வியாழன், 29 ஜூன், 2017

இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் - பொதுமக்கள் பங்கு

No automatic alt text available.
"இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் " – அதாவது உள்கட்டமைப்பு...இந்த வார்த்தையை ஏதோ ஒரு தொலைகாட்சி விவாதத்திலோ, ஏதோ ஒரு பத்திரிகை பக்கங்களின் வணிக செய்திகளிலோ படிக்கும் போதெல்லாம் இது எதோ பெரிய விஷயம்... இந்த வார்த்தையை எல்லாம் புரிந்து கொள்ள பேரறிவு வேண்டும்... இதெல்லாம் பொருளாதார-வணிக-பொறியியல் வல்லுனர்களுக்கான வார்த்தை.. என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது...

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் அர்த்தம் விளங்கத்தொடங்கி இருக்கிறது... அப்படியானால் நானும் வல்லுனராகி விட்டேனா... என்றால்....

அட.... நான் வல்லுநர் எல்லாம் ஆகல....... அந்த வார்த்தை அத்தனை பெரிய விஷயம் இல்ல.... அம்புட்டுதேன்.... கொஞ்சம் திட்டமிடல்.. கொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் தொலை நோக்கு பார்வை.. இவற்றை கொண்டு ஒரு வீட்டை- நகரத்தை- நாட்டை நிர்மாணிப்பது, தகவமைப்பது, புணரமைப்பது... இதுதான் என்னை பேரறிவு தேவை என்றெல்லாம் பயப்பட வைத்த "இன்ஃப்ராஸ்ட்ரெக்சர்"என்ற வார்த்தையின் எதார்த்த அர்த்தம்...


அதாவது.. இந்த நகரில்/நாட்டில் இத்தனை மக்கள் வாழ்கிறார்கள்... அவர்களுக்கான சாலை-இருப்பிட-குடிநீர்-வடிகால் போன்ற அடிப்படை தேவைகள் இவ்வளவு... தற்போதைய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது , இன்னும் பத்தாண்டுகளில் இவ்வளவு மக்கள் தொகை பெருகும்.. இவ்வளவு வாகனங்கள் அதிகரிக்கும்.. இவ்வளவு குடியிருப்புகள் தேவைப்படும்.. அதற்கான சாலை வசதிகள் இப்படி இருக்க வேண்டும்.. குடிநீர் - வடிகால் வசதிகள் இப்படி இருக்க வேண்டும்... என்றெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கும் வித்தையே இந்த "இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் "


இந்த உள்கட்டமைப்பு.... இனிமேல் இப்படியே சொல்லலாம்... முறையாக அமைந்தால் என்னென்ன வளர்ச்சிகள் நிகழும்?
சாலைகள் முறைப்படி அமைந்தால் போக்கு வரத்து சீராகும்.. போக்குவரத்து சீராகும் போது மக்களின் பயண நேரம் மிச்சமாகும்.. பயண நேரம் மிச்சமாகும் வேகம், மற்ற உற்பத்தி பொருட்களின் இடம் பெயர்வு வேகமாகும்.. இதனால் உள்நாட்டு-வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலகங்களை இங்க அமைக்க முன்வருவார்கள்.

இந்த தொழிலகங்களுக்கான பணியாளர்கள் குடியிருக்க வசதியான இடங்கள் அமையும்.. இதனால் உற்பத்தி பெருகும்... நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படும்.. இப்படி பல.. பல... (ஒரு சாமானியனின் விளக்கம்தான் இது...பொருளாதார –வணிக நிபுணர்கள் இதை இன்னும் விரிவாக விளக்க இயலும்)
நான் வசிக்கும்/வசித்த மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் எண்ணெய் வளம் கொடுத்த அபரிமிதமான பொருளாதாரம் மற்றும் திறமையான நிர்வாகத்தின் மூலம் அப்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அற்புதமாக திட்டமிடப்படுகின்றன.

சாலைகள்-மேம்பாலங்கள்- சுரங்க பாதைகள், குடிநீர் குழாய்கள்- பாதாள வடிகால் வசதிகள் மற்றும் மின்-மின்னணு கம்பி பாதைகள் ஆகியவை முறைப்படி திட்டமிடப்படுகின்றன... இவை எல்லாம் மனித புத்தியின் கணக்கீடுகள்... ஆனால் அதையும் தாண்டி சில நேரங்களில் இயற்கையின் சீற்றம் அந்த திட்டமிடுதலை எல்லாம் தகர்த்து விடுகின்றன... ஆம்.... நமது நாட்டில் பெய்யும் ஒரே ஒருநாள் மழை இங்கு பெய்தால் நகரம் ஸ்தம்பித்து விடுகிறது... வடிகால் வசதி போதாமல் சாலைகளில் நீர் தேங்கி விடுகிறது... (முறைப்படி செயலாற்றும் சம்மந்தப்பட்ட அரசு துறைகள் அதை நிவர்த்தி செய்வதில் வேகமாக செயல்பட்டு அதை நிவர்த்தி செய்கின்றன) ஒரு நாள் மழையின் நிலைதான் இது.... நமது நாட்டில் பெய்யும் மழையை போல வாரக்கணக்கில் மழை பெய்தால் இங்கே என்ன ஆகும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்...
பெரும் பொருளாதாரம்- திறமையான நிர்வாகம்- இயற்கையின் பாதிப்புகள் குறைவான மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலேயே ஒரு நாள் இயற்கை சீற்றத்தின் பாதிப்புகள் இப்படி என்றால் வருடத்தில் ஆறு நான்கு மாத மழை, சில-பல புயல்-சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும், சுயநலத்தையே பெரிதாக நினைக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும், வேலையை செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் நிர்வகிக்கும், வளர்ச்சிக்காக திட்டமிடுவதை தவிர்த்து அதில் எத்தனை சதவிகிதம் நமக்கு கிடைக்கும் என்ற அரசியல்வாதிகள் நிறைந்த இந்தியா போன்ற, பொருளாதாரம் குறைந்த (அதாவது வேறு வருமான வழிகள் இல்லாமல் வரிகளை வைத்து திட்டமிடும்) நாடுகளில் இந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல...
இதற்கு முற்றிலும் அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது... இந்த உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டமிடுதலை அரசுகள் முன்னெடுத்தாலும், அதற்கான ஒத்துழைப்பை அளிக்க வேண்டியது பொதுமக்களாகிய நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமை.

மனித உற்பத்தி மட்டுமே எங்கள் கடமை.. மற்றதை எலாம் அரசு செய்ய வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை தவிர்த்து, நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் பொதுமக்களின் பங்கும், பொறுப்பும் என்ன என்பதை உணர வேண்டும். நகர பகுதிகளில் நிரம்பிவிட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள்.... அதனை சுற்றிலும் சிமென்ட் பரப்புகள்...சாலைகள் எல்லாம் தார் மற்றும் கான்க்ரீட் .. என மழை பெய்தால் ஒரு சொட்டு கூட தண்ணீர் உட்புகாமல் மூடிவிட்டு, பிறகு தண்ணீர் வீடுகளுக்குள் வருகிறது என்றால் அந்த தண்ணீர் எங்கேதான் போகும்??

கடைக்கு பொருட்கள் வாங்க பை எடுத்துக்கொண்டு போவதை கேவலமாக நினைத்து பாலித்தீன் பைகளில் வாங்கி வந்து அதை முறைப்படி குப்பை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசி எறிந்தால்.. அவைகள் பாதாள சாக்கடைகளை அடைக்கும்தானே... இருக்கும் கொஞ்சம் வடிகால் வசதியையும் இந்த பாலித்தீன் கவர்களால் மூடி விட்டால் பிறகு எப்படி வெள்ள நீர் வெளியேறும்?? சாலையில் தேங்கிய நீரின் மீது  வாகனங்களை ஓட்ட ஓட்ட அந்த நீர் சாலையை பெயர்க்காமல் என்ன செய்யும்...?? ஏரி-குளங்களை எல்லாம் தூற்று தூற்று ரியல் எஸ்டேட் காரர்கள் நடிக-நடிகைகளை வைத்து விளம்பரம் செய்ய செய்ய என்ன ஏதென்று விசாரிக்காமல் வீட்டு மனைகளை வாங்கிப்போட்டால் நீர் எங்கே சேமிக்கப்படும்??

பொறுப்பற்ற சுயநலமிக்க மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள் என ஒவ்வொருவருமே நம் நாட்டின் வளர்ச்சித்தடைகள்.... இவர்கள் எல்லாம் ஒழுங்கானவர்களாகி பொறுப்புடன் செயல் பட்டால் கூட இயற்கையின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகும் ஒரு நாட்டில் வெள்ள-வெயில் சேதங்களை தவிர்ப்பது ஒன்றும் எளிதான காரியமல்ல......
ஆயினும் நம்பிக்கையுடன் நமக்கான பொறுப்புணர்வையும், கடமையையும் உணர்வோம்... அப்போதாவது எங்களூர் பக்கம் சொல்வதை போல... “ஓங்கி அடிப்பது தாங்கி அடிக்குமல்லவா....”

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக