வியாழன், 29 ஜூன், 2017

ஈழம் சாத்தியமாகி இருக்கும்

Image may contain: one or more people, people standing, outdoor and nature

ஏற்கெனவே எழுதிய விஷயம் தான்... சமகால நடப்புகளுக்காக சில கூடுதல் விஷயங்களுடன்...

இலங்கையில் சிங்களர்கள்-தமிழர்களுக்கான பிரச்சினையின் ஆணிவேர் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு யாழ் பல்கலை கழக மாணவர் பிரச்சினையாகத்தான் உருவெடுத்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது..

திருமதி இந்திரா காந்தி அவர்களின் இலங்கையை எப்போதுமே இந்தியாவின் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற இந்திய பாதுகாப்பு நலன் சார்ந்த நோக்கத்தின் வழியாகத்தான் இலங்கை உள்விவகாரம் ஆயுத போராட்டமாக உருவெடுத்தது என்பதும் உண்மை..

உலக வரைபடத்தில் இந்தியாவின் நேர் கீழாக தென் துருவம் மட்டுமே இருக்கிறது... நடுவில் இருக்கும் ஒரே வேற்று நாடு இலங்கை மட்டுமே... இந்த இலங்கை தன்னுடைய (அடங்கியோ-நட்பாகவோ) கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் வேறு எந்த அந்நிய சக்திகளும் உள் நுழைய முடியாத பாதுகாப்புடன் இந்தியப்பெருங்கடல் பகுதி இருக்கும் என்பது அவரின் தொலைநோக்கு பார்வை...

அந்த நடவடிக்கையின் உள்ள்ளீடாகவே தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திற்கு இந்தியா உதவியது... இந்திராகாந்தி அவர்களின் மரணமும், அதை தொடர்ந்த ஆட்சி மாற்றமும் இலங்கை போராட்டத்தில் பல மாறுதல்களை கொண்டுவந்தது...

இவைகள் எல்லாம் ஒரு உலகப்பார்வையாளனாக, ஒரு இந்திய பிரஜையாக நாம் கவனித்த விஷயங்கள்.. அறிவுக்கான இடம்...


மொழி புரியாத இடத்தில் திடீரென கேட்கும் ஒரு தாய்மொழி குரல் எப்படி ஒரு எல்லைகடந்த பாசத்தை கொண்டுவருமோ அப்படியான ஒரு நெருக்கம் இலங்கை தமிழர்கள் மீது எப்போதுமே உண்டு.. அந்த வகையில் இந்தியபாதுகாப்பு நடவடிக்கைகளை கடந்து உணர்வுப்பூர்வமாக யோசித்தால்... அவர்களுக்கான விடியலை இந்திய அரசு நேரடி ராணுவ நடவடிக்கைகள் மூலம் கூட எடுத்திருக்க முடியும் என்ற எண்ணமே மேலோங்குகிறது..


வளைகுடாவில் ஈராக் என்ற ஒரு நாடு திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்து குவைத் என்ற ஒரு நாட்டை தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர... அங்கே அமெரிக்கா மூக்கை நுழைத்தது... நேசநாடுகள் என்ற பெயரில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கூட அமெரிக்காவுடன் இணைந்து குவைத்தை ஈராக்கிடம் இருந்து மீட்டு (???!!!)அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சில-பல காலம் வைத்திருந்து கடைசியில் வேறு வழி இல்லாமல் "நாங்கள் குவைத்தை ஆக்கிரமிக்க வரவில்லை... குவைத் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த ராணுவ நடவடிக்கைகள் எடுத்தோம்" என்பது போல அங்கே ஒரு அரசை நிறுவியது....


அதேபோல, இந்தியா இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுத்திருந்தால்.. இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் எப்போது மூக்கை நுழைக்கலாம் என்று காத்திருக்கும் உலக நாட்டாமை அமெரிக்கா நிச்சயம் இலங்கைக்கு ஆதரவளிக்கிறேன்.. ஜனநாயகத்தை காக்கபோகிறேன் என்று களமிறங்கி இருக்கும்.. ராணுவபலம் மிக்க நாடான இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்திருக்கும்... ஆனால் இந்த பஞ்சாயத்தும்-பதிலடியும் பல பல ஆண்டுகளுக்கு மீளவே முடியாத இழப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பது நன்கறிந்த விஷயம்...

வெயிட்... இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்??? இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்கிறாய்... உடனே அப்படி ராணுவ நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா தலையிட்டு பெரும் அழிவு நேரிட்டிருக்கும் என்றும் சொல்கிறாய்... எடுத்திருகலாமா-கூடாதா??

இதுதானே உங்கள் கேள்வி.... தொடர்ந்து படிக்கவும்..

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட உடன், அதனை ஆப்கானிஸ்தானை தலைமையமாக கொண்ட அல்-கொய்தா தீவிரவாதிகள் தான் நடத்தினார்கள் என்பதை உடனே கண்டுபிடித்து (???!!!) ஆப்கன் மீது வரலாறு காணாத ராணுவ தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்தபோது, உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்ததா.. இல்லையா?? ஏன் வேடிக்கை பார்த்தது..? ஏனென்றால்... அமெரிக்காவில் புகுந்து தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்றவர்கள் மீதான அமெரிக்காவின் தார்மீக கோபம் அது... ஆகவே தாக்குதலை நடத்திய தாலிபான்-அல் கொய்தா தீவிரவாதிகள் அதற்கான பலனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பது போலத்தான் இருந்தது உலக நாடுகளின் அமைதி...


அதே போல... இந்தியாவின் முன்னாள் பிரதமரும்- நாட்டின் மிகப்பெரிய கட்சியின் தலைவருமான ராஜீவ் காந்தி அவர்கள் கொல்லப்பட்ட்டபோது அதை நிகழ்த்தியவர்கள் இலங்கையில் செயல்படும் ஒரு தமிழ் போராட்ட (அ)தீவிரவாத குழு என்று விசாரணை அறிக்கைகள் உறுதி செய்த பின் உடனடியாய் இலங்கை மீது ராணுவ நடவடிக்ககைளை தொடங்கி, இலங்கையை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சில-பல ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்து பிறகு இலங்கை -ஈழம் என்று இரு தனித்தனி நாடுகளாக பிரித்துக்கொடுத்துவிட்டு வந்திருக்கலாம்...


"அந்த நாட்டின் மிக முக்கியமான மனிதரை அவர்கள் கொன்றுவிட்டார்கள்.. அதனால் அவர்கள் ராணுவ நடவடிக்கை எடுக்கிறார்கள்" (இரட்டை கோபுரம்-ஆப்கன் யுத்தம்) என்ற நிலையில் வேறு நாட்டினர் தலையிட்டிருக்க மாட்டார்கள்...

சில காலத்திற்கு பிறகு இலங்கையை இரண்டாக பிரித்து கொடுத்து, அங்கே மக்கள் ஆட்சியை (??!!) மலரச்செய்து துணைக்கண்ட நாட்டாமை ஆகவும் மீசையை முறுக்கி இருக்கலாம்..

ஆனால் மேலே சொன்ன ராஜதந்திர நடவடிக்ககைகளை மேற்கொள்ள ஒரு ஸ்திரமான தலைமை அப்போது இந்தியாவில் இல்லாமல் போனதுதான் இலங்கை தமிழர்களின் துரதிஷ்டம்...


கொத்துக்குண்டுகள் வீசி அப்பாவி மக்களை கொன்று கொத்துக்கறி போட்டபோது தன்னுடைய ஆட்சியை, மத்தியில் இருந்த தன் வாரிசுகளின் பதவியை காத்துக்கொள்ளும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்ட திரு கருணாநிதி அவர்கள், இப்போது சர்வதேச விசாரணை கோரி இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்... இவர் மட்டும் தன்னுடைய பதவியை , தன வாரிசுகளின் பதவியை தற்காலிகமாய் அப்போது துறக்க துணிந்திருந்தால் அடுத்து பத்தாண்டுகளுக்காவது அசைக்க முடியாமல் முதல்வர் நாற்காலியில் அமரும் உரிமையை பெற்றிருக்கலாம்...


ஆனால் இப்போது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய உடன் இந்திய அரசிடம் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைப்பது..."இவர் திருந்தவில்லை... மனம் வருந்தவில்லை..." என்ற பாடல் வரிகளையே நினைக்க வைக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக