பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி ரிசல்டிற்காக காத்திருந்தோம்... நானும் என் அண்ணனும்... அண்ணன்...சித்தப்பா மகன்... பக்கத்து வீடு... ஆனால் பங்காளித்தகராறு காரணமாக நினைவு தெரிந்த நாள் முதல் எந்த பேச்சு-வழக்கும், கொடுக்கல்-வாங்கலும் இல்லாத உறவு...
அப்போதெலாம் மாலை மலர்- மாலை முரசு போன்ற பத்திரிகைகள் வாயிலாகவே தெரிந்துகொள்ளும் வசதி உண்டு... தேர்வு எழுதிய மாணவ கண்மணிகள் பெரும்பாலானோர் "ரிசல்ட் பேப்பர்" வாங்க பட்டுக்கோட்டை செல்வார்கள்.. சுமார் மூன்று மணி அளவில் மாலை பத்திரிகைகள் ஏஜென்சி க்கு வரும்....
தேர்ச்சி வெளியிடும் நாள் அன்று வழக்கம் போல உள்ளூரிலேயே நான் இருக்க ....உள்ளூர் மாமன்-மச்சினன் வகையறாக்கள் கிண்டல் செய்தார்கள்.. "என்ன மாப்ளே.. ரிசல்ட் பேப்பர் வாங்க போகலையா.... விட்றா விட்றா... நம்ம ரிசல்ட் பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுக்கனுமா...." என்று...
ஏனென்றால்.... ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வின் முந்தைய இரவும், வேதியியல் தேர்வு நாளின் முந்தைய இரவும் ஊரில் நடைபெற்ற காமாண்டி என்று சொல்லக்கூடிய "காமன் பண்டிகை" திருவிழாவின் "கரகாட்ட கலை இரவை" விடிய விடிய ரசித்து விட்டு மறுநாள் தேர்வு எழுதிய வீரவரலாறை ஊரே அறியும்.. ஆகவே நமது தேர்ச்சி பற்றி அவர்களே ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்...
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக இனிப்புகளுடனும், மாலை பத்திரிக்கைகளுடனும் ஊருக்குள் வர.. அந்த பேப்பரில் நம்முடைய தேர்வு என்னும் இருக்கிறதா என்று பார்க்க.... அட.... தற்காலிக எட்டாவது அதிசயமாய் (நிரந்தர எட்டாவது அதிசயம் ஐஸ்வர்யா ராய்.... ஒன்பதாவது அதிசயம் "தானைத்தலைவி" அனுஷ்கா என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இருக்க கூடாது) எனது தேர்வு எண்ணும் அச்சாகி இருந்தது...
(மூன்று நாட்கள் கழிந்துதான் மார்க் தெரியும் என்பதால் அப்போதைய சந்தோசம் தேர்வு பெற்ற எல்லோருக்கும் பொதுவானது .... "நீ எத்தனை மார்க் வாங்கின.." என்று கேட்பவர்கள் மீது பாலியல் வன்கொடுமை" வழக்கு போடப்படும்)
ஆனால் விடிய விடிய படித்துக்கொண்டிருந்த என் அண்ணன் துரதிஷ்டவசமாக தேர்ச்சி அடையவில்லை.... அன்று எனது அம்மா திருமதி அலமேலு ஆச்சி சொன்னார்..... "அந்த பையன் பெயிலாயிட்டானாம்.... நீ ஒழுங்கு மரியாதையா அடங்கி வீட்டுல இரு... சாக்லேட் வாங்கிறேன்... புண்ணாக்கு வாங்குறேன்னு கிளம்பினா தோலை உறிச்சுடுவேன்...."
அதாவது சுமார் முப்பது இருபது வருடங்கள் உறவு அற்றுப்போய் கோழிச்சண்டை-வேலிச்சண்டை என்று வாழ்ந்த நிலையில் கூட அந்த பையனின் மனதை என்னுடைய வெற்றிக்கொண்டாட்டம் புண்படுத்தி விட கூடாது என்ற அக்கறையே என் தாயின் அந்த கண்டிப்பு...
அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்ததாலோ என்னவோ.... இஸ்லாமிய நண்பர்கள் ரம்ஜான் நோன்பு இருக்கும் வேளையில் அவர்களின் முன்னால் எதையும் சாப்பிடுவதையோ - குடிப்பதையோ தவிர்த்து விடுவேன்...
அதே நேரம்.. நான் சாப்பிட்டிருந்தாலும் அவர்கள் எதுவும் சொல்லப்போவதில்லை... அவர்களின் பெருந்தன்மை அது....
ஒரு தவிர்த்தலும்- ஒரு சகித்தலும் நல்லுறவை வளர்க்கும்....
பாவம் பசுமாடு......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக