"தம்பி... ஏரிச்சாமிக்கு இந்த வருஷம் கிடா வெட்டனும்டா..." அம்மா சொன்னபோது எனக்கு ஒன்றும் ஆச்சர்யமாய் இல்லை...
ஐம்பது ரூபாய் செலவு செய்து கொஞ்சம் கூடுதலாய் முயற்சி செய்தால்
நடந்துவிடக்கூடிய காரியங்களை எல்லாம்... குத்து விளக்கு வாங்கி
வைக்கிறேன்... கோழி அறுக்கிறேன்... படையல் போடுறேன்...மணி வாங்கி வைக்கிறேன் என்று பல்வேறு வேண்டுதல்களை உள்ளூர் ஏரிச்சாமி முதல் தூரமாய் இருக்கும் சாமிகள் வரை ஐநூறு முதல்
ஐயாயிரம் ரூபாய்கள் செலவு செய்யும் படி வேண்டுதல் வைத்து ... வழக்கம் போல
ஐம்பது ரூபாய் செலவிலும் கூடுதல் முயற்சியிலும் காரியம் ஆன உடன்
"பாத்தியா... நாஞ்சொல்லல... எஞ்சாமி செஞ்சு கொடுத்துடிச்சு பாரு"
அம்மாவின்
நம்பிக்கையை எப்போதுமே சிதைத்ததில்லை... அவள் ஆசைப்பட்டபடியே
குத்துவிளக்கோ கோழியோ... வாங்க சொல்லி பணம் கொடுப்பது வழக்கம்... ஒரே
விஷயத்திற்காக பல சாமிகளிடம் வேண்டுதல் வைக்கும் போது.. காரியம் ஆன உடன்
வாக்கு கொடுத்தபடி சில சாமிகளுக்கு மட்டும் கோழியோ குத்துவிளக்கோ
கொடுத்துவிட்டு , சில சாமிகளை மறந்துவிடுவதும் உண்டு... சாமிகளும்
மறந்திருக்குமா என தெரியாது... எப்போதாவது ஞாபகம் வந்தது போல... அம்மா
கேட்பாள்...
சூழ்நிலைகளின்
காரணமாக சில பல வேண்டுதல்கள் பல வருடங்களாக தள்ளிப்போடப்பட்டும்
இருக்கிறது.. வேறு ஏதாவது காரியத்தடங்கல்கள் ஏற்படும் போதோ.. காயப்பட
நேரும்போதோ.. "இது சாமி கொற தான்... ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி கூட
சொப்பனம் கண்டேன்..." என்று அம்மா அங்கலாய்ப்பாள்.. அந்த நேரத்தில் எனக்கே
கூட அப்படியும் இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதை மறுப்பதற்கில்லை...
தீபாவளிக்கு
முன்தினமும், பொங்கலுக்கு முன் தினமும்... எப்போதாவது வெளிநாட்டில்
இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும் மாமாவின் விஜயமும் ஆட்டுக்கறியை
அறிமுகம் செய்யும்... கோழி குனங்கிப்போனாலோ , கொக்குநோவு வருதுன்னு பேச்சு
அடிபட்டாலோ கோழிக்கறியை குழம்பு சட்டி ருசி பார்க்கும்... அப்படியான
வாழ்க்கை முறையில் ஏரிச்சாமிக்கு வருடந்தோறும் இல்லாவிட்டாலும் மிக
முக்கியமான வேண்டுதல்களுக்கு கிடா வெட்டும்போது.. அதுவும் ரெட்டை கிடா
வெட்டும் போது,மூணு
நாளைக்கு சுண்ட வச்சு சுண்ட வச்சு சாப்பிடலாம்.. அதோடு எலும்பில்லாத
கறியில் உப்பும் மஞ்சளும் பூசி சணல்ல கோத்து வெய்யில்ல காயவச்சு
உப்புக்கன்டமா மாத்தி பூனை பிச்சுகிட்டு போய்டாம உறில கட்டி தொங்கவிட்டு
வாரம் ஒருமுறையோ.. ரெண்டுவாரத்துக்கு ஒருமுறையோன்னு முருங்கக்காய
(வீட்டுலையே காய்ச்சது) வெட்டிப்போட்டு கொழம்பு வச்சு சாப்பிடலாம்.... இந்த
உப்புகண்டம் ரெண்டு மூணு மாசத்துக்கு கூட வரும்...
ஆக...
நம்ம காரியத்த சாமி நடத்தி கொடுத்ததுக்கு சாமிக்கு காணிக்கை கொடுக்கிறது
ஒரு காரணமா இருந்தாலும்.. கறி தின்கிற ஆசையும் நிறைவேறும்... அம்மா
மட்டுமில்ல.. ஊர்ல எல்லோருக்குமே இப்படி ஏதாவது வேண்டுதலும் , கடனும்
இருக்கும்.. அது அப்போ அப்போ கோழியாவோ-கிடாவாவோ மாறி சட்டிக்கு வரும்...
என்னை
பொறுத்தவரை அப்படியான வேண்டுதல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை... அதற்காக
கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகன் இல்லை... அவரவர் நம்பிக்கையின்
அடிப்படையில் பல்வேறு உருவங்கள் கொடுக்கப்பட்டாலும் கடவுள் ஒருவனே..
அவனுக்கு முனீஸ்வரன் உருவம் கொடுத்தால் முனீஸ்வரன்.. வீரனார் உருவம்
கொடுத்தால் வீரனார்... அவ்வளவுதான்...
மொட்டையடிப்பதாலோ,கிடா
வெட்டுவதாலோ கடவுள் கேட்டது செய்வார். இல்லையென்றால் கெட்டது செய்வார்
என்றால் அவர் கடவுள் இல்லை... மாறுவேடத்தில் இருக்கும் யாரோ மந்திரவாதி...
எனக்கு தெரியும் என் கடவுளை...!! எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தவர் அவர்..
என்னிடம் கொடுக்கும் போதே அவருக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளலாமே...
என்னிடம் கொடுத்துவிட்டு நான் கொடுக்கும் கோழிக்கும், கிடாவிற்கும் கையேந்த
அவர் என்ன ..................??
ஆனால்... அம்மாவின் நம்பிக்கையை குலைக்க நான் யார்?? என்னுடைய சிந்தனைகளை அம்மாவின் வாழ்வில் புகுத்த எனக்கென்ன உரிமை இருக்கிறது... அம்மாவை அப்படி நினைக்க வைப்பதும் என்னை இப்படி சொல்ல வைப்பதும் கூட கடவுள்தான்...
கடவுளின் கடனை தீர்க்கவென அல்லாமல் அம்மாவின் ஆசைக்காக... ஏரிச்சாமிக்கு இரட்டை கிடா வெட்ட வேண்டும்...
கடவுள் நம்பிக்கையை போலவே தான் முன்னோர்களுக்கு படையல் வைப்பதும். இறந்தவர்களுக்கு பிடிக்கும் என்று அசைவ / சைவ சாப்பாடுகளோ, வடை-முறுக்கு என்று பலகாரங்களோ.. இன்னும் ஒருபடி மேலே போய் பீடி-சிகரெட்-சுருட்டு-விஸ்கி -பிராந்தி
வகையறாக்களுடனோ கூட படையல் வைப்பார்கள்.. இறந்தவரின் ஆத்மா இவைகளை (அதாவது
இவற்றின் சாரத்தை )எடுத்துக்கொள்ளும் என்பது நம்பிக்கை.. அது அவர்களின்
நம்பிக்கை மட்டுமே என்பது என் எண்ணம்..
கை
மட்டுமே என்பது என் எண்ணம்.. மேலும் பெற்றோர்களோ, மற்ற முன்னோர்களோ
இறந்தால் வருடா வருடம் அந்த தினத்தில் விரதம் இருந்தும், அமாவாசை
நாட்களில் அசைவம் தவிர்த்தும் விரதம் இருப்பார்கள். அமாவாசை தினத்தில்
சூரியன்-பூமி-சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்.. அதனால் பூமியின் ஈர்ப்பு
சக்தியில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக கடல் கொந்தளிக்கும்.. மனிதனின்
சமநிலையில் மாறுதல்கள் ஏற்படும் . ஆகவே சாப்பிடாமல் இருப்பதோ, ஜீரணத்திற்கு
அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத உணவுகளை உட்கொள்வதோ நலம் பயக்கும்
விளக்கத்தை தாண்டி வேறு ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை...
என் தந்தை இறைவனடி சேர்ந்த பிறகு நான் எந்த அமாவாசைக்கும் பட்டினி கிடைக்கவில்லை... விரதம் இருக்கவில்லை.. ஞாபகம் வைத்து அசைவம் தவிர்க்கவில்லை.. நான் ஒரு அசைவ விரும்பி என்பது என் தந்தைக்கு தெரியும்.. அவர் எப்படி நினைப்பார்.. நான் அசைவம் சாப்பிடாமல் அவருக்காக விரதம் இருக்க வேண்டுமென்று??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக