வியாழன், 29 ஜூன், 2017

அப்துல்கலாம் அனல்

Image may contain: 1 person, smiling

அப்துல்கலாம் அனல் சற்று ஓய்ந்திருக்கிறது.. சசி பெருமாள், அதனை தொடர்ந்த மதுவிலக்கு போராட்டம் என்று சமூக போராளிகளின் கவனம் மொத்தமாக திசை மாறிவிட்டிருக்கும் நேரத்தில் இப்போது கொஞ்சம் நிதானமாக யோசிக்கலாம்...

படித்தவர்-படிக்காதவர் , கிராமம்-நகரம் என்ற பாகுபாடின்றி அப்துல்கலாம் அவர்களின் மரணத்திற்காக பல்வேறு வழிமுறையில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதே... அவர் அப்படி என்ன செய்துவிட்டார்??

அவர் படித்த படிப்புக்கேற்ப அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்தார்.... அவ்வளவுதான்... அதற்கான ஊதியமாக அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைத்தது... அவை எல்லாம் விட, அரசியல் பின்னணி மட்டுமே கொண்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்று வந்த இந்தியாவின் முதல் குடிமகன் அந்தஸ்த்து அவரை தேடி சென்று திணிக்கப்பட்டது.... இதை விட வேறென்ன வேண்டும்??

அவரின் தேசபற்று, அவரின் அர்ப்பணிப்பு, அவரின் நேர்மை, அவரின் அயராத உழைப்பு, திருமணம் செய்துகொண்டால் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தது ( குடும்பத்திற்கான வருமானத்தையும் சம்பாதித்துக்கொண்டு , குடும்பத்தையும் பாதுகாத்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண கூலித்தொழிலாளியிடம் இந்த விஷயத்தில் அப்துல்கலாம் தோற்று விட்டார் என்பதே நிஜம்) இப்படியான விஷயங்களில் அவர் நிச்சயம் மதிக்கப்பட தகுதியானவர்தான் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை...

நேர்மையாய் இருந்த ஒரே காரணத்திற்காக வெளிநாட்டு சதியின் மூலம் பெண்களை வைத்து பொய்யாய் ஒரு நாடகம் நடத்தி தேசதுரோகம் மற்றும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டு ஊடகங்களால் அது விளம்பரப்படுத்தப்பட்டு பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட இந்திய விண்வெளி கழக தலைவர் நாராயணன் நம்பியை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்... அவர் மீது தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டபோது அதனை வரிந்துகட்டி ஒளிபரப்பிய ஊடகங்கள் ...பின்னாளில் அவர் ஒரு குற்றமற்றவர் என்று நிரூபணமான உண்மையை எத்தனை பேருக்கு கொண்டுபோய் சேர்த்தது???

அப்படியான எந்த சவால்களும், எந்த சதிவலையும் இவரை சுற்றி பின்னப்படவில்லை... கடைசி வரை அவருக்கான இடத்திற்கு, அவரின் தகுதிக்கு தகுந்த மரியாதை அவருக்கு கிடைத்தே வந்திருகிறது...

பொக்ரான் அணுகுண்டு, ஏவுகணைகள், விண்வெளி ஓடங்களில் இவரின் பங்கு மிக முக்கியமானதுதான்... ஆனால் இவர் மட்டுமே முக்கியம் அல்ல.. அவைகள் ஒரு குழுவின் முயற்சி... ஆரியப்பட்டாவை ஏவும் போது அப்துல்கலாம் இல்லை... இன்சாட் ஏவும் போது அப்துல்கலாம் இல்லை... ஆனாலும் அவைகள் நடந்தது தானே... அந்த தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாக அடுத்தடுத்த கட்டத்திற்கு நிச்சயம் போய் இருப்பார்கள் நம் விஞ்ஞானிகள்... அதில் ஒரு தலைமை பீடம் அப்துல்கலாமிற்கு வாய்த்தது.... அவ்வளவுதான்...

மற்றபடி, அவரது கண்டுபிடிப்புகளால்/செயல்பாடுகளால் எத்தனை சாமான்யர்கள் பலன் பெற்றிருக்கிறார்கள்?? இவரது கண்டுபிடிப்புகள் தனிமனித வாழ்க்கையில் எத்தனை பேருக்கு உதவி இருக்கிறது.... ??

ஊடகங்களின் பிரத்யோக வெளிச்சம் தொடர்ந்து பாய்ந்ததால் இவர் சாமான்யனுக்கும் அறிமுகம் ஆகி இருந்தார்.. அதை தாண்டி ஒரு சாமான்யனின் வாழ்க்கையில் இவர் பங்கு என்னவென்று யோசித்தால் பெரும் சுழியமே விடையாக கிடைக்கிறது. ( எடைகுறைந்த செயற்கை கால்களை உருவாக்கினார் என்று சொல்வார்கள்.. ஆனால் எல்லா சாமான்யனும் மாற்றுத்திரனாளிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க)

மற்றபடி மத மாச்சர்யங்களை தொடாமல் மனிதனாய் வாழ்ந்தவர்... எதிர்காலத்தில் திறமையானவர்களையும்- நேர்மையானவர்களையும் கொண்ட நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றால் அது மாணவப்பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்... நிச்சயமாக இவரை போன்ற எண்ணம் கொண்ட நல்லவர்கள் கோடிபேர் இருக்கிறார்கள்... அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத அங்கீகாரமும் - வெளிச்சமும் கலாமிற்கு கிடைத்திருக்கிறது...

நிச்சயம் இவர் கொண்டாடப்பட வேண்டியவர்... போற்றப்பட வேண்டியவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை....
ஆனால்....ஆனால்....

ரூபாய் நோட்டில் இவர் புகைப்படம் அச்சிட வேண்டும்... இந்தியாவின் இன்னொரு மகாத்மா என்பதெல்லாம் எப்போதும் போல உணர்ச்சிக்கூவல் தான்...
தட்ஸ் இட்....

இத அன்னிக்கே சொல்லி இருந்தா பொங்கல் வச்சிருப்பீங்க.... இப்போதான் அடுப்பு அனைஞ்சிடுச்சே... நிதானமா யோசிக்கலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக