விருப்பமில்லாதவர்களுக்கோ சரியான சிந்தனை....

அதே நேரம், வேறு ஒரு வேலையை நாம் செய்தால் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், 350 ரூபாயை மிச்சம் செய்ய யாரும் நினைக்க மாட்டார்கள்.. 350 ரூபாய் கூலிக்கு ஒரு ஆளை அமர்த்தி உழவு செய்ய வைத்து விட்டு , 1000 ரூபாய் கிடைக்கும் வேலைக்கு போய் சம்பாதித்து, அதில் 350 ரூபாயை கூலியாக கொடுத்தால்... நமக்கு உழவும் ஆகும்... மேலும் 650 ரூபாய் கூடுதலாகவும் கிடைக்கும்....

இது ஒரு சாதாரண கணக்கு தான்...

கட்சியின் தலைவர்.. நிச்சயமாய் சில தொழில்களுக்கு அதிபர்கள்... கை காட்டினால் வேலை செய்ய லட்சக்கணக்கான அடிமைகள் வைத்திருக்கும் மேற்சொன்ன நபர்கள், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஏர் உழுவதை போலவும், மண் வெட்டியால் வெட்டுவதை போலவும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து தன்னை விவசாயி என்று பிரகடனப்படுத்திக்கொள்ள முற்படுவதும், அந்த புகைப்படங்களை பகிர்ந்து அடிமை தொண்டர்கள் புளகாங்கிதமடைவதும் ஒரு விவசாய தொழிலதிரபரான என்னை மிகவும் நகைக்க வைக்கிறது...


எல்லோருக்குமே தெரியும், எந்த அரசியல்வாதியும் ஒரு முழு நாள் உழவு செய்யவோ- வரப்பு வெட்டவோ- குப்பை கூட்டவோ வரமாட்டார்கள் என்பது.. ஆனால் எல்லாம் தெரிந்தும் எப்படி அந்த நாடகங்களை ரசிக்கவும்- கொண்டாடவும் முடிகிறது??

(குறிப்பு: இரண்டு சென்ட் இடத்தில் ஆஸ்பெட்டாஸ் கொட்டகை போட்டு குண்டூசி தயாரிக்கிறவர்- தீப்பெட்டி தயாரிக்கிறவர்கள் எல்லாம் தொழிலதிபர் வரிசையில் வரும்போது ஒன்றரை ஏக்கர் தென்னை விவசாயம் செய்யும் நான் ஏன் தொழிலதிபர் என்று சொல்லிக்கொள்ள கூடாது?? )
...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக