அடுத்த பத்து நாட்களுக்குள் அகற்றியே தீரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கிறது... உயர்நீதி மன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை என பொதுமக்கள் பொங்கல் வைக்கிறார்கள்...
ஏதோ முந்தாநாள் இரவில் யாரோ விதைத்துவிட்டு சென்ற கருவேல மரங்கள் நேற்று பகல் எல்லாம் நிலத்தடி நீரை உறிஞ்சி காலி செய்துவிட்டதால் இன்று தமிழகமே வறண்டு போய் விட்டதை போலவும்.. இன்று மதியம் தூக்கத்தின் போது “கடவுள்” அவர்கள் கனவில் வந்து... “அடேய்களா.... உடனே அந்த சீமைக்கருவேல மரத்த எல்லாம் வெட்டலன்னா உங்க சந்ததியே அழிஞ்சு போய்டும்டான்”னு சொன்னதை போல உயர்நீதிமன்றம்-அரசியல் தலைவர்கள்-பொதுமக்கள் எல்லாம் திடீர் ஞானோதயம் பெற்று பரபரப்பாகி இருக்கிறார்கள்...
இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்று ஒருபக்கம் பாராட்ட தோன்றினாலும்... சில பழைய நினைவுகளை கிளறிப்பார்ப்பது அவசியமாகிறது...
சுமார் நாற்பதாண்டுகாலம் முன்பு புதுக்கோட்டை-ராமநாதபுர மாவட்டங்களில் வான்மழை பொய்த்து மிகப்பெரிய வறட்சி நிலவி விவசாயம் அற்றுபோய்விட்ட காலம்... ஏரி -குளங்கள்-கம்மாய்கள் எல்லாம் வறண்டு வெடித்துப்போய் மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போன கோர வருடங்கள் அவை.. தம்மையும் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி அப்பகுதி மக்கள் கையில் அகப்பட்ட சுமக்க முடிந்த உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தஞ்சை நாகை மாவட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள்... அப்படி நாற்பதாண்டுகளுக்கு முன்பு சொந்த நாட்டிலேயே அகதிகளாய் புலம் பெயர்ந்து எங்கள் பகுதிகளில் குடியேரிவர்களில் சிலர் , எங்கள் பகுதி மக்களின் அன்பால் ஈர்க்கப்பட்டு இன்றளவும் கூட மீண்டும் அவர்கள் பகுதிக்கு மீள்குடியேற விருப்பமற்று எங்கள் பகுதியிலேயே தங்கிவிட்டதற்கு நிகழ்கால சாட்சியங்கள் நிறைய உண்டு...
அப்படி வறட்சி கோரத்தாண்டவமாடியே வேளையில்தான் இந்த சீமைக்கருவேல மரங்களை அரசே அரசு செலவில்....(மக்கள் வரிப்பண செலவில்) ஏரிகளில் நடவு செய்தது.... அடுத்தடுத்த வருடங்களில் இவர்கள் அதிவேகமாக அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் பரவி இன்று ஒட்டு மொத்த தமிழகத்திலும் வியாபித்து நிற்கிறது...(இதன் பௌதீக-ரசாயன-தாவரவியல் தீமைகளை ஏற்கெனவே பற்பல அறிஞர் பெருமக்கள் விரிவாக சொல்லிவிட்டபடியால்....அதை நாமும் சொல்ல வேண்டியதில்லை ) அன்று விதைத்த அந்த விதைகள் தான் இன்று விருட்சமாய் வளர்ந்து வியாபித்து மானுட தீமைக்கு ஒரு பெருங் காரணமாய் நிற்கிறது.... இப்போது இதை வெட்டிக்களைய அரசு செலவில் (மக்கள் வரிப்பணத்தில்) அடுத்த திட்டம்...
இன்னொரு விஷயம்... ஏறக்குறைய அதே காலகட்டத்தில்... அல்லது ஐந்தாறு வருடங்கள் கழித்து நெய்வேலி காட்டாமணி என்று சொல்லக்கூடிய ஒருவகை செடி எங்கள் பகுதிகளில் அறிமுகமானது... அப்போது இதன் ஆக்டோபஸ் சக்தி அறியாதவர்கள் தங்கள் தோட்டத்திற்கு வேலி அமைக்க.... அடுப்பெரிக்க.... அதன் இலைகளை வைத்து மாலை கட்ட... என பல்வேறு அரிய (!!) பயன்பாடுகளுக்காக வீட்டிலேயே கூட நடவு செய்தார்கள்... வீடுகளில் நடப்பட்ட சிற்சில செடிகளை நாளடைவில் அழித்து விட்டார்கள்.... ஆனால்... யாராலும் அழிக்க முடியாத மாபெரும் சக்தியாய் வளர்ந்த அந்த செடி தன் ஆக்டோபாஸ் கரங்களால் பல ஏரி- குளம்-கால்வாய்களை சுவடு தெரியாமல் தின்று தீர்த்திருப்பது சமகால வரலாறு... முட்டி வலியால் வீட்டுக்கும் வாசலுக்கும் நடக்க கூட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த நெய்வேலி காட்டாமணக்கு தூர்த்துவிட்ட ஏரிகள் வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றன..
இவ்வளவுக்கு பிறகும் கூட நாம் தொலைத்துவிட்ட ஏரிகளை பற்றி கவலைப்படாமல் இன்று ஆட்சியாளர்கள் வீசி எரியும் நூறுநாள் வேலைவாய்ப்பு என்ற எலும்புத்துண்டை நோக்கி மக்கள் எனும் நாய்கள் ஆவேசமாய் பாய்வதை அருவருப்ப்போடுதான் பார்க்க முடிகிறது...ஆக.... இன்று விதைக்கப்படும் விஷ விதைகள் சற்றேறக்குறைய அரை நூற்றாண்டு காலம் கழிந்தோ-அதற்குள்ளாகவோ மானுடக்கருவருக்கும் விருட்சமாய் வளரும் என்பதற்கு சமகால சீமைக்கருவேல மரங்களும்- நெய்வேலி காட்டாமணியுமே மௌன சாட்சிகள்...
இன்னொரு விஷயம்.... தற்போது எங்கள் பகுதியில்... (தமிழகம் முழுவதுமாக கூட இருக்கலாம்..) ஒரு புதுவகையான செடி வளர்ந்து வருகிறது... சற்றேறக்குறைய சூரியகாந்தி பூக்களை ஒத்த மஞ்சள் நிற பூக்களுடன் ஓங்கி வளரும் குத்து செடியான இதன் பெயர் எங்கள் பகுதியில் நான் விசாரித்தவரை யாருக்குமே தெரியவில்லை...
இது எங்கிருந்து.. யார் மூலம் எங்கள் பகுதிக்கு வந்தது என்ற கேள்விக்கான விடை கிடைக்காமல்.. கேள்வியாய் மட்டுமே நிற்கிறது.... அந்த சீமைக்கருவேல மரங்களை போல.... அந்த நெய்வேலி காட்டாமணி செடியை போல.... இந்த செடியும் ஏதோ ஒரு அழிவை முன்னெடுத்தே விதைக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.... இதம் மீது சந்தேகம் எழ சில காரணங்களும் இருக்கிறது.... ஒருகுச்சி வெட்டி நட்டாலும் உடனே தளிர்த்து வளர்கிறது... மற்ற செடிகள் எல்லாம் தயக்கத்துடனே வளரும் இடங்களில் கூட(அதாவது நிலத்தின் சத்து குறைந்த இடங்களில்) இவைகள் செழித்து வளர்கிறது... வெகு வேகமாய் பரவுகிறது... (நெய்வேலி காட்டாமணி கூட இப்படித்தான் அதிவேகமாக பரவியது)
எதையும் ஆராயாமல் வளர்த்துவிடும் மாக்கள் அடங்கிய தமிழ் சமூகம் இப்போது இதையும் வீட்டுக்கு வீடு வளர்த்துக்கொண்டிருக்கிறார்
வழக்கம் போல கார்பொரேட் அரசியல்வாதிகள் தங்கள் கடமையை செய்வார்கள்.... அடுத்த இருபத்தைந்து ஆண்டுகாலத்திற்கு அப்பால் ஒரு அழிவை ஏற்படுத்தும் அடுத்த விதையை விதைப்பதில் மும்முரமாயிருப்பார்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக