வியாழன், 29 ஜூன், 2017

பத்தேமாரி

Image may contain: 2 people, text
கள்ளத்தோணியில் பயணித்து வளைகுடாவிற்கு வந்து ஒரு சராசரி கூலிக்காரனாய் வாழ்ந்து மரிக்கும் ஒரு சாமான்யனின் கதை...
வளைகுடா நாடுகளுக்கு பயணப்பட்டு கால்நூற்றாண்டுகளை கடந்த பின்பும் கூட வாழ்க்கையின் பரப்பில் நிலைகொள்ள முடியாமல் அல்லாடும் எத்தனையோ நடுத்தர வர்க்கத்தின் ஒட்டுமொத்த பிம்பம் நாராயணன்.

சம்மந்தப்பட்ட திரைப்படம் மலையாளத்தில் வெளியானதால் மலையாளிகள் அதிகம் வசிக்கும் வளைகுடாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டதென்றாலும், நிகழும் சம்பவங்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளுக்கு கூலிக்கு வேலை பார்க்க சென்று பல ஆண்டுகளாகியும் நிலைகொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு சாமான்யனையும் நாராயணனில் பார்க்க முடிகிறது..


வரதட்சணையாய் தங்கையின் கணவன் வீடு கேட்க, வேறு வழி இல்லாமல் சொந்த வீட்டை தங்கைக்கு கொடுத்துவிட்டு, அதே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒரு மனிதனின் வலி...


கொஞ்சம் கொஞ்சமாய் குருவி போல சேர்த்த பணத்தில் தன் மாடி வீட்டு கனவு நிறைவடைய சில வேலைகள் மட்டும் இருக்கும் தருணத்தில் நாராயணன் மரணத்தை தழுவ, சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் உடலை, புதிதாய் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டு வாசலில் கொஞ்ச நேரம் வைக்க கூட "புது வீடு.... இங்க வைக்க வேண்டாம் " என்று சம்மதிக்க மறுக்கும் மகன்....
உடலை எரியூட்டிவிட்டு வந்து வீட்டில் அமர்ந்திருக்கும் போது , ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக சில காலம் முன்பு , தன் வாழ்க்கை முறையை நாராயணன் எளிதாய் விவரிக்கும் பேட்டி ஒளிபரப்பாக எல்லோரும் கதறி அழுவதுடன் கதை முடிகிறது...

இயக்குனர் சலீம் அஹமது அவர்களின் இயக்கத்தில் வெளியான "பத்தேமாரி" என்ற வாழ்க்கை சித்திரத்தில் நாராயணனாகவே வாழ்ந்திருக்கும் மம்முட்டி ஒட்டுமொத்த "தோற்றவர்களின்" பிம்பமாய் தெரிகிறார்...

நியாயமாய் "சிறந்த பட"த்திற்கான தேசிய விருது இந்த படத்தை தான் தேடி வந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து...

பாகுபலியின் பிரம்மாண்டம் பத்தேமாரியை மறைத்துவிட்டது...
சாமான்யனின் குரல் எப்போதுமே பிரம்மாண்டங்களால் நசுக்கப்ப்ட்டுக்கொண்டுதானே இருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக