வியாழன், 29 ஜூன், 2017

எல்லா காதலிகளுமே அருகாமையில்

Image may contain: 1 personம்கூம்..... இப்போ அவ எங்க இருக்காளோ.... என்ற படி தன்னுடைய பள்ளி கால, பால்யகால காதலியை பற்றி பெருமூச்சோடு முனங்குவதெல்லாம் அடுத்த வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்றே தெரியாத நகர வாழ்க்கையிலோ.... அல்லது நாலைந்து வருடத்திற்கு ஒருமுறை வேறு வேறு ஊர்களில் குடி ஏறுபவர்களுக்கோ தான் சாத்தியம்...

எங்களை போன்ற கிராமவாசிகளுக்கு இது சற்றும் சாத்தியமில்லாத விஷயம்... விடலை பருவக் காதலோ.... விபரமறிந்த காதலோ.... தான் காதலித்த பெண் உள்ளூரிலோ, அக்கம்-பக்கம் பதினைந்து இருபது கிலோமீட்டர் சுற்றளிவிற்குள்ளோ தான் நடமாடி கொண்டிருப்பார்கள்..

சமகாலத்தில் சில பலர் வெளிநாடுகளுக்கு போயிருந்தாலும் கூட சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவுகள் உள்ளூரிலே தான் இருப்பார்கள்...


"நான் பத்தாம் வகுப்பு படித்தபோது காதலித்த கண்ணம்மா.... " என்று ஒரு பெண்ணின் பெயரை வெளிப்படையாக சொல்லி விட முடியாது.... அது சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் நம் வாயை கிழிக்கவோ, சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவன் அந்த பெண்ணின் நடத்தைய சந்தேகப்பட்டு பிரச்சினை செய்யவோ மட்டுமே வழிவகை செய்யும்.


சினிமாவில் காட்டுவதை காட்டிலும் கூடுதல் கிளுகிளுப்புடன் கிராமத்துக்காதல்கள் பல உண்டு..
சொல்லாத காதல்கள்.. சொல்லி ஏற்கப்படாமல் போன காதல்கள்.... ஏற்று சேர முடியாமல் போன காதல்கள்.... என எல்லா வெரைட்டியும் உண்டு... ஆனால்... இவற்றை எல்லாம் எங்கேயும் திறந்து சொல்ல முடியாது....

அவ்வப்போது மனதிற்குள்ளாகவே அசை போட்டுக்கொள்ளலாம்.... ஏற்றும் சேர முடியாமல் போன காதல்கள் என்றால்.. ஏதோ ஒரு இழவு வீட்டிலோ- கல்யாண வீட்டிலோ காணும்போது யாருக்கும் தெரியாமல் வலிகளையும்- ஏக்கங்களையும்-புன்னகைகளையும் பரிமாறிக்கொள்ளலாம்.... அவ்வளவுதான்...

எனக்கு கூட சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.... நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது உடன் படித்த .....................வி மீது நான் கொண்ட காதல்.... படிப்பிற்கு பாய் சொல்லிவிட்டு உள்ளூரிலேயே சுற்றிய காலத்தில் என் தூக்கம் களவாடிய...........தி மற்றும் ........................., .................., ............... இன்னும் சிலர்..


இவர்கள் எல்லோரும் நான் ஊருக்கு வரும் போதெல்லாம் ஏதோ ஒரு கல்யாண வீட்டிலோ, தெரு முனையிலோ, ஜவுளிக்கடையிலோ, கோயிலிலோ..மருத்துவமனையிலோ எங்கோ ஓர் இடத்தில் கண் முன்னால் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...

இப்படி சுவாரஸ்யமாய் பதிவிட நமக்கும் நிறைய ஆட்டோகிராப் இருந்தாலும்.... இப்போ இல்ல.. எத்தனை வயசு ஆனப்புறம் இதை வெளில சொன்னாலும் அதை ரசிக்கும் பக்குவமில்லாத அந்த பெண்களின் அண்ணன்/தம்பி பாகுபலிகள் என் வாயை உடைப்பார்கள்... என்பதால்...

இத்துடன் உரையை முடித்துக்கொள்கிறேன்...

சோடா....
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக